under review

64 சிவவடிவங்கள்: 26-பாசுபத மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 01:04, 8 October 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாசுபதம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாசுபதம் (பெயர் பட்டியல்)
பாசுபத மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று பாசுபத மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் இருபத்தி ஆறாவது மூர்த்தம் பாசுபத மூர்த்தி. கண்ணனும், அர்ஜுனனும் வேண்டியபடி பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள சிவபெருமானின் திருக்கோலமே பாசுபத மூர்த்தி.

தொன்மம்

பாரதப் போர் நடைபெற்ற சமயத்தில், அர்ஜுனனின் மகனான அபிமன்யு பத்ம வியூகத்தில் சிக்கிக் கொண்டான். அவனால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை. அவனைக் காப்பாற்றச் சென்ற தர்மன், ஜயத்திரதன் படைகளால் தடுக்கப்பட்டான். இறுதியில் ஜயத்திரதன், அபிமன்யுவைக் கொன்றான். அர்ஜுனன், “என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன்; அல்லவெனில் தீ மூட்டி அதனுள் பாய்ந்து உயிர் மாய்ப்பேன்” எனச் சபதம் செய்தான். அப்போது அர்ஜுனனின் மைத்துனனும், தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அர்ஜுனைத் தேற்றினான். அர்ஜுனன் பசியாறப் பழங்களைக் கொடுத்தான்.

அர்ஜுனன், “நான் தினமும் சிவபூஜை செய்பவன். சிவனைப் பூஜிக்காமல் உண்ணமாட்டேன்” என்றான். உடனே கண்ணன், “இன்று என்னையே சிவனாக எண்ணிப் பூஜிப்பாயாக” என்றான். அவ்வாறே அர்ஜுனனும் பூஜித்துப் பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான், ”அர்ஜுனா! ஜயந்திரதனை அழிக்க நாம் இருவரும் கயிலை சென்று சிவபெருமானை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விடலாம் வா” என்றான்.

அவ்வாறே அவர்கள் இருவரும் கயிலை சென்றனர். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ஜுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. அதனைக் கண்ட அர்ஜுனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் எதிரியை அழிக்க வல்ல பாசுபதத்தைக் கொடுத்தார். இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர். சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர்.

அர்ஜுனன் இவ்வாறு கனவு கண்டு உடன் கண் விழித்துப் பார்த்தான். அவனுடைய அம்பறாத்தாணியில் புது வகையான அம்பு (பாசுபதம்) இருப்பதைக் கண்டான். பின் மீண்டுமொரு முறை சிவபெருமானையும், கண்ணனையும் மானசீகமாக வணங்கினான். அர்ஜுனனும் அன்றே சிவபெருமான் அளித்த பாசுபதத்தினால், தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்திரதனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான்.

கண்ணனும், அர்ஜுனனும் வேண்டியபடி பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள சிவபெருமானின் திருக்கோலமே பாசுபத மூர்த்தி.

வழிபாடு

குடவாசல் அருகே உள்ளது கொள்ளம்புதூர். இங்குள்ள இறைவன் பெயர் வில்வவனநாதர்; இறைவி சௌந்தரநாயகி. இந்த தலத்தில் சிவன் பாசுபத மூர்த்தியாகவும், கிராத மூர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். இத்தல இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவித் தளையிலிருந்து விடுபட்டு இறைவனை அடையலாம். சிவப்பு நிற மலர் கொண்டு அர்ச்சனையும், மஞ்சளன்ன நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் செய்ய, எதிரிகள் நீங்குவர், கடன் தொல்லை தீரும். இங்குள்ள இறைவனை கும்பநீரால் அபிஷேகம் செய்யப் பிறவிப் பயன் எய்துவர் என்பது நம்பிக்கை.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:12:09 IST