under review

எம்.கே. ராதா

From Tamil Wiki
Revision as of 18:35, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ராதா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராதா (பெயர் பட்டியல்)
எம்.கே. ராதா

எம்.கே. ராதா (நவம்பர் 20, 1910 - ஆகஸ்ட் 29, 1985) தமிழ் நாடக நடிகர், திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தின் நிரந்தர நடிகராக இருந்தவர். ஜெமினியின் புகழ்பெற்ற சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் இரட்டை வேடப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

எம்.கே. ராதா சென்னை மைலாப்பூரில் எம். கந்தசாமி முதலியாருக்கு மகனாக நவம்பர் 20, 1910-ல் பிறந்தார். தன் சிறுவயதில் தாயை இழந்தார். தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். வடசென்னையிலுள்ள ஹிந்து பயாலஜிக்கல் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். நாடகத்தில் நாட்டம் கொண்டதால் பள்ளிக்கல்வியைத் தொடரவில்லை.

தனிவாழ்க்கை

எம்.கே.ராதா ஞானாம்பாள், ரத்தினம் ஆகிய இருவரைத் திருமணம் செய்து கொண்டார். ஞானாம்பாள் நடிகை. இவர்களுக்கு ஆறு மகன்கள், இரு மகள்கள். இளைய மகன் ராதா விஜயன் கிடார் இசைக்கலைஞர். எம்.ஜி.ஆர் இவரைத் தன் உடன்பிறவா அண்ணனாக நினைத்தார்.

நாடக வாழ்க்கை

எம்.கே. ராதா

எம். கந்தசாமி முதலியார் வீட்டில் நாடக ஒத்திகை நடக்கும் போது எம்.கே.ராதா ஆர்வத்துடன் அதைப் பார்ப்பார். வசனங்களை மனப்பாடம் செய்து தானே நடித்துப் பார்த்தார். பின்னர் தந்தையிடம் தன் நடிப்பு ஆர்வத்தை தெரியப்படுத்தி அவர் வேலைபார்க்கும் நாடகக் கம்பெனியிலேயே நாடக நடிகராகச் சேர்ந்தார். முதலில் லோகிததாஸ் வேடத்தில் நடித்தார். அதன்பின் நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஒன்பது வயதிலிருந்தே நாடகங்களில் நடித்தார்.

எம். கந்தசாமி முதலியார் பால ஷண்முகானந்தா சபையில் ஆசிரியராகச் சேர்ந்தபோது அங்கு சென்றார். இரத்தினாவளி நாடகத்தில் வசந்தனாக நடித்தார். பிரதாபசந்திரன் நாடகத்தில் தெலுங்கு பேசும் செட்டியாராக கதை நெடுகிலும் நடித்தார். கதையின் நாயகனாக நாடகங்களில் நடித்தார்.

திரை வாழ்க்கை

எம்.கே. ராதா இரட்டை வேடத்தில் (அபூர்வ சகோதரர்கள் படம்)

எம்.கே. ராதா ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராக இருந்தார். 1936-ல் எஸ்.எஸ். வாசன் எழுதிய 'சதிலீலாவதி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் எம்.ஜி.ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். இவ்வாறு எம்.ஜி. ராமச்சந்திரனை திரைத்துறைக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவராக எம்.கே. ராதா அறியப்பட்டார். தமிழ்த் திரையில் முதன்முதலாக இரண்டு கத்திகளை வைத்து, சண்டைக் காட்சிகளில் நடித்தவர் எம்.கே. ராதா.

பின்னர் 'மாயா மச்சேந்திரா', 'துளசிதாஸ்' ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து தவமணிதேவியுடன் வனமோகினி திரைப்படத்தில் நடித்தார். ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலிய படங்களில் நடித்தார். 1948-ல் ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் கதாநாயகனாக நடித்தார். அதன்பின் இரு இந்தி படங்களில் மட்டுமே நடித்தார். ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து விஜயன், விக்ரமன் என்ற இரட்டை வேடத்தில் நடித்தார். இது தமிழில் எடுக்கப்பட்ட முதல் இரட்டை வேடப்படம். ஜெமினியின் சம்சாரம் படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் அவ்வையார் திரைப்படத்தில் பாரி மன்னனாக நடித்தார். நல்லகாலம், போர்ட்டர் கந்தன், கற்புக்கரசி, வணங்காமுடி, பாசவலை, கண்ணின் மணிகள் முதலிய படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர், எம்.கே. ராதா காலில் விழுகிறார்

அதன்பின் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் ஆகிய இரு ஆளுமைகள் எழுந்து வந்ததால் மெல்ல இவரின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் குறையத் தொடங்கியது.

எம்.கே. ராதாவின் வனமோகினி விளம்பரம்

நடித்த திரைப்படங்கள்

  • சதிலீலாவதி (1936)
  • அபூர்வ சகோதரர்கள்
  • மாயா மச்சேந்திரா
  • துளசிதாஸ்
  • வனமோகினி
  • சந்திர மோகனா அல்லது சமுகத்தொண்டு (1936)
  • அனாதைப் பெண் (1938)
  • சதி முரளி (1940)
  • தாசி அபரஞ்சி (1944)
  • சந்திரலேகா (1948)
  • ஞானசௌந்தரி (1948)
  • அபூர்வ சகோதரர்கள்
  • சம்சாரம்
  • அவ்வையார்
  • சௌதாமணி (1951)
  • மூன்று பிள்ளைகள் (1952)
  • நல்லகாலம் (1954)
  • கிரகலட்சுமி (1955)
  • புதையல் (1957)
  • நீலமலைத்திருடன் (1957)
  • உத்தம புத்திரன் (1958)
  • நல்லகாலம்
  • போர்ட்டர் கந்தன்
  • கற்புக்கரசி
  • வணங்காமுடி
  • பாசவலை
  • கண்ணின் மணிகள்

விருதுகள்

  • 1973-ல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்
  • 2004-ல் இந்திய அஞ்சல் துறை எம்.கே. ராதா நினைவாக அவரது உருவப் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.
  • எம்.கே. ராதாவின் நினைவைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, சென்னை, தேனாம்பேட்டை அருகில் உள்ள பகுதிக்கு எம்.கே. ராதா நகர் என்று பெயரிட்டது.

மறைவு

எம்.கே. ராதா ஆகஸ்ட் 29, 1985 அன்று மாரடைப்பால் காலமானார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:57:32 IST