அ. இராமசாமி
- ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
அ. இராமசாமி (ஜூன் 23, 1923 - டிசம்பர் 6, 1982) எழுத்தாளர், காந்தியவாதி, இதழியலாளர், மேடைப்பேச்சாளர். காந்தி பற்றிய முக்கியமான நூல்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
அ.இராமசாமி மதுரைக்கு அருகில் உள்ள புதுத்தாமரைப்பட்டி கிராமத்தில் 1923-ல் பிறந்தார். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சரோஜா இராமசாமியை மணந்தார். இவர்களுக்கு ஆர்.அழகர்சாமி, ஆர்.மோகன்தாஸ், ஆர்.கௌதம நாராயணன், ஆர்.கார்த்திகேயன் ஆகிய நான்கு மகன்கள். மீனாட்சி என்ற மகள்.
காந்தியம்
அ. இராமசாமி காந்தியத்தில் ஈடுபாடு கொண்டார். கதராடை அணிந்தார். இதழியலில் பணிபுரிந்த பொழுது காந்தியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். N.M.R. சுப்புராமன் தலைமையில் தொடங்கப்பட்ட மதுரை காந்தி மன்றத்தின் செயலாளராக இருந்தார். மதுரை வைத்தியநாத ஐயர் தலைமையில் ஹரிஜன மாணவர் நலத்திற்காக 'ஹரிஜன சேவா சங்கம்' ஏற்படுத்தப்பட்டபோது அதன் சங்கத்தின் செயலாளராக பல ஆண்டுகள் இருந்தார்.
தமிழ் நாட்டிற்கும் காந்திக்கும் உள்ள தொடர்பை காந்தி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக 1966-ல் ஒரு நூல் வடிவில் கொண்டுவர இந்திய அரசு முடிவெடுத்தபோது தமிழ்நாட்டில் இந்நூலை எழுதுவதற்காக திரு.அ.இராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிமனிதராக காந்தி தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்களுக்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் சென்று மக்களை சந்தித்து செய்திகள் சேகரித்தார். 'தமிழ்நாட்டில் காந்தி' என்ற நூலை மூன்று ஆண்டுகளில் 1969-ல் எழுதி முடித்தார்.
இதழியல்
அ. ராமசாமி பத்திரிக்கையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய 1963-1966 ஆண்டுகளில் மதுரை காந்தி நினைவகம் நடத்தி வந்த 'கிராம இராஜ்யம்’ என்ற வார இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அ. இராமசாமி 1969-ல் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அந்த இதழின் ஞாயிறு பதிப்புடன் இணையாக வரும் 'தினமணி சுடரில்' தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அதில் குறிப்பிடத்தக்கது 'காந்தியும் குறளும்' என்ற கட்டுரைத்தொடர்.
இலக்கிய வாழ்க்கை
அ. இராமசாமி 'காமராஜர்', 'நேரு மாமா', 'விவேகானந்தரின் அடிச்சுவட்டில்', 'ஐக்கிய நாடுகள் சபை', எல்லையில் தொல்லை', 'ரமணரும் காந்தியும்', 'உணவுப் பிரச்சினை' ஆகிய நூல்களை எழுதினார்.
மறைவு
அ. இராமசாமி டிசம்பர் 6, 1982-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- தமிழ்நாட்டில் காந்தி
- காந்தியின் கட்டளைக்கல்
- காமராஜர்
- நேரு மாமா
- விவேகானந்தரின் அடிச்சுவட்டில்
- ஐக்கிய நாடுகள் சபை
- எல்லையில் தொல்லை
- ரமணரும் காந்தியும்
- உணவுப் பிரச்சினை
உசாத்துணை
இணைப்புகள்
- எஸ். ராமகிருஷ்ணன்: அமரர் அ.இராமசாமி அவர்களின் " தமிழ்நாட்டில் காந்தி" நூல் வெளியீட்டு விழா
- புதிய புத்தகம் பேசுது: டி.கே.ரெங்கராஜன், எம்.பி: தமிழ்நாட்டில் காந்தி: கீற்று
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Jul-2023, 16:17:35 IST