under review

64 சிவவடிவங்கள்: 53-கௌரி வரப்ரத மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 01:04, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கௌரி வரப்ரத மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கௌரி வரப்ரத மூர்த்தி

வடிவம்

64 சிவ வடிவங்களில் ஐம்பத்தி மூன்றாவது மூர்த்தம் கௌரி வரப்ரத மூர்த்தி. அசுரனை அழித்துவிட்டுப் பொன் நிறத்துடன் வந்த துர்கா தேவியைச் சிவபெருமான் கௌரியாக ஏற்றுக் கொண்டார். அந்தத் திருவடிவமே கௌரி வரப்ரத மூர்த்தி.

தொன்மம்

மந்திரமலையின் தவத்துக்கு இரங்கி அதன் வேண்டுகோளின்படி சிவபெருமான் தனது தேவியுடன் அங்கு சிறிது நாட்கள் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் பிரம்மாவை நோக்கி அசுரன் ஒருவன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் அவனுக்குக் காட்சி கொடுத்த பிரம்மாவிடம், பார்வதி தேவியின் உடலிருந்து தோன்றிய பெண்ணைத் தவிர வேறு யார் ஒருவராலும் எனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கினான். வரத்தின் பயனால் தேவர்கள், இந்த உலகத்தில் இருப்பவர்கள் என யாரும் தன்னை அழிக்க முடியாது என்று ஆணவம் கொண்டு அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான்.

அசுரனின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவனது கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டனர்.. பிரம்மா தேவர்களுடன் சிவபெருமானிடம் சென்று அசுரனை அழிக்கும்படி வேண்டிக் கொண்டார்.

சிவபெருமான் உடன் பார்வதி தேவியைப் பார்த்து ’காளியே வருக’ என்றார். உடனே பார்வதி தேவியின் உடலில் இருந்து கருமையான நிறத்துடன் காளி தேவி வெளிப்பட்டாள். சிவபெருமானிடம் ’எம்மை அழைத்த காரணம் என்ன?’ என்று கேட்டு, தனது கருமை நிறத்தைப் பொன்னிறமாக மாற்றிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்குச் சிவபெருமான், காளியிடம், ‘இமயமலையில் தவமியற்று. அனைத்திற்கும் காரணம் உனக்கே தெரியும்’ என்றார்.

அவ்வாறே காளிதேவியும் இமயமலையில் தவம் செய்தாள். தவத்தின் பலனால் தேவி தனது கருமை நிறம் நீங்கி பொன் நிறத்தைப் பெற்றாள். பொன் நிறத்துடன் இருந்த தேவியிடம் சிம்ம வாகனத்தைக் கொடுத்த பிரம்மா, அசுரனை அழிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

பொன் நிறத்துடன் சிம்ம வாகனத்தில் சென்று அசுரனை அழித்தார் தேவி. அதனால் தேவியானவள் ’கனக துர்கா தேவி’ எனப் பெயர் பெற்றாள். தனது போர்க்கோலம் நீக்கி,. பொன் நிறத்துடன் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்.

சிவபெருமானின் ஆசியுடன் கௌரி எனப் பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் வந்த தேவியைச் சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். அந்தத் திருவடிவமே கௌரி வரப்ரத மூர்த்தி.

வழிபாடு

காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் கௌரி வரப்ரத மூர்த்தியாக சிவன் காட்சியளிக்கிறார். அங்கு கோயில் கொண்ட இறைவன் ஏகாம்பரேஸ்வரர், இறைவி ஏலவார்குழலி . மூலவர் மணலால் ஆனவர். உமாதேவி இங்குள்ள கம்பை நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டார். இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி இறைவன், இறைவியை வழிபட கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும், தோல் வியாதி குணமடையும் என்பது ஐதீகமாக உள்ளது. வெள்ளிக்கிழமையில் இங்குள்ள இறைவனுக்கு வில்வார்ச்சனை செய்து, பழவகை நைவேத்தியம் அளித்து நெய் விளக்குப் போட, மாங்கல்ய பலம் கூடும்; மக்கட் பேறு உண்டாகும்; தம்பதியர் ஒற்றுமை ஓங்கும் என்பதும் மக்கள் நம்பிக்கையாக உள்ளது..

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2024, 18:57:38 IST