64 சிவவடிவங்கள்: 52-ஏகபாத மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஏகபாத மூர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பத்தியிரண்டாவது மூர்த்தம் ஏகபாத மூர்த்தி. அனைத்து உலகமும் சிவபெருமானின் திருவடியின் கீழ் இருப்பதால் அவர் ஏகபாத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
இவர், வலது கரத்தில் சூலத்துடனும் இடது கரத்தில் மழுவுடனும் முன் வலக்கையில் காக்கும் குறிப்புடனும், இடக்கையில் அருளல் குறிப்புடனும் காட்சி தருபவர். புலித்தோலை அணிந்து மணிகளால் ஆன மாலைகளை அணிந்து சடையில் சந்திரனையும் கங்கையையும் அணிந்து காணப்படுவார்.
தொன்மம்
சைவ மார்க்கத்தின்படி எங்கும் நீக்கமற நிறைந்த சிவபெருமான் அனைத்து ஆன்மாக்களிலும் ஆணவம் மட்டும் நிலையாக இருப்பதை அறிந்தார். அதனை அகற்ற ஞானத்தை கொடுத்து அதன் மூலமாக ஆணவம், கன்மம், மாயையை அகற்றி இறுதியில் தூய்மையாகத் தன்னை வந்தடையும்படி செய்தார்.
அதற்காகப் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என ஐந்து வகையான தொழில்களைச் செய்து வந்தார். ஊழிக்காலத்தில் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அவரிடம் ஒடுங்க, அவர் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். சிவபெருமான் மட்டுமே என்றும் அழியாமல் இருப்பார்.
எத்தனை ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் சிவபெருமானிடம் இருந்தே ஆரம்பிக்கின்றன, அவரிடமே முடிகின்றன. அவர் தனியானவர் முதன்மையானவர். அவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. அவரிடமே தஞ்சமடைகின்றன. அனைத்து தேவர்களும், மூர்த்திகளும் அவரை வணங்கியே அனைத்து வகையான செல்வங்களையும் பெற்றனர். அவரே உலகின் முதல்வராகவும், முதன்மையானவராகவும் உள்ளார். அனைத்துக் காலங்களிலும், எல்லாவுலகமும் சிவபெருமானின் திருவடியின் கீழ் இருப்பதால் அவர் ஏகபாத மூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
வழிபாடு
திருவாரூர் அருகில் உள்ள தப்பளாம்புலியூரில் திருவாரூர் அருகில் உள்ள தப்புளாம்புலியூர் கோயிலில் ஏகபாத மூர்த்திக்கு தனிச் சந்நிதி உள்ளது. அவரைச் செந்தாமரையால் அர்ச்சித்து, நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலை திங்கள்தோறும் அளித்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் விரைவில் கூடிவரும் என்பதும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2024, 19:09:02 IST