அண்டர் மகன் குறுவழுதியார்
அண்டர் மகன் குறுவழுதியார் சங்க காலப் புலவர், பாண்டிய மன்னர். இவர் எழுதிய பாடல்கள் சங்கத்தொகை நூலகளான அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
’வழுதி’ என்பது பாண்டியரையும், ‘அண்டர்’ என்பது ஆயர் என்பதையும் குறிக்கிறது. இவரது பெயர் குறுவழுதியார் என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் என்றும், அண்டர் மகன் குறுவழுதி என்றும் சங்கப் பாடல்களில் உள்ளது. இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியதை இவரது பெயர் குறிக்கிறது. பாண்டியர் குடியும் ஆயர் குடியும் நெருங்கிய தொடர்பிலிருந்ததை முல்லைக்கலியின் நான்காவது பாடல் குறிக்கிறது.
இலக்கிய வாழ்க்கை
அகநானூறு (150); அகநானூறு (228); குறுந்தொகை (345); புறநானூறு (346) ஆகிய சங்கப்பாடல்களை இவர் பாடினார். குறிஞ்சி நிலத்தைப் பற்றிய சித்திரம், பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.
பாடல் நடை
- அகநானூறு 150
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
'வாரார்கொல்?' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!
- அகநானூறு 228
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி,
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே.
- குறுந்தொகை 345
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர்
வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத்
தங்கினி ராயின் தவறோ தெய்ய
தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத்
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே.
- புறநானூறு 346
பிறங்கிலை இனியுள பாலென மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
ஒள்வேல் நல்லன்; அதுவாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும்இவள் நலனே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3
- http://www.diamondtamil. அகநானூறு 150
- தமிழ்ச்சுரங்கம் அகநானூறு -228
- http://www.diamondtamil.com குறுந்தொகை 345
✅Finalised Page