64 சிவவடிவங்கள்: 42-வீரபத்ர மூர்த்தி
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று வீரபத்ர மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் நாற்பத்தி இரண்டாவது மூர்த்தம் வீரபத்ர மூர்த்தி. அசுரனாகிய வீரமார்த்தாண்டனை அழிக்கச் சிவபெருமான் எடுத்த திருக்கோலமே வீரபத்ர மூர்த்தி. எட்டு கரங்களில் சூலம், வாள், கேடயம், வில், அம்பு, கபாலம் போன்றபற்றை ஏந்தி, தழல் மகுடத்துடன் பாம்பை உபவீதமாக அணிந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
தொன்மம்
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பகை என்பதால் எப்போதும் அவர்கள் போரிட்டுக் கொண்டே இருப்பர். ஒரு சமயம், தேவர்கள், இந்திரனின் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்று அவர்களது உடல் உறுப்புக்களைத் துண்டித்தனர். அசுரர்கள் தேவர்களை வெற்றி கொள்ள முடியாமல் தங்கள் குருவான சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசித்தனர். அவர் ஆலோசனைப்படி அசுரர்களில் ஒருவனான வீரமார்த்தண்டன் என்பவன் பிரம்மாவை வேண்டிக் கடும் தவம் செய்தான்.
தவத்தின் கடுமை தாங்காத நான்முகன் அசுரனுக்குக் காட்சிக் கொடுத்தார். தவத்தினால் எலும்பும், தோலுமான வீரமார்த்தண்டனை பழையபடி ஆக்கினார். பின் என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார். வீரமார்த்தண்டன், மூன்று உலகங்களையும் என்னை வெல்ல யாருமில்லாதபடி நான் அரசாள வேண்டும் என்ற வரம் வேண்டினான். பிரம்மாவும் அவ்வாறே அருளிச் செய்தார்.
வரம் பெற்ற வீரமார்த்தாண்டன் பெரும் ஆணவத்துடன் தேவர்களை, தேவப் பெண்டிரைத் துன்புறுத்தினான். மிகக் கடுமையான துன்பங்களை தேவருக்குச் செய்தான். தேவர்களுக்கு அசுரன் செய்த கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, பொறுக்கமுடியாத தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர்.
சிவபெருமான் அவர்களுக்கு ஆறுதல் கூறித் தன்னிலிருந்து வீரபத்திரரைப் படைத்தார். அவரை வீரமார்த்தாண்டனுடன் போரிட அனுப்பினார். வீரபத்திரர் முதலில் வீரமார்த்தண்டனின் படைபலங்களை அழித்தார். பின்னர் வீரமார்த்தண்டனுடன் போரிட்டார். மிகக் கடுமையான அப்போரில் வீரமார்த்தண்டன் பலவிதமான மாயைகளைச் செய்து தப்பிக்கப் பார்த்தான். இறுதியில் வீரபத்திரரால் அழிக்கப்பட்டான்.
சிவபெருமான் இந்திரன், நான்முகன் என அனைவரையும் அவரவர் பதவியில் அமர்த்தி, உலக உயிர்கள் அனைத்திற்கும் சுகவாழ்வளித்தார். வீரமார்த்தண்டனைக் கொன்று தேவர்களின் துயர்துடைக்கச் சிவபெருமான் கொண்ட கோலமே வீரபத்திர மூர்த்தி.
வழிபாடு
தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் வீரபத்திரருக்குச் சன்னதி உள்ளது. காரைக்கால் அருகே அமைந்துள்ள பெருந்துறையில் வீரபத்திர மூர்த்தி சிறப்புடன் வழிபடப்படுகிறார். சித்திரை மாதச் செவ்வாய்கிழமைகளில் வீரபத்திர விரதம் மேற்கொண்டு வழிபடுதல் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவரை செந்நிற மலர் கொண்டு அர்ச்சித்து, புளி சாத நைவேத்தியம் அளித்து, திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் வழிபட சகோதரபாசம் கூடும்; குடும்ப ஒற்றுமை நீடிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.