under review

64 சிவவடிவங்கள்: 36-காமதகன மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 23:14, 22 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காமதகன மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று காமதகன மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் முப்பத்தி ஆறாவது மூர்த்தம் காமதகன மூர்த்தி. மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காமதகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. யோக மூர்த்தியாக இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்ட கோலத்தில் மூன்று கண்கள், நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அம்பை எய்யும் நிலையில் மன்மதனும், தவம் செய்யும் பார்வதி தேவியும் காணப்படுகின்றனர்.

தொன்மம்

பார்வதி தேவி, பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானைக் கணவனாக எண்ணி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார். கயிலையில் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி அந்நிலையிலேயே ஆழ்ந்திருந்தார். அதனால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோகநிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது, நான்முகனின் படைப்புத் தொழிலும் நின்றது.

இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானைப் பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவரை வேண்டினர். நந்திதேவர் மறுத்திடவே அனைவரும் சிவத் தியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி, ’பார்வதியைத் திருமணம் செய்வோம். எங்கள் மகனால் இத்துயரம் தீரும்’ என்றுரைத்தார். பின்னர் இந்திரன் அனைத்து தேவர்குழாமுடன் சென்று நான்முகனிடம் ஆலோசனை கேட்க, நான்முகனோ, ’மன்மதன், சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும்’ என்று ஆலோசனைக் கூறினார். அனைவரும் மன்மதனை அழைத்தனர்.

மன்மதனும் அங்கு வந்தான். ஆனால், சிவபெருமான் மீது பாணம் விட மறுத்தான். இறுதியில் உலக நன்மைக்காக ஒப்புக் கொண்டான். அவனை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளே அனுப்பினார். அவனும் யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் சென்றான். சென்றவுடன் அவர் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்து போனான்.

சிவபெருமான் பின்னர் பர்வத மலைக்குச் சென்று பார்வதி தேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவன் மன்மதனைத் திரும்ப உயிருடன் மீட்டுத் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சிவனின் அருளால் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்தான். சிவனின் உத்தரவுப்படி ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர் கண்களுக்கு அரூபமாகவும் தோற்றமளித்தான். மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காமதகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது,

வழிபாடு

காமதகன மூர்த்தி

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் காமதகனமூர்த்தியின் சுதைச்சிற்பம் உள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள குறுக்கையில் (திருக்குறுக்கை, கொருக்கை) சிவபெருமான் காமதகன மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் அளவுக்கதிகமான காம உணர்வு அடங்கும் என்றும், தேனாபிஷேகமும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் ஞாயிற்றுக்கிழமைகளில் அளித்து வழிபட, உடன் பிறந்தோருடைய அன்பு மேலோங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2024, 08:53:26 IST