64 சிவவடிவங்கள்: 29-பிட்சாடன மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று பிட்சாடன மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் இருபத்தி ஒன்பதாவது மூர்த்தம் பிட்சாடன மூர்த்தி. தாருகாவனத்து முனிவர்கள் ஆணவத்தை அடக்கவும், முனிபத்தினிகளின் கற்பைச் சோதிக்கவும் சிவபெருமான் எடுத்த திருக்கோலமே பிட்சாடன மூர்த்தி. பாதங்களில் பாதக்குறடும், , வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பிட்சாடன மூர்திதி(பலிதேர்பிரான்) காட்சியளிக்கிறார்.
பிட்சாடன மூர்த்தி ஆடையில்லாத மேனியராக, சிவனுக்குரிய சகலாபரணங்களும் அணிந்திருப்பார். கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் ஏந்தி, பூதகணம் தம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன் பின் தொடரச் செல்வார். அருகில் ரிஷி பத்தினி நின்றிருப்பார். இடையில் சர்ப்ப மேகலை அணிந்திருப்பார் (திருவாமாத்தூர்)
தொன்மம்
தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள் சிலர், தெய்வங்களை விடத் தாங்கள் சொல்லும் மந்திரங்களும், தாங்கள் செய்யும் யாகங்களுமே உயர்ந்தவை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அதனால் சிவன் உள்ளிட்ட தெய்வங்களை மதிக்காமல் ஆணவத்துடன் செயல்பட்டனர். அவர்களது துணைவியர்களோ இறைவனை விடத் தங்களது கற்பே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு நல்லறிவைப் புகட்ட எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்க வைத்து, தாமும் பிட்சாடனர் அவதாரம் எடுத்தார். உடலில் துணியின்றி நிர்வாணமாக, வலது கையில் திருவோட்டுடன் மோகினி பின்தொடர தாருகாவனத்தை அடைந்தார். அங்குள்ள ரிஷிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடியவாறே பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த ரிஷி பத்தினிகள், பிட்சாடனரின் அழகில் மயங்கினர். அவர் மீது அளவற்ற மோகம் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களது கற்பு களங்கமுற்றது.
அதே போல் ரிஷிகள் யாகம் செய்யும் இடத்திற்குச் சென்ற மோகினியின் அழகில் ரிஷிகள் மயங்கினர். தாங்கள் செய்துகொண்டிருந்த யாகங்களை நிறுத்திவிட்டு, மோகினியைப் பின் தொடர்ந்தனர். மோகினியைப் பின் தொடர்ந்த ரிஷிகள் பிட்சாடனரை வந்தடைந்ததும், அங்கே தங்களின் மனைவியர்கள் அனைவரும் அவரது பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அறிய விரும்பினர். சிவபெருமானே காரணம் என்பதை அறிந்தனர்.
மோகினியான திருமாலும், பிட்சாடனரான சிவபெருமானும் திருத்தளிச்சேரி எனும் ஊரில் மறைந்தனர்.
அதனால் சிவபெருமானை அழிக்க எண்ணிய முனிவர்கள் அபிசார யாகம் இயற்றி, அதிலிருந்து வெளிவந்த பொருள்களைச் சிவபெருமானைக் கொல்ல ஏவினர். ஆனால் அவர் அவற்றையெல்லாம் ஆடையாகவும், ஆபரணமாகவும் அணிந்து கொண்டார். இறுதியில் ரிஷிகள் மற்றும் ரிஷி பத்தினிகளின் ஆணவம் அழிவுற்றது.
தாருகாவன முனிவர்களின் தவத்தையும், முனிபத்தினிகளின் கற்பையும் சோதிக்கச் சிவபெருமான் எடுத்த உருவமே பிட்சாடன மூர்த்தி
வழிபாடு
மயிலாடுதுறையருகே உள்ள வழுவூரில் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான் பிட்சாடனராக எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது. சோழர் கோயில்களில் திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் ஆகிய கோயில்களில் பிட்சாடனர் உலோகத் திருமேனியராக விளங்குகிறார். பிட்சாடன மூர்த்தி வழிபாடு பேரின்பமும், விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையும் தரும் என்பது ஐதீகம். சந்நியாசிகளும், முனிவர்களும், ரிஷிகளும் இந்தப் பிட்சாடனரை மனப்பூர்வமாக வணங்கினால் சித்திகள் கிடைக்கும் என்றும், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தேங்காய் நைவேத்தியமும் எதிரிகளின் தொல்லையை நீக்கி, யாரையும் வெல்லும் வசியம் உண்டாகும் என்றும் அன்னாபிஷேகம் நற்பேற்றை அளிக்கும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:07:56 IST