64 சிவவடிவங்கள்: 28-கேசவார்த்த மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கேசவார்த்த மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் இருபத்தி எட்டாவது மூர்த்தம் கேசவார்த்த மூர்த்தி. திருமாலாகிய கேசவன் பாதியாகவும், சிவன் பாதியாகவும் காட்சி அளிக்கும் திருக்கோலமே கேசவார்த்த மூர்த்தி. சங்கர நாராயணன் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
தொன்மம்
முன்னொரு காலத்தில் திருமால், சிவபெருமானை நோக்கித் தவமியற்றினார். சிவபெருமான், திருமாலின் தவத்தினால் மெச்சி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். உடன் திருமால், தேவர்களும், அசுரர்களும் மயங்கத்தக்க மாயை தனக்கு வேண்டுமென்றும், தேவர்களாலும் அழிக்கமுடியாதபடியான வல்லமை தனக்கு வேண்டுமென்றும் கேட்டார். சிவபெருமான், திருமால் கேட்ட வரங்களைத் தந்துவிட்டு திருமாலை ’மாயன்’ என அழைத்தார். நீயே என் இடப்புறமாக இருப்பாய் என்று கூறி மறைந்தார். அத்தகைய வரம்பெற்ற திருமாலே பெண் வடிவில் பராசக்தி, பார்வதியாகவும், ஆண் வடிவில் திருமாலாகவும், கோபமுற்ற நிலையில் காளியாகவும், போர்க் காலங்களில் துர்க்கையாகவும் விளங்குகிறார்.
ஒருமுறை உமாதேவியார் சிவபெருமானைக் குறித்து சோமவார விரதம் மேற்கொண்டார். விரதம் முடிந்து அன்னதானம் நடைபெறும் போது அவரது தவச் செயலை நேரில் காண சிவபெருமான் வேதியராகவும், அவரருகே பெண்ணுருவில் திருமாலும் தவச்சாலைக்கு வந்தனர். பின் விரதத்திற்கு மகிழ்ந்து இருவரும் தங்கள் சுயரூபம் காட்டினர்.
சிவம் வேறு, திருமால் வேறல்ல. திருமாலே சிவசக்தி. ஆண்பாகம் வலதாகவும் பெண்பாகம் இடதாகவும் உள்ள காரணத்தால் சிவனிலிருந்து பிரிந்தவராகத் திருமால் உள்ளார். வலப்புறம் மான், மழு தாங்கியுள்ளவர் சிவனென்றும், இடப்புறமாக சக்கராதாரியாக உள்ளவர் திருமாலென்றும் அவ்விருவரும் இணைந்துள்ள கோலம் சங்கர நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு திருமாலாகிய கேசவன் பாதியாகவும், சிவன் பாதியாகவும் உள்ள திருக்கோலமே கேசவார்த்த மூர்த்தி.
வழிபாடு
சிவனும், திருமாலும் இணைந்து சங்கர நாராயணனாக, திருநெல்வேலி அருகே உள்ள சங்கரன் கோவில் தலத்தில் காட்சி அளிக்கின்றனர். இங்குள்ள இறைவன் பெயர்: சங்கர நாராயணன். இறைவி: கோமதியம்மை. இங்குள்ள இறைவனை வேண்ட எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது, முழுக்குணம் பெற்றதும் பாதிக்கப்பட்ட பகுதியைப்போன்றே உலோகத்தில் செய்த அங்கப்பொருட்கள் உண்டியலில் சேர்க்கப்படுகின்றன. கோமதியம்மை சன்னதியில் கருங்கல் தரையில் ஆறு அங்குல வட்டமுடைய அமைப்பு உள்ளது. அங்கு வேலப்ப தேசிகர் பதித்த சக்கரம் உள்ளது. அதில் அமர்ந்து தியானம் செய்ய மனம் ஒருமைப்படும் எனப்படுகிறது. மனநலம் பாதித்தவர்களை இந்த சக்கரத்தின்மேல் அமரவைக்கும் வழக்கம் உண்டு. இங்கு புற்றுமண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், புதன் அல்லது சோமவாரங்களில் செய்ய மோட்சம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. இங்குள்ள தெப்பக் குளத்தில் உள்ள மீனிற்குப் பொரியும், யானைக்கு வெல்லமும் கொடுக்கும் வழக்கம் உண்டு. உடல் ஊனமுற்ற சாதுக்களுக்கு அன்னதானம் செய்து இறைவனை வணங்கினால் கடுமையான நோய் விலகும் என்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page