64 சிவவடிவங்கள்: 21-கல்யாணசுந்தர மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கல்யாணசுந்தர மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் இருபத்தோராவது மூர்த்தம் கல்யாணசுந்தர மூர்த்தி. பார்வதி தேவியைத் திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த திருக்கோலமே கல்யாணசுந்தர மூர்த்தி என அழைக்கப்படுகிறது.
தொன்மம்
திருக்கயிலையில் அனைத்து தேவர்குழாமுடன் சிவபெருமான் வீற்றிருக்கையில், பார்வதி தேவி இறைவன் முன் சென்று, “தக்கன் மகளால் தாட்சாயிணி என்ற பெயர் பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்றத் தங்கள் தயவு வேண்டும்” என்று வேண்டினார். உடன் சிவபெருமானும், “பார்வதி, பர்வத மன்னன் உன்னை மகளாக அடைய தவம் இயற்றுகிறான். நீ அவனிடம் குழந்தையாகப் பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன்” என்றார்.
அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று வயதுள்ள குழந்தையாக வந்து சேர்ந்தார் அன்னை பார்வதி. அக்குழந்தையை அவர்கள் சீராட்டி வளர்த்தனர்.
பார்வதிதேவி அருகில் இல்லாததால் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின் ஆலோசனைப்படி மன்மதன் சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க பாணம் விட்டான். இதனால் கோபமுற்ற சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்துபோனான். இதனால் கவலையுற்ற ரதி சிவனிடம் விண்ணப்பித்தார். சிவனுன் ரதியைச் சிலகாலம் பொறுத்திருக்கும்படி கூறினார்.
இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத் தோன்றி தன்னை மணம் புரியும்படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து சிவபெருமானை மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சி கொடுத்தார். ’விரைவில் வந்து மணம் புரிவேன்’ என்று கூறி மறைந்தார். பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார்.
சிவபெருமான், சப்தரிஷிகளிடம் தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார். இரு வீட்டாரும் பேசித் திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாகக் குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான் அகத்திய முனிவரைத் தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும், ‘உமக்கு எம் திருமணக் கோலத்தைக் காட்டுவோம். எனவே தென்திசை செல்க என்று உறுதி கூறினார். அவ்வாறே அகத்தியரும் தென்திசை நோக்கிச் சென்றார். உலகம் சமன்பட்டது. உடன் சிவ - பார்வதி திருமணமும் நடைபெற்றது.
அப்பொழுது ரதி, தனது கணவனை உயிர்ப்பிக்குமாறுச் சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அரூபமாகவும் காட்சியளிக்கும் படி அருள்புரிந்தார். இவ்வாறு பார்வதி தேவியைத் திருமணம் செய்வதற்காகச் சிவபெருமான் எடுத்த திருக்கோலமே கல்யாணசுந்தர மூர்த்தி என அழைக்கப்பட்டது.
வழிபாடு
திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையில் கல்யாணசுந்தர மூர்த்தி உற்சவராகக் காட்சி அளிக்கிறார். மூலவர் விழியழகர். அம்பாள் சுந்தர குஜாம்பிகை. மூலவரின் பின்புறம் சிவபெருமான்-உமை திருமணக்கோலம் செதுக்கப்பட்டுள்ளது. கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த மாங்கல்யத்தைத் தானமாகப் பெற்றாலோ, கொடுத்தாலோ தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இங்கு பிரதோஷ தரிசனம் சிறப்பானது. திங்கள், குருவாரங்களில் மல்லிகைப்பூ அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திருமணத்தடையை விலக்கும் என்றும் கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கும் என்றும், கல்யாண சுந்தரருக்கு ரோஜா மாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் இளம்பெண்களுக்குத் திருமணம் கூடி வரும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள கோயிலிலும் சிவன் கல்யாண சுந்தர முர்த்தியாகக் காட்சியளிக்கிறார். பல சிவன் கோயில்களில் மூலவருக்குப் பின்புறம் கல்யாணசுந்தர மூர்த்தியின் சுதைச்சிற்பம் உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 19:06:34 IST