64 சிவவடிவங்கள்: 14-புஜங்கத்ராச மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று புஜங்கத்ராச மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் பதினான்காவது மூர்த்தம் புஜங்கத்ராச மூர்த்தி. பாம்புகளுக்கு அஞ்சுவது போல நடித்து பாம்பை அடக்கி தனக்கு ஆபரணங்களாக ஏற்றுக் கொண்ட சிவ வடிவமே புஜங்கத்ராச மூர்த்தி. இடுப்பிலும், காலகளிலும், கைகளிலும் ஆபரணங்களாக பாம்புகளை அணிந்தவராக சிவன் காட்சி தருகிறார்.
தொன்மம்
தில்லைவனத்தைச் சுற்றியிருந்த தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகள் சிலர், தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்களும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு, தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும், இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்றும் செருக்குடன் இருந்தனர். அவர்களது துணைவியர்களோ இறைவனை விடத் தங்களது கற்பே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு நல்லறிவைப் புகட்ட எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்க வைத்து, தாமும் பிக்ஷாடனர் அவதாரம் எடுத்தார். உடலில் துணியின்றி நிர்வாணமாக, வலது கையில் திருவோட்டுடன் மோகினி பின்தொடர தாருகாவனத்தை அடைந்தார். அங்குள்ள ரிஷிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று பிக்ஷை கேட்டார். பிக்ஷை போட வெளியே வந்த ரிஷி பத்தினிகள், பிக்ஷாடனரின் அழகில் மயங்கினர். அவர் மீது அளவற்ற மோகம் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
அதே போல் ரிஷிகள் யாகம் செய்யும் இடத்திற்குச் சென்ற மோகினியின் அழகில் ரிஷிகள் மயங்கினர். தாங்கள் செய்துகொண்டிருந்த யாகங்களை அப்படியே நிறுத்திவிட்டு, மோகினியைப் பின் தொடர்ந்து சென்றனர்.
மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்ஷாடனரை வந்தடைந்ததும், அங்கே தங்களின் மனைவியர்கள் அனைவரும் பிக்ஷாடனரது பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மோகினியின் மீதிருந்த மயக்கம் நீங்கினர். தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் கண்டு, தாங்க முடியாத கோபம் கொண்டு, மோகினியையும் பிக்ஷாடனரையும் பலவிதங்களில் சபித்தனர். அவர்கள் சாபம் எதுவும் செயல்படாததால் மேலும் சினமுற்ற அவர்கள், தங்களின் மந்திரங்களால் யாகம் வளர்த்துப் பல கொடிய பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவன் அவற்றையெல்லாம் உடை, சிலம்பு, ஆயுதம், மாலை, சேனை என்று உருமாற்றித் தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த ரிஷிகள் பெரும் கோபம் கொண்டனர். கடும் விஷங்களைக் கொண்ட பஞ்ச நாகங்களை உருவாக்கி பிக்ஷாடனரை நோக்கி ஏவினர்.
சிவபெருமானை நோக்கி அப்பாம்புகள் கடும் விஷத்துடன் சீறிப் பாய்ந்து வந்தன. சிவன் பாம்பிற்குச் சிறிது அஞ்சுவதுபோல் நடித்துவிட்டு பஞ்ச நாகங்களில் ஒன்றைத் தன் இடுப்பில் ஆரமாகவும் (அரைஞாண் கயிறு), இரண்டு பாம்புகளைக் கை வளை மற்றும் காப்பாகவும், இரண்டை கால்களில் சிலம்பாகவும் அணிந்து கொண்டார். இவ்வாறு பாம்புகளைத் தனது ஆபரணமாக ஏற்றுச் சிவபெருமான் காட்சி அளித்த உருவமே புஜங்கத்ராச மூர்த்தி. (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)
வழிபாடு
கல்லணை அருகே உள்ள திருப்பெரும்புலியூர் தலம், புஜங்கத்ராச மூர்த்திக்குரிய தலமாக அறியப்படுகிறது. ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவற்றுக்கான நிவாரண தலமாகக் கருதப்படுகிறது. கடன் தீர்வதற்காக வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் செய்யப்படுகின்றன.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:58:28 IST