under review

64 சிவவடிவங்கள்: 13-புஜங்கலளித மூர்த்தி

From Tamil Wiki
Revision as of 01:03, 10 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
புஜங்கலளித மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று புஜங்கலளித மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் பதிமூன்றாவது மூர்த்தம் புஜங்கலளித மூர்த்தி. புஜங்கம் என்றால் பாம்பு. லளிதம் என்றால் அழகு, ஆபரணம் என்று பொருள். பாம்புகளுக்கு அபயமளித்து, பாம்பை தனக்கு அழகான ஆபரணமாக அணிந்ததினால் சிவபெருமான் இப்பெயரைப் பெற்றார்.

தொன்மம்

காசியப முனிவரின் மனைவிகள், கத்துரு, வினந்தை. இவர்களுக்கு தங்களில் ’யார் மிக அழகானவர்’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற முடிவும் ஏற்பட்டது. இருவரும் முடிவு வேண்டித் தங்கள் கணவரான காசியபரை நாடினர்.

காசியபர், ’கத்துருவே அழகி’ என்று தீர்ப்பளித்தார்.. இதன் விளைவாக வினந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.

வினந்தையின் இளைய மகன் கருடன் இச்செய்தியை அறிந்து, தன் தாய் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என தன் பெரியம்மா கத்துருவிடம் கேட்டார். அதற்குக் கத்துரு, ‘தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டு வந்தால் உன் தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கிறேன்’ எனக் கூறினார்.

உடன் கருடன் தேவலோகம் சென்று, அமிர்த கலசத்தைக் காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு அமிர்த கலசத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அப்போது திருமால், கருடனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த போரில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால், ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்று கேட்டார். உடன் கருடன் ஆணவத்துடன், ‘நீ யார் எனக்கு வரம் தருவதற்கு? நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள்!’ என ஆணவத்துடன் கூறினார். உடன் திருமால், ‘பாம்புகளுக்கு அமிர்தம் கொடுக்க கூடாது. நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும்’ என இரு வரங்களைக் கேட்டார்.

உடன் கருடன் தன் அகந்தை அழிந்து, திருமாலை வணங்கி அமிர்தத்தைப் பெற்று தன் அன்னையை அடிமைத் தளையிலிருந்து மீட்டார். தன்னிடம் இருந்த அமிர்தத்தை பாம்புகளுக்குக் கொடுக்காததினால் பாம்புகளின் பகைவனாக கருதப்பட்டார். சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றுப் பின்னர் திருமாலின் வாகனமானார்.

கருடன், தங்களுக்கு அமிர்தம் கொடுக்காததினால் கோபம் கொண்ட நாகங்கள், சிவபூஜை செய்து தங்களுக்கு அழியாப் புகழும், கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் என்று வேண்டின. உடன் சிவபெருமானும் அவ்வாறே வேண்டிய வரத்தைக் கொடுத்தார். நாகங்களைத் தன்னுடலில் ஆபரணமாக அணிந்து கொண்டார். பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. நாகங்களைக் கையில் ஏந்தி சிவபெருமான் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாக அறியப்படுகிறது.

வழிபாடு

கல்லணை அருகே உள்ள திருப்பெரும்புலியூரில் வியாக்ரபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவன் புஜங்கலளித மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். அம்பாள் சௌந்திரநாயகி. இத்தலத்தில் வழிபாடு செய்தால் ராகு கிரகத் தொல்லைகள் நீங்கும் என்றும், நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் நைவேத்தியமும் சோமவாரங்களில் செய்ய காலசர்ப்ப தோஷம் நீங்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இறைவன், இறைவிக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்ய காலசர்ப்ப தோஷம், ராகு தோஷம் நீங்கும் என்ற ஐதீகமும் உண்டு.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:57:14 IST