கண்டராதித்தன்
கவிஞர் கண்டராதித்தன் (நவம்பர் 8, 1972) நவீன தமிழ் கவிஞர்களில் மரபோடு சார்ந்த கவிதைளை எழுதும் கவிஞர். இவருடைய கவிதைகள் பெரும்பாலும் பக்தி மரபுகளையும் தொன்மங்களையும் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி இவருடையது என்று கவிதைச்சூழலில் கருதப்படுகிறது.
பிறப்பு, இளமை
கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. நவம்பர் 8, 1972-ல் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் இரா.இராமநாதன் – இரா.வேதவதி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தனிவாழ்க்கை
பள்ளி இறுதி வரை கண்டாச்சிபுரம் பள்ளியில் முடித்து பட்டப்படிப்பை உளுந்தூர்பேட்டை ஐ.டி.ஐ யில் பயின்றார். திருமண புகைப்படக் கலைஞராக தொழில் வாழ்க்கையைத் தொடங்கி, 12 ஆண்டுகளாக தினமலர் நாளிதழில் இதழாளராக பணிபுரிந்து வருகிறார் .
குடும்பம்
2005-ல் திருமணம். மனைவி பெயர் சுதா (எ) வரலட்சுமி. மகள்கள் ஸ்வேதா சரயு , அனன்யா சரயு.
இலக்கிய வாழ்க்கை
கண்டாச்சிபுரத்தை ஆண்ட சிற்றரசர் கண்டராதித்தர் நினைவாகக் கண்டராதித்தன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். முதல் படைப்பு 1994-ல் கரும்பலகை என்ற தலைப்பில் கையெழுத்துப்பிரதியில் வெளியானது. தலைப்பில்லாத கவிதை காலச்சுவடு அச்சு இதழில் பிரசுரமானது.
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக 1980 களின் இறுதி ஆண்டுகளில் சகோதரர் தொல்காப்பியன், நாவலாசிரியர்கள் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம் மற்றும் பாரதி ஆகியோரையும், 90 களின் மத்தியில் கவிஞர்கள் பிரமிள், நகுலன், பசுவய்யா, தேவதேவன், பிரம்மராஜன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட நவீன கவிகளையும், எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, கோணங்கி, ஜெயமோகன், பா.வெங்கடேசன் போன்றவர்களையும் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
- கண்டராதித்தன் கவிதைகள்(2002)
- சீதமண்டலம்(2009)
- திருச்சாழல் (2015)
- பாடிகூடாரம்(2022)
விருதுகள்
- சிறந்த கவிதை தொகுப்பிற்கான ஆனந்த விகடன் விருது (2008, சீதமண்டலம்)
- சிறந்த கவிதை தொகுப்பிற்கான ஆனந்த விகடன் விருது (2016, திருச்சாழல்)
- குமரகுருமரன்-விஷ்ணுபுரம் விருது (2018)
- எழுத்துக்களம்(சேலம்) வாழ்நாள் சாதனையாளர் விருது (2021)
இலக்கிய இடம்
கண்டராதித்தன் கவிதைகள் ஆழமான உணர்வுகளை எடுத்தாள்கிறது. கண்டராதித்தனின் கவிதைகள் மரபோடு ஆழ்ந்த தொடர்புடையவை. இவரது கவிதைகள் மரபிலிருந்து எழுந்து நவீன உலகோடு இயல்பாய்ப் பொருந்தி வெளிப்படுகின்றன என இலக்கிய விமர்சகர் பாலா கருப்பசாமி குறிப்பிடுகிறார்.
கண்டராதித்தன் கவிதைகளில் நிதானமும், மொழியும் கைகோர்த்து நிற்கின்றன. கேலியுணர்வையும் எளிதாக கவிதையாக்குகிறார். ஒரு பூரணமான கவிஞன் கண்டராதித்தன் என்பதில் சந்தேகம் இல்லை என வண்ணநிலவன் குறிப்பிடுகிறார்.
கண்டராதித்தனின் ஒருபகுதி செவ்வியல் தன்மை நிரம்பிய புதிய கவிதைகளால் ஆனது எனில் மறுபகுதி அனுபவங்களின் சாறும் எள்ளலும் நிரம்பிய சிறிய கவிதைகள் என கவிஞர் லஷ்மி மணிவண்ணன் கூறுகிறார்.
உசாத்துணை
- கவிஞன் பிரம்மனாக, ருத்ரனாக..., பாலா கருப்பசாமி, இந்து தமிழ் திசை, ஜூலை 2017
- ஏகமென்றிருப்பது - குமரகுருபரன் விருது 2018 கட்டுரைகள், ஜெயமோகன்.இன்
✅Finalised Page