standardised

திருநறுங்கொண்டை குகைப் பள்ளி

From Tamil Wiki
Revision as of 09:58, 17 April 2022 by Tamaraikannan (talk | contribs)
திருநறுங்கொண்டை குகை

திருநறுங்கொண்டை குகைப் பள்ளி (பொ.யு. 7-9-ஆம் நூற்றாண்டு) உளுந்தூர்ப்பேட்டை அருகிலுள்ள சமணத் தலம். அப்பாண்டைநாதர் குன்று என்றும் பொதுவழக்கில் சொல்லப்படுகிறது. திருநறுங்கொண்டை, திருநறுங்குன்றம், திருநறுங்குணம், திருநறுங்கொன்றை என பல பெயர்களில் அழைக்கப்படும்கிறது. 1994-ல் வெளியிடப்பட்ட விழுப்புரம் மாவட்ட அரசிதழில் “திருநறுங் கொன்றை” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்

திருநறுங்கொண்டை குகை

தென்னார்க்காடு மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டைத் தாலுகாவைச் சார்ந்த சிற்றூர் திருநறுங்கொண்டை. இது திருக்கோயிலூரிலிருந்து இருபத்தொரு கிலோமீட்டர் தென்கிழக்கிலும், உளுந்தூர்ப்பேட்டையிலிருந்து பதினாறு கிலோ மீட்டர் வடமேற்கிலும் அமைந்திருக்கிறது. இந்த பகுதி மலைப்பிரதேசமாக இல்லாவிடினும் ஆங்காங்கே பாறைகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு நடுவே உள்ள குன்றுதான் திருநறுங்கொண்டை மலை என அழைக்கப்படுகிறது.குன்றின் அருகில் உள்ள ஏரியின் பெயர், குந்தவைப் பேரேரி.

குகைப் பள்ளி

திருநறுங்கொண்டை குகை

இந்த மலையின் மேற்பகுதியில் இயற்கையாக உள்ள குகையும், அதனையடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பாண்டைநாதர்[1] கோயிலும் காணப்படுகின்றன. இந்த குகையில் பண்டைக் காலத்தில் சமண சமய ஆன்றோர் தவமியற்றியிருக்கின்றனர். இக்குகைப் பாழி ஏறத்தாழ நாற்பது அடி நீளமுடையதாய் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. இதனுள் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவை பத்து அடி நீளமும், மூன்றடி அகலமும் உடையனவாகும். இவற்றுள் ஓரிரு படுக்கைகள் அண்மைக் காலத்தில் உடைக்கப்பட்டுள்ள்ன இந்த படுக்கைகளின் தலைப்பகுதியில் படிக்கட்டு போன்ற தலையணைகள் வெட்டப்பட்டிருக்கின்றன.

திருநறுங்கொண்டை குகை

இக்கற்படுக்கைகளுக்கு அருகில் குகையின் வடக்குப்பக்கமாகப் பதினைந்து அடி நீளமும், ஐந்து அடி அகலமும் உடைய மேடை போன்ற அமைப்பு ஒன்று காணப்படுகிறது. இதனை ஒட்டிக் கீழாக சிறிய அளவில் மற்றொரு மேடையும் இடம் பெற்றுள்ளது. இவை இங்கிருந்த துறவியர் குழுவின் தலைவர் வீற்றிருந்த ஆசனமாகவோ அல்லது அருகக் கடவுளுக்கு வழிபாடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட மேடையாகவோ இருக்கலாம். [ஏ.ஏகாம்பரநாதன், திருநறுங்கொண்டை வரலாறு பக். 29-30]

காலம்

இந்த குகைப் பாழியில் எப்போது கற்படுக்கைகள் தோற்றுவிக்கப்பட்டன என்பதை வரையறை செய்வதற்குப் போதிய சான்றுகள் எவையும் இல்லை. இங்கு வாழ்ந்த துறவியர் பொயு 9-ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள திருச்சாரணத்து மலை, கழுகு மலை, ஐவர் மலை முதலிய இடங்களுக்குச் சென்று வந்தமையைக் குறிப்பிடும் சாசனங்களின் அடிப்படையில், இங்கு சமண சமயம் பொ.யு. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் வேரூன்றியிருக்க வேண்டுமென்பது தெரியவருகிறது. அந்த காலக் கட்டத்தில் இந்த கற்படுக்கைகளும் தோற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும் என ஏகாம்பரநாதன் கருதுகிறார்.

திருநறுங்கொண்டை மலை

வீரசங்கம்

திருநறுங்கொண்டையிலுள்ள குகைப் பள்ளியிலேயே பண்டைக் காலத்தில் சமணத் துறவியரைக் கொண்ட வீரசங்கம் நிறுவப்பட்டிருக்கிறது இது யாரால், எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை. இங்குள்ள குகையில் கற்படுக்கைகள் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலேயே, அதாவது கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டிலேயே, சமண சங்கமும் நிறுவப்பட்டிருக்கலாம். இந்த வீரசங்கத்தைச் சார்ந்த துறவியர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் திருச்சாரணம், கழுகு மலை. ஐவர் மலை போன்ற தென்மாவட்டத் திருத்தலங்களுக்குச் சென்று சமண நெறி பரப்பியுள்ளனர். திருச்சாரணத்து மலையில் திருநறுங்கொண்டையைச் சார்ந்த வீரநந்தியடிகளும், கழுகு மலையில் நறுங்கொண்டையில் வாழ்ந்த துறவியாகிய பல தேவக்குரவடிகளின் மாணாக்கராகிய கனக வீர அடிகளும், ஐவர் மலையில் வீரசங்தத்தைச் சார்ந்தவரும், பெருமடை (பெரு மண்டூர்) ஊரைச் சேர்ந்த வருமான மல்லிசேனப் பெரியாரும் தீர்த்தங்கரர் சிற்பங்களை ஆங்குள்ள பாறைகளில் செதுக்க ஏற்பாடு செய்துள்ளனர் என்பதை அச்சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள சாசனங்களே தெளிவு படுத்துகின்றன. எனவே கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் திரு நறுங்கொண்டைப் பள்ளியும், அதில் இயங்கி வந்த வீரசங்கமும் பெருஞ்சிறப்புடன் திகழ்ந்திருப்பது நன்கு புலனாகும். கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் இங்கு தொடர்ந்து வீரசங்கம் நிலை பெற்றிருந்திருக்கிறது.

திருநறுங்கொண்டை நூல்

கல்வெட்டுக்கள்

திருநறுங்கொண்டையில் உள்ள குகையின் முகப்பில் இருசாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவையிரண்டும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. ஒரு சாசனம் குகையை அடுத்துள்ள கீழைப் பள்ளியாகிய சந்திரநாதர் கோயிலை விசய நல்லுழான் குமரதேவன் என்பவர் கட்டியதைக் கூறுகிறது. அடுத்துள்ள சாசனம் மிகவும் சிதைந்த நிலையில் இருக்கிறது. இதில் வாணகோவரையன் என்னும் சிற்றரசனது பெயரினைத் தவிர எஞ்சியவை அனைத்தும் அழிந்து விட்டன. இந்த இரண்டு கல்வெட்டுக்களும் குகைப்பாழியில் படுக்கைகள் அமைத்தது பற்றியோ அல்லது அங்கு வதிந்த துறவியரைப் பற்றியோ செய்திகளைக் கொண்டிருக்கவில்லை. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சந்திரநாதர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பே குகைப்பள்ளி இருந்த போதிலும் அது பற்றிய விவரங்களை இவை கொண்டிலங்கவில்லை.

குகைப் பள்ளியிலுறைந்த துறவியர் வழிபடுவதற்கென கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அருகிலுள்ள பாறையில் பார்சுவநாதர் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இதனை ஒட்டி மண்டபம் எதுவும் கட்டப்படாமலிருந்ததால், இது தரிசன பிம்பமாகவே திகழ்ந்திருக்கிறது. இதற்குப் பின்னர்தான் மண்டபம் ஒன்று கட்டி கோயிலாக்கப்பட்டிருக்கிறது.

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.