மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்

From Tamil Wiki
Revision as of 16:38, 25 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் (1883 – 1962) தமிழில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை முன்வைத்து எழுதிய எழுத்தாளர். சாதி ஒழிப்பு ,பெண்கல்வி, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடியவர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் (1883 – 1962) தமிழில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை முன்வைத்து எழுதிய எழுத்தாளர். சாதி ஒழிப்பு ,பெண்கல்வி, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடியவர். ஈ.வெ.ராமசாமி (பெரியார்) அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் முதன்மையான பிரச்சாரகராக இருந்தவர். தாசிமுறையை ஒழிக்க போராடியவர். தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் என்னும் நாவலை எழுதியவர்

பிறப்பு

திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். ராமாமிர்தத்தின் தந்தையான கிருஷ்ணசாமி குடும்பத்தை கைவிட்டுச் சென்றார். குழந்தையை வளர்க்கமுடியாத சின்னம்மாள் ஒரு தேவதாசியிடம் தன் பத்துவயது மகளை விற்றார். இசையும் நாட்டியமும் கற்ற ராமாமிர்தத்தை ஒரு முதியவருக்கு ஆசைமணம் (முறையில்லா திருமணம்) செய்துவைக்க வளர்ப்பு அன்னை முயன்றார். அதை எதிர்த்து தனக்கு இசையும் நடனமும் கற்றுத்தந்தை சுயம்புப் பிள்ளை என்பவரை ராமாமிர்தம் மணந்தார். அதற்கு ஊரில் கடுமையான எதிர்ப்பு உருவானது. அவர்கள் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டனர். அதை எதிர்த்துபோராடினார்கள். 1917 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை பகுதியில் இசைவேளாளர் குடும்பத்துப் பெண்களை இணைத்து நாகபாசத்தார் சங்கம் என்கிற அமைப்பை ஆரம்பித்தார். (பிற்பாடு அது இசை வேளாளர் சங்கமாக மாறியது) நாகபாசத்தார் சங்கம் சார்பில் இரண்டு மாநாடுகளை மயிலாடுதுறையில் கூட்டினார். கடுமையான எதிர்ப்புகள் பழமைவாதிகளிடமிருந்து வந்தன. ஆகவே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த தி.ரு.வி.கல்யாணசுந்தரனா, வரதராஜுலு நாயிடு, ஈ.வெ.ராமசாமி பெரியார் போன்றவர்கள் தேவதாசி முறை ஒழிப்புக்காகக் குரல் கொடுத்து வந்தனர். 1925ல் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறியபோது ராமாமிர்தத்தம்மையாரும் வெளியேறினார். ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியபோது அதில் தீவிரமாக ஈடுபட்டார். ஈ.வெ.ராமசாமி பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழில் ராமாமிர்தம் அம்மையாரின் கட்டுரைகள் வெளிவந்தன. 1930ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். 1947 ல் தேவதாசி முறை ஒழிந்தது. 1949ல் ஈ.வெ.ராமசாமி பெரியார் இளவயதான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது உருவான கருத்து வேறுபாடு காரணமாக சி.என்.அண்ணாத்துரை திராவிடர் கழகத்தை விட்டு விலகும் போது அவருடன் இராமாமிர்தம் அம்மையாரும் திராவிடர் கழகத்தை விட்டுவிலகினார். அதன்பிறகு சி. என். அண்ணாத்துரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளரானார். 27.06.1962ல் அவர் காலமாகும்வரை தி.மு. க ஆதரவாளராகவே இருந்தார். 1989-ம் ஆண்டு கலைஞர் திரு.மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி தொகை ரூபாய் 5000-த்தை 15000 பெண்களுக்கு வழங்க முடிவு செய்தது அதற்கு அம்மையாரின் நினைவாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது