under review

நவரச அண்ணா

From Tamil Wiki
Revision as of 19:00, 17 June 2024 by Logamadevi (talk | contribs)
நவரச அண்ணா இதழ் முகப்பு அட்டை

நவரச அண்ணா (1971), திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிவந்த அரசியல் இதழ். இதன் ஆசிரியர், கிந்தனார். பெரியார் பதிப்பகம் நவரச அண்ணா இதழை வெளியிட்டது.

வெளியீடு

நவரச அண்ணா இதழ், அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 1971 முதல், சென்னையிலிருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியர் கிந்தனார். வெளியீட்டாளர் ஏ.வி. நாராயணன். பெரியார் பதிப்பகம், சென்னை 600015 என்ற முகவரியிலிருந்து இவ்விதழ் வெளிவந்தது. பிரேமா தூதன், சுக்ராச்சாரியார், ஏவியென் ஆகியோர் துணை ஆசிரியராகப் பணியாற்றினர். நவரச அண்ணா இதழ் 48 பக்கங்களில், 40 காசுகள் விலையில் வெளியானது. ஆண்டுச் சந்தா ரூபாய் 10/-. ஆறு மாதச் சந்தா ரூபாய் 5/-.

உள்ளடக்கம்

நவரச அண்ணா இதழின் முகப்பில் வண்ணப்படங்கள் இடம் பெற்றன. உள்பக்கத்தில் ’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற வாசகம் இடம் பெற்றது. முதல் இதழில் அண்ணாவின் வரைபடத்திற்குக் கீழ், “நான்மதத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல, மதத்தின் பரிசோதகன். காவி கட்டாத இந்து! கைலிகட்டாத முஸ்லிம்! சிலுவை அணியாத கிருத்துவன்!” என்ற கருத்து இடம்பெற்றது.

மேலும் அண்ணாவின் பெருமையைக் குறிக்கும்,

“அண்ணா வந்தார் அவணியிலே ஒரு விழிப்பு
அண்ணா பேசினார் மேடையிலே ஒரு புதுமை
அண்ணா சிந்தித்தார் பழமையிலே ஒரு மருட்சி
அண்ணா எழுதினார் திரையிலே ஒரு புரட்சி
அண்ணா நடித்தார் கலையிலே ஒரு கவர்ச்சி
அண்ணா உறங்கினார் உலகுக்கே ஒரு பேரதர்ச்சி”

-என்ற பாடல் இடம்பெற்றது.

நவரச அண்ணாவின் எண்ண ரசம், ஆரியதாசனா திராவிடத் தோழனா, கிந்தனாரின் சிந்தனைகள் போன்ற கட்டுரைகள் இடம்பெற்றன. திரைப்படச் செய்திகளுக்கும், நாடகம் பற்றிய செய்திகளும் நவரச அண்ணா இதழ் இடமளித்தது. அண்ணாவின் பொன்மொழிகள் ஆங்காகே வெளியாகின. விளம்பரங்களும் நவரச அண்ணா இதழில் வெளிவந்தன.

அக்டோபர் முதல் மாதமிருமுறை இதழாகவும், டிசம்பர் முதல் தினசரி இதழாகவும் வெளிவரும் என்ற அறிவிப்பு இதழில் இடம்பெற்றது.

இதழ் நிறுத்தம்

நவரச அண்ணா இதழ் எத்தனை ஆண்டுகாலம் வெளிவந்தது, எப்போது நின்றுபோனது போன்ற விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

நவரச அண்ணா இதழ் திராவிட இயக்கம் சார்பில் வெளிவந்த இதழ். திராவிட முன்னேற்றக் கழகத்திகு ஆதரவாகப் பல செய்திகளை வெளியிட்டது. திராவிடக் கழகங்களில் சார்பில் அண்ணாவின் பெயரில் வெளிவந்த இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று நவரச அண்ணா.

உசாத்துணை


✅Finalised Page