under review

நொச்சித்திணை

From Tamil Wiki
Revision as of 16:45, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பகை மன்னன் ஒருவன், தனது மதிலின் புறத்தே சூழ்ந்து, உழிஞை சூடி, முற்றுகையிடும்போது, மதிலுக்குரிய அரசன் நொச்சிப் பூவை அல்லது மாலையைச் சூடி மதிலைக் காத்து நிற்பது நொச்சித் திணை. எயில் காத்தல் நொச்சி (திணைகளைத் தொகுத்த பழஞ்செய்யுளிலிருந்து). இதுவும் பகை வேந்தனின் தாக்குதலை எதிர்த்து நிற்பது. அரண்மனையின் பெரிய பாதுகாப்பு அரணாகிய மதிலைக் கைப்பற்றி, பகைவர்கள் உள்ளே வந்து விடாதபடி அம் மதிலைப் பாதுகாக்கும் போர்முறை நொச்சி எனப்படும். மதில்காக்கும் மறவர்கள் நொச்சி மலரினைச் சூடிச் செல்வது மரபு.

நொச்சித் திணையின் துறைகள்

நொச்சித் திணை எட்டுத் துறைகளை உடையது. [[புறப்பொருள்

வெண்பாமாலை]] நொச்சித்திணையின் துறைகளை இப்பாடலில் வகுக்கிறது.

நுவல் அருங் காப்பின் நொச்சி, ஏனை
மறனுடைப் பாசி, ஊர்ச்செரு என்றா,
செருவிடை வீழ்தல், திண் பரிமறனே,
எயிலது போரே, எயில்தனை அழித்தல்,
அழிபடை தாங்கல், மகள்மறுத்து மொழிதல், என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும், துறையும் ஆகும்

  • காவல் காடு, அகழி முதலானவற்றைப் பகைவரிடம் இருந்து காத்தல்(ஊர்ச்செரு)
  • உழிஞைத்திணை வீரரோடு போரிட்டு வீர சுவர்க்கம் அடைதலைக் கூறுதல். (மறனுடைப் பாசி)
  • காவல் காடும், அகழியும் காத்த போரில் இறந்து படுதல். (செருவிடை வீழ்தல்)
  • நொச்சித்திணைப் போர் நிகழ்த்தும் நாட்டினரின் குதிரைகளின் வீரத்தைப் பேசுதல். (குதிரை மறம்)
  • எயில் எனப்படும் மதில் காக்கும் போரில் உடல் கூறுபட்டு இறந்த வீரனைப் பற்றிக் கூறுதல். (எயில்தனை அழித்தல்)
  • அழிந்த படையே மீண்டு, மீளவும் மதில் காத்து நிற்றல். (அழிபடை தாங்கல்)
  • உழிஞைத்திணை மன்னன் மகள் கேட்க, அதனை மறுத்துப் பேசுதல். (மகள் மறுத்து மொழிதல்)

என்பனவாம். இவற்றோடு திணையையும் கூட்டித் 'திணையும் துறையும் ஒன்பது’ என வகுக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள்

புறநானூறு

நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் "நொச்சிக்" கண்ணார் குரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்,
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

பொருள்

முன்பு, நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவதைக் கண்டோம். இப்பொழுது, நொச்சி மாலையை அணிந்து, மதிலைக் காக்கும், வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம் தரும் குருதியில் கலந்து உருமாறிக் கிடக்கிறது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றதை இப்பொழுது யாம் கண்டோம்.

நொச்சி மாலை அணிந்து மதிலைக் காத்த வீரனைப் பற்றிக் குறிப்பிடுவதால் இப்பாடல் நொச்சிச்திணையைச் சார்ந்தது.

கம்பராமாயணம்

எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்;
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே?
உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் கொண்டது, உன் ஊர்.

பொருள்

நிகும்பன் இராவணனை நோக்கி சொல்வது: எழுபது வெள்ளம் குரங்குத் தொகுதிகள் நம் இலங்கையின் மதில்களை முழுவதும் சுற்றி வளைத்தன என்று இனி செய்யத்தக்கது என்னவென்று மனம் அழிந்து உள்ளாய் போலும்! நமது பகைவர் சூடியுள்ள மதில் முற்றுகைக்குரிய உழிஞைப்பூவை அடியோடு அழித்தற்கு பரந்த நீர் நிறைந்த கடல் போன்றதாகிய உன் இலங்கைப் படை மதில் காத்தற்குரிய நொச்சிப் பூவை உச்சியில் கொண்டதாய் உள்ளதன் தொகை ஆயிரம் வெள்ளம் அன்றோ?

இப்பாடலில் எயில் காத்தலும் அதற்குரிய நொச்சிப்பூவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

நொச்சித் திணையும் அதன் துறைகளும்-தமிழ் இணையக் கல்விக் கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jan-2023, 06:37:01 IST