under review

சீதை தூக்கிய வில் (நாட்டார் கதை)

From Tamil Wiki
Revision as of 16:30, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சீதை வில்.jpg

சீதையின் சுயம்வரத்திற்கு முன் கதையாக அமைந்தது சீதை தூக்கிய வில் நாட்டார் கதை. சீதையின் சுயம்வரத்தில் இராமன் வில்லை வளைத்து சீதையை மணமுடித்ததின் முன் காரணத்தை விளக்குவது இந்த நாட்டார் கதை.

கதை

ஜனக மகாராஜா தீவிர சிவபக்தர். மிதிலையில் அவர் அரண்மனைக்குள் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி வழிபட்டு வந்தார். அக்கோவிலை ஜனகரின் குடும்பத்து பெண்களுள் ஒருவர் பெருக்கி கழுவ வேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தார். இதில் முறைவைப்பு இருந்தது.

சீதையின் முறை வந்த போது அவள் தன் தோழிகளுடன் கோவிலுக்குள் சென்றாள். தோழிகள் கோவில் பிரகாரத்தை சுத்தம் செய்ய, சீதை கோவிலுள் இருந்த மண் தரையை சுத்தம் செய்தாள். பின் அதனை சாணியால் மெழுகினாள். எல்லா வேலையும் முடித்துவிட்டுக் கோவிலின் பின்புறம் சென்றாள். அங்கே ஒரு அறையில் வில் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை சுத்தம் செய்ய எத்தனித்தாள். அதற்கு இடையூறாக இருந்த வில்லை இடது கையால் எடுத்து தூக்கிச் சுவற்றில் சாத்தினாள். அதன் பின் அந்த அறையை சுத்தம் செய்தாள்.

இதனை வெளியில் இருந்து பார்த்த தோழிகள் ஜனகரிடம் விரைந்தனர். ஜனகரிடம் சீதை வில்லை இடது கையால் தூக்கி மாற்றி வைத்ததைப் பற்றிக் கூறினர். ஜனக மகாராஜா அவர்களுடன் ஓடிச் சென்று மறைவாக நின்று பார்த்தார். ஜனகர் பார்க்கும் போது அறையை சுத்தம் செய்து முடித்திருந்த சீதை இடது கையால் வில்லை தூக்கி மறுபடியும் பழைய நிலையில் வைத்தாள்.

அதனைக் கண்ட ஜனகர் அதிர்ச்சியுற்றார். ஆச்சரியத்தில் துள்ளி குதித்தார். அறுபதினாயிரம் கிங்கரர்களாலும் தூக்க முடியாத சிவன் வரம் பெற்ற சிவதனுசை சீதை எப்படி தூக்கினாள் என வியந்தார். அவள் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் வில்லை முறிக்கும் தகுதியுடையவனுக்கே சீதை மணமகளாவாள் என முடிவு செய்தார்.

இராமனும் சீதையும்

நன்றி -சொல்வனம்

இந்த நாட்டார் கதையில் இராமனும் சீதையும் முன்பே சந்தித்திருக்கின்றனர். அதற்கு ஒரு கதையும் உண்டு. ஜனகரும் தசரதரும் நண்பர்கள். ஒரு முறை ஜனகரின் அரண்மனைக்கு தசரதர் சென்றிருந்தார். அப்போது அவருடன் இராமன் சென்றிருந்தான். மிதிலையின் அரண்மனை தோட்டத்திற்கு சென்ற இராமன் அங்கே சீதை தனித்திருப்பதைக் கண்டான். அவள் அழகில் மயங்கி அவள் கையை பிடித்தான். அந்த வேகத்தில் சீதையின் கை வளையல்கள் உடைந்தன. அவள் இராமனின் கையை தட்டிவிட்டு ஓடிவிட்டாள். தன் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னாள். சீதையின் வளர்ப்புத் தாய், "அவன் தான் உன்னை மணம் செய்யப் போகும் மாப்பிள்ளையாக வரப் போகிறான்; கவலையை விடு" என்றாள். அதிலிருந்து சீதை மனக்கவலை நீங்கினாள். சீதையின் சுயம்வரம் நடந்த போது இராமன் சென்று வில்லை வளைத்து சீதையை மண ஏற்பு செய்வதில் கதை நிறைவடைகிறது.

உசாத்துணை

  • இராமன் எத்தனை இராமனடி! - அ.கா. பெருமாள் (நன்றி - காலச்சுவடு)



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Mar-2023, 19:53:49 IST