under review

பரவூர் ஸ்ரீதரன் தந்திரி

From Tamil Wiki
Revision as of 16:29, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பரவூர் ஸ்ரீதரன் தந்திரி

பரவூர் ஸ்ரீதரன் தந்திரி (1925-2011) இந்து ஆலயங்களை நிறுவுவது, பூசை செய்வது ஆகியவற்றின் பொறுப்பு கொண்ட தலைமை பூசகர். கேரள இந்துமத வழிபாட்டு முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய முன்னோடி. இந்திய அளவில் சாதிகடந்த பூசைமுறையை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.நாராயண குருவின் வழிவந்தவர்.

பிறப்பு, கல்வி

கேரளத்தின் புகழ்பெற்ற தந்திரி என அறியப்படும் ஸ்ரீதரன் தந்திரி நூறாண்டுகளுக்கு முன் ஆலயநுழைவு மறுக்கப்பட்ட ஈழவச் சாதியைச் சேர்ந்தவர். கெடாமங்கலம் களவம்பாற வீட்டில் மாமன் வைத்தியருக்கும் எடவனக்காடு கடயந்தரவீட்டில் பார்வதியம்மாவுக்கும் அக்டோபர் 9, 1925-ல் பிறந்தார். அய்யம்பிள்ளி கண்டஸன் ஆசான் (ஸ்ரீகண்டன் வைத்தியர்) என புகழ்பெற்றிருந்த தந்திரியிடம் தந்திர சாஸ்திரங்களை கற்றார். ஈழவச்சாதியினரும், நாராயணகுருவின் மாணவருமான ஸ்ரீகண்டன் வைத்தியர் கொடுங்கல்லூர் கொச்சுண்ணி தம்புரான் என புகழ்பெற்றிருந்த நம்பூதிரி சாதியைச் சேர்ந்த தந்திரியின் நேரடி மாணவர். பழூர் படிப்புரை என்னும் வேத பாடசாலையிலும் சோதிட பாடசாலையிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

ஸ்ரீதரன் தந்திரியின் மனைவி அமிர்தவல்லி. அவருடைய மைந்தர் பரவூர் ராகேஷ் தந்திரிகள் இன்று பெரும்புகழ்கொண்ட தாந்திரிக, வேத ஆசிரியராக அறியப்படுகிறார். பரவூர் ராகேஷ் தந்திரிகள் சபரிமலையிலும் தந்திரியாக முன்னரே பணியாற்றியிருக்கிறார்

மதப்பணி

ஸ்ரீதரன் தந்திரி நாராயண குரு கோழிக்கோடு அருகே நிறுவிய ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோயிலின் தலைமை தந்திரியாகப் பணியாற்றினார். சபரிமலை, குருவாயூர், வைக்கம், சோட்டானிக்கரை,கொடம்புழா, கொடுங்கல்லூர் ஆலயங்களில் நிகழ்ந்த தேவப்பிரஸ்னங்களில் கலந்துகொண்டிருக்கிறார்.இருநூற்று எட்டு புதுஆலயங்களில் இறைநிறுவல் சடங்குகளை [தேவப்பிரதிஷ்ட்டை] செய்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக கேரளத்தின் முதன்மையான பேராலயங்களில் தந்திரியாகவும் தலைமைத்தந்திரியாகவும் பணியாற்றியிருக்கிறார். தேவயக்ஞபத்ததி, பித்ருகர்மவிதி, குருசிஷ்யசம்வாதம் உட்பட கேரளத்தில் பயிலப்படும் முதன்மையான தந்திரநெறி சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

அவருடைய ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயம் தலித்துக்கள் உட்பட அனைவருக்கும் தாந்த்ரீகக் கல்வியை வழங்குகிறது. ஸ்ரீதரன் தந்திரிகள் மலையாளத்திலும் சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான பக்திப்பாடல்களை இயற்றியிருக்கிறார்.

மறைவு

ஜூலை 21, 2011-ல் மறைந்தார்.

விருதுகள்

  • அமிர்ததகீர்த்தி விருது (அமிர்தானந்தமயி மடம்)
  • சுவாமி மிருடானந்தஜி மகராஜ் நினைவுப் பரிசு

நூல்கள்

  • தேவயக்ஞபத்ததி,
  • பித்ருகர்மவிதி
  • குருசிஷ்ய சம்வாதம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:02 IST