under review

கே.வி. ஜெயஸ்ரீ

From Tamil Wiki
Revision as of 16:28, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: K.V. Jayashree. ‎

கே.வி. ஜெயஸ்ரீ

கே.வி. ஜெயஸ்ரீ (ஏப்ரல் 26, 1967) மொழிபெயர்ப்பாளர், பள்ளித் தலைமையாசிரியர், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்.

பிறப்பு, கல்வி, பணி

கே.வி. ஜெயஸ்ரீ கேரள மாநிலம் பாலக்காட்டில் ஏப்ரல் 26, 1967 அன்று மாதவி-வாசுதேவன் தம்பதியருக்குப் பிறந்தார்.

ஜெயஸ்ரீயின் மூத்த சகோதரி சுஜாதா. ஜெயஸ்ரீயின் தங்கை கே.வி.ஷைலஜா எழுத்தாளர் பவா செல்லதுரையின் மனைவி.

கே.வி. ஜெயஸ்ரீ தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார்.

தனி வாழ்க்கை

கே.வி.ஜெயஸ்ரீ குடும்பத்தார் (நன்றி: கே.வி.ஜெயஸ்ரீ)

கே.வி. ஜெயஸ்ரீ அக்டோபர் 27, 1993-ல் உத்திரகுமாரன் என்பவரை மணந்தார். சுகானா, அமரபாரதி ஆகிய இரண்டு பிள்ளைகள். சுகானா மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்குப் படைப்புகளை மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கே.வி. ஜெயஸ்ரீ மலையாள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் பணியில் 20 ஆண்டுகளாக ஈடுபடுகிறார். கேரள இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்ற மனோஜ் குரூரின் 'நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ என்ற மலையாள நாவல் தமிழ்ச் சங்க இலங்கியங்களில் இடம்பெற்றுள்ள பாணர் வாழ்வியலை விவரிப்பதாக அமைந்துள்ளது.

இந்த நாவலை கே.வி. ஜெயஸ்ரீ 'நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார். இதற்காக 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி தமிழில் மொழிபெயர்ப்பு படைப்புகள் பிரிவில் கே.வி. ஜெயஸ்ரீக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்தது.

இலக்கிய இடம்

ஜெயஸ்ரீ மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர், ஆனால் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவர். ஆகவே இருமொழிகளின் மொழிநுட்பங்களையும் உணர்ந்து மொழியாக்கம் செய்கிறார். சிலகாலம் கேரளத்தில் அடிமாலியில் இவர் பணியாற்றியதும் மலையாளத்தின் பேச்சுமொழியை அணுகி அறிய உதவியது. ஜெயஸ்ரீயின் நூல்தேர்வுகளும் முக்கியமானவை.

மூலத்தில் இதன் தலைப்பு 'நிலம் பூத்து மலர்ந்ந நாள்’ தமிழாக்கத்தில் கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ தலைப்பின் இயல்பான மொழிமாற்றம் போலவே, மொத்த நாவலின் மொழிமாற்றமும் எந்த நெருடலும் இன்றி, பூ உதிர்வது போல நடந்திருக்கிறது." என்று நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்கள்

  • இதுதான் என் பெயர் (சிறுகதைகள்) – பால் சக்காரியா
  • இரண்டாம் குடியேற்றம் (சிறுகதைகள்) – பால் சக்காரியா
  • அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் (சிறுகதைகள்) - பால் சக்காரியா
  • யேசு கதைகள் (சிறுகதைகள்) - பால் சக்காரியா
  • பால் சக்காரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
  • பிரியாணி (சிறுகதைகள்) – சந்தோஷ் ஏச்சிக்கானம்
  • ஒற்றைக் கதவு (சிறுகதைகள்) – சந்தோஷ் ஏச்சிக்கானம்
  • கவிதையும் நீதியும் (நேர்காணல்) – சுகதகுமாரியுடன் ஒரு நேர்காணல்
  • நிசப்தம் (கவிதைகள்) – சியாமளா சசிகுமார்
  • வார்த்தைகள் கிடைக்காத தீவில் (கவிதைகள்) – ஏ. அய்யப்பன்
  • ஹிமாலயம் (பயணக் கட்டுரை) – ஷௌக்கத்
  • உஷ்ணராசி (கரைப்புறத்தின் இதிகாசம்) - கே.வி. மோகன் குமார்
  • நிலம் பூத்து மலர்ந்த நாள் (நாவல்) – மனோஜ் குரூர்

விருதுகள்

  • திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
  • திருப்பூர் திசை எட்டும் விருது
  • அங்கம்மாள் முத்துச்சாமி நினைவு அறக்கட்டளை விருது
  • சாகித்ய அகாடெமி - சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2019)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:51 IST