under review

வித்தாலி பூர்ணிக்கா

From Tamil Wiki
Revision as of 16:28, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வித்தாலி பூர்ணிக்கா (Vitaly Fournika, விதாலி ஃபூர்ணிக்கா) (1940-1980 களின் பிற்பகுதி) ரஷ்ய தமிழறிஞராக அறியப்படுகிறார். இவர் ரஷ்ய மக்களுக்கு தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்களில் மூன்றாம் தலைமுறை அறிஞர்.

பிறப்பு, கல்வி

வித்தாலி பூர்ணிக்கா 1940-ம் ஆண்டு ரஷ்யாவில் (தற்போதைய உக்ரேன் நாட்டில்) ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். லெனின்கிராட்டில் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்தார்.

1965-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள லெனின்கிராட் பல்கலைக்ககழகத்தில் செம்பியன் என்று அறியப்பட்ட சிம்யோன் நூதின் அவர்களிடம் தமிழ் கற்றார். பின்னர் இந்தியாவுக்கு வந்த பூர்ணிக்கா சென்னை பல்கலைக்கழகத்தில் மு.வரதராசனிடம் மாணவராகச் சேர்ந்து 'மு.வ வின் சில நாவல்கள் - கள்ளோ காவியமோ' என்ற ஆராய்ச்சி நூலை எழுதி தமிழியலாளர் பட்டப்படிப்பை முடித்தார்.

பூர்ணிக்கா மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் (Moscow University's Institute of Oriental Languages) தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் ஆகிய தலைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் (கலாநிதி) பட்டம் பெற்றார்.

பூர்ணிக்காவிற்கு தன் தாய்மொழியான உக்ரேனின் தவிர ரஷ்ய,பல்கேரிய, ஜெர்மன் ஆங்கில மொழிகளும் நன்கறிந்தவர். டாக்டர் எர்மனின் கீழ் சமஸ்கிருதமும், பேராசிரியர் ஜோகாரவிடம் தெலுங்கையும் கற்றார்.

தனி வாழ்க்கை

பூர்ணிக்கா ரஷ்யாவில் உள்ள லெனின்கிராட்டில் ராணுவத்தில் மூன்று ஆண்டுகாலம் சேவை செய்தார். இதே காலத்தில் தாதியானா என்ற பெண்ணை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு நாதிரா என்ற ஒரு மகள் பிறந்தாள்.

இலக்கிய அறிமுகம்

வித்தாலி பூர்ணிக்கா உக்ரேனிய கவிஞரான தாராஸ் ஷெவ்சென்கோவின் (Taras Grigol'evich Shevchenko) மீது மிகுந்த பற்றுள்ளவாரக இருந்தார்.

வித்தாலி பூர்ணிக்கா 1965-ம் ஆண்டு ஒரு புத்தகக்கடையில் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை தற்செயலாகப் பார்த்து, தமிழின்மேல் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியம் கற்க முனைந்தார். பின்னாளில் சோவியத்தில் பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட வேளையில் அதில் இணைந்து பணியாற்றி, தங்கப்பதக்கம் விருது பெற்றார்.

வித்தாலி பூர்ணிக்கா 1975-ம் ஆண்டு மாஸ்கோவில் இருந்த ராதுகா பதிப்பகத்தில் தமிழ் பிரிவின் பொறுப்பாளராகப் பணியில் அமர்ந்தார். பூர்ணிக்கா தனது காலத்தில் வாழ்ந்த பல தமிழ் எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் நண்பரானார். ஜெயகாந்தன் பூர்ணிக்காவின் நினைவாக நட்பில் பூத்த மலர் என்ற நூலை எழுதியுள்ளார்.

இலக்கியப் பங்களிப்பு

வித்தாலி பூர்ணிக்கா தமிழிலக்கியம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை ரஷ்ய மொழியில் எழுதி வெளியிட்டார். தமிழகத்தில் ஆய்வுசெய்து ரஷ்ய மொழியில் தமிழகத்தைப் பற்றிய ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். பின்னர் அந்த நூலை பிறப்பு முதல் இறப்புவரை என்று ந. முகம்மது ஷெரிப் மொழியாக்கத்தில் நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியிட்டது.

பூர்ணிக்கா ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" என்ற நாவலை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார். இந்த நூல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது. உக்ரேனிய மொழியில் பூர்ணிக்கா மொழிபெயர்த்த ஜெயகாந்தனின் "சுந்தரகாண்டம்" நாவல் ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றது.

பூர்ணிக்கா 1977-ம் ஆண்டு ரஷ்ய மொழியில் ஜெயகாந்தனின் 1954-1970 வரையிலான சிறுகதைகளில் 22 சிறுகதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டார். ஈழத்து – தமிழக எழுத்தாளர்களின் பல படைப்புகளை ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். பூர்ணிக்கா தமிழகப்பித்தன் என்ற புனைபெயரில் எழுதினார்.

ஈழ எழுத்தாளரான ஐயாத்துரை சாந்தன் தம்முடைய "ரஷ்யாவும் தமிழும்" என்ற கட்டுரையில் பூர்ணிக்காவை மூன்றாம் தலைமுறை ரஷ்ய தமிழறிஞர் என்று வரையறுக்கிறார்.

படைப்புகள்

எழுதிய நூல்கள்
  • தல்ஸ்தோயும் தமிழிலக்கியமும்
  • தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை - தமிழ்ப் பண்பாடுகளை விளக்கும் நூல்
  • பிறப்பு முதல் இறப்புவரை
மொழி பெயர்த்த நூல்கள்
  • சுந்தரகாண்டம் (மூலம்: ஜெயகாந்தன்) - உக்ரேனிய மொழி
  • ஒருவகை உறவு (மூலம்: காவலூர் ராசதுரை) - ரஷ்ய மொழி
  • என் பெயர் ராமசேஷன் (மூலம்: ஆதவன்) - ரஷ்ய மொழி.

மறைவு

வித்தாலி பூர்ணிக்கா 1980-களின் பிற்பகுதியில் மறைந்தார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 19:02:37 IST