under review

மதுரை மருதங்கிழார் மகனார் சோகுத்தனார்

From Tamil Wiki
Revision as of 16:28, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை மருதங்கிழார் மகனார் சோகுத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரு பாடல்கள் நற்றிணையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

குத்தனார் என்பது இயற்பெயர். "சோ" என்பது எக்காரணத்தினாலோ பெயர்களுக்கு அடைப்பெயராக வருகிறது. மதுரையில் மருதங்கிழார் மகனாகப் பிறந்தார். பெருங்கண்ணனார் என்ற பெயருடைய புலவர் பெருமக்கள் இவருடன் பிறந்தவர்கள். தமிழறிந்த குடும்பத்தில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய பாடல்கள் நற்றிணையில்(329, 352) பாலைத்திணைப் பாடல்களாக உள்ளன. சோகுத்தனார் நற்றிணைப் பாடல்களை நூலாகத் தொகுத்தார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • பாலையில் ஆறலை கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கர்களின் பிணம் அகற்றப்படாமல் முடை நாற்றம் வீசும்.
  • கொன்று போட்ட பிணங்களுக்காகக் கிழட்டுக்கழுகுகள் காத்துக் கிடக்கும்.
  • தீ எரிவது போன்ற காதுகளைக் கொண்ட முதுநரி சேவலின் பச்சை ஊனைக் கொள்ளையிட்டுக் கொண்டுபோய் நிழலில் வைத்துக்கொண்டு கதிக்கும்.
  • முதுநரி நீர் பருக விரும்பிப் பேய்த்தேர் விளங்குகின்ற நீரற்ற புலத்தை நீர் உள்ள இடமென்று சென்று அலைந்து; நீர் ஆங்குக் கிடைக்காமையால் வருந்தும்.

பாடல் நடை

  • நற்றிணை: 329

வரையா நயவினர் நிரையம் பேணார்,
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி 5
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி- தோழி!- உதுக் காண்:
இரு விசும்பு அதிர மின்னி, 10
கருவி மா மழை கடல் முகந்தனவே!

  • நற்றிணை: 352

இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள்
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Nov-2023, 18:48:38 IST