under review

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

From Tamil Wiki
Revision as of 16:27, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Ollaiyur thantha poothapandian. ‎


ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பான அகநானூறு மற்றும் புறநானூற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒலிய மங்கலமும் அதைச் சுற்றிய ஊர்களும் ஒல்லையூர் என்றழைக்கப்பட்டது. ஒல்லையூர் பாண்டியர் ஆட்சியின் கீழ் அதன் வட எல்லையாக இருந்தது. அதனை ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் போர் செய்து வென்றார். பூதப்பாண்டியன் பெருஞ்சாத்தனோடு போரிட்டு மீண்டும் வென்றார். இதனால் பூதப்பாண்டியன் 'ஒல்லையூர் தந்த' என்று அழைக்கப்பட்டார். இவர் சிறந்த போர்வீரர், வள்ளல். இவரது மனைவி பூதபாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டும் ஒரு புலவர். இவர் தன் கணவன் இறந்தபோது தன் கணவனை எரிக்கும் தீயில் பாய்ந்து உயிர் துறக்கச் செல்லும் முன் புறநானூற்றுப்(246) பாடல் பாடியதாக நம்பப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பான அகநானூறு(25), புறநானூற்றில்(71) உள்ளன.இவர் இறந்ததை எண்ணிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் வருந்திப் பாடிய செய்யுள் புறநானூறு 242-ஆவது பாடலாக உள்ளது.

பாடல் நடை

  • அகநானூறு 25

நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில் தொறும் காஞ்சிப்
பைந்தாது அணிந்த போது மலி எக்கர்
வதுவை நாற்றம் புதுவது கஞல
மா நனை கொழுதிய மணி நிற இருங்குயில்
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினைப் பூங்கோங்கின் நுண் தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி என நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே
வருவர் வாழி தோழி பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
பொதியில் செல்வன் பொலந்தேர்த் திதியன்
இன்னிசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு இறந்தோரோ.

  • புறநானூறு 71

மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:04 IST