under review

மேல்சித்தாமூர் சமண மடம்

From Tamil Wiki
Revision as of 16:17, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மேல்சித்தமூர் சமண மடம்

மேல்சித்தாமூர் சமண மடம் விழுப்புரம் மாவட்டம், வல்லம், செஞ்சிக்கு அருகில் சித்தாமூர் என்ற ஊரில் உள்ள ஒரு சமண மடம். தமிழகத்தில் வாழும் திகம்பரப் பிரிவு சமணர்களுக்குத் தலைமைப்பீடமாகிய மடம் இங்குள்ளது.

இடம்

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், செஞ்சிக்கு அருகில், திண்டிவனம்-செஞ்சி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள, மேல்சித்தாமூர் ஊராட்சிக்குட்பட்ட மேல் சித்தாமூர் என்ற ஊரில் உள்ள ஒரு சமண மடம். மேல் சித்தாமூர், செஞ்சி நகரத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிலும், திண்டிவனம் நகரத்திலிருந்து இருபது கிமீ தொலைவிலும் உள்ளது.

பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்- தமிழகத்தில் சமண கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்

வரலாறு

மேல்சித்தாமூர் சமண மடம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்கிறது. தமிழ்ச் சமண சமூகத்தின் முதன்மையான சமய மையமாகவும் உள்ளது. பண்டைய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதிகள் ஜைன சமயத்தவரின் முதன்மை மையமாக இருந்து வந்துள்ளது.

வெங்கடப்ப நாயக்கர் (1570-1600) தனது ஆட்சிக்காலத்தில் சித்தாமூரில் ஜைனக் கோயிலைக் கட்ட அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பொ.யு. 16-ம் நூற்றாண்டில் விழுப்புரம் மாவட்டம் உப்புவேலூரைச் சேர்ந்த வீரசேனாச்சாரியார் என்பவரால் இம்மடம் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் பொ.யு. 1860-ல் சென்னை மாகாண ஆட்சிப்பணியில் இருந்த, பாலையா என்னும் ஜைன அதிகாரி, சித்தாமூர் ஜைனக் கோவிலில் மாளிகையை உருவாக்கினார். அதற்காக செஞ்சி வெங்கடரமணர் கோயிலில் இருந்த பெரிய கல் யானைகள் போன்றவற்றை உடைத்து அந்தக் கற்களைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தினார்.

லட்சுமி சேன பட்டாரக

சமண மடம்

வரலாற்று ரீதியாக, காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள ஜின காஞ்சியில் ஒரு சமண மடம் இருந்தது, ஆனால் பிற்காலத்தில் அந்த மடம் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த மடத்தைச் சார்ந்து பள்ளிகளும், ஜிநாலயங்களும், சமணக் கோயில்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் தொண்டாற்றி வருகின்றது. மேல் சித்தாமூர் சமணக் கோயிலின் தேர்முட்டி மண்டபத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ள பெரிய கல் யானைகள் கவனிக்கத்தக்கவை.

ஜூன் 2014-ல் லட்சுமி சேன பட்டாரக மேல்சித்தாமூர் சமண மடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழ் சமண சமுதாயத்தின் முதன்மை சமயத் தலைவராக இவர் கருதப்படுகிறார். பாண்டிச்சேரி நிறுவனம் தமிழகத்திலுள்ள சமண இடங்களை ஆவணப்படுத்தும் முயற்சியை துவங்கியது. 2017-ல் ’தமிழகத்தில் சமண கலாச்சார மற்றும் மத பாரம்பரியம்’ என்ற தலைப்பில் இந்த ஆவணம் (DVD வடிவில்) வெளியிடப்பட்டது. லட்சுமி சேன பட்டாரக இதில் ஆர்வமுடையவராகவும், உறுதுணையாகவும் இருந்தார்.

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Sep-2023, 00:13:19 IST