under review

பொருநராற்றுப்படை

From Tamil Wiki
Revision as of 16:16, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் என்னும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடி கலந்த ஆசிரியப்பாவால் ஆனது. போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூல்.

நூல் அமைப்பு

  • பொருநன் போகும் வழி (1 முதல் 13 வரை)
  • பாடினி மகிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை)
  • நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை)
  • கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (46 முதல் 59 வரை)
  • அடியா வாயில் அடைக நீயும் (60 முதல் 75 வரை)
  • என் வருத்தம் தீர வாரி வழங்கினான்(76 முதல் 90 வரை)
  • இரவு பகல் தெரியாது இருந்தேன் நான் (95 முதல் 105 வரை)
  • ஏர் உழுவது போல சோறுழுத எங்கள் பற்கள் (106 முதல் 120 வரை)
  • பரிசு மழையில் நனைந்தோம் (121 முதல் 135 வரை)
  • வெண்ணிப் பறந்தலை வென்றவன் (136 முதல் 150 வரை)
  • தாயினும் மிகுந்த அன்போடு (151 முதல் 165 வரை)
  • தேர் ஏற்றி அனுப்ப தெருவரைக்கும் வருவான் (166 முதல் 177 வரை)
  • மயிலாடும் மருத நிலம் (178 முதல் 194 வரை)
  • வண்டு பாட மயிலாடும் (195 முதல் 213 வரை)
  • செங்கோல் வழுவாச் செல்வன் கரிகாலன் (214 முதல் 231 வரை)
  • பூவிரிக்கும் காவிரி வளம் (132 முதல் 248 வரை)

என்று 248 வரிகளில் இந்நூலின் கருத்து கட்டமைக்கப்படுகிறது.

நூல் சிறப்பு

விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் என்ற தமிழர் வழக்கம் குறித்து "காலில் ஏழடிப் பின்சென்று" என்னும் பாடல் வரியால் அறிய ,முடிகிறது.

காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை - (பொரு.166)

நாயின் நாக்கு போன்ற காலடி[1]

பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கவளாக இருந்தாள் என்று புகழ்ந்து பாடினியின் கேசாதிபாத வர்ணனையாக அவளது தலை முதல் கால் வரை பத்தொன்பது உறுப்புகள்[2] வர்ணிக்கப்பட்டுள்ளன.(பொருந:25-47). முடத்தாமக் கண்ணியார் பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வர்ணிக்கிறார். "பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாய் போலும் கூர்மையானவை அவளுடைய விரல் நகங்கள். பல மணிவடங்கள் கோத்த மேகலை அணிந்த இடையும் உடையவள் அவள். பெரிய பெண் யானையின் பெருமை உடைய துதிக்கை போல நெருங்கித் திரண்ட இரு தொடைகளையும் உடையவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய அழகிய கணைக் காலுக்கு இணையான அழகுடையது, "நாய் நாவின் பெருந்தகு சீறடி" என்ற வரியின் மூலம் ஓடி இளைத்த நாயினுடைய நாக்கைப் போன்றது அவளுடைய பாதங்கள் என்று முடத்தாமக்கண்ணியார் வர்ணிக்கிறார்.

முரவை போகிய முரியா அரிசி

கரிகாற்பெருவளத்தானைக் கண்டு பரிசில் பெற சென்ற இடத்தில் பொருநனுக்குக் கிடைத்த உபசரிப்பு பற்றிக் கூறும் போது "எங்கள் பற்கள் ஏர் உழுவது போல் சோறு உழுதன. இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ணும்படி ஓயாது உபசரித்தான். இதை மேலும் உண்ணுவதை வெறுத்து, வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றைப் போட்டுப் பொறிக்கறியோடு உண்ணவைத்தான். இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி" என்று குறிப்பிடுகிறார்[3]. கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு என்பதைப் பெருமையுடன் பொருநன் குறிப்பிடுகிறான்.

உரைகள்

  • வா.மகாதேவ முதலியார் உரை(1907)[4]
  • கா.ஶ்ரீ.கோபாலாச்சாரியார் உரை
  • மொ.அ.துரையரங்கனார் திறனாய்வு உரை
  • பொ. வே. சோமசுந்தரனார் உரை[5]
  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை(2004).

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/50 - விக்கிமூலம்
  2. 19 உறுப்புகள்: கூந்தல், திருநுதல், புருவங்கள், கண்கள், வாய், பற்கள், காதுகள், கழுத்து, தோள்கள், முன்கைகள், மெல்விரல், நகங்கள், மார்பகங்கள், கொப்பூழ், நுண்ணிடை, அல்குல், தொடைகள், கணைக்கால், பாதங்கள்.
  3. பத்துபாட்டு மூலமும் விளக்கமும் - ஞா.மாணிக்கவாசகன், மார்ச் 2016 மூன்றாம் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை- 600001
  4. வா.மகாதேவமுதலியார் உரை
  5. பொ. வே. சோமசுந்தரனார் உரை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2023, 16:44:50 IST