under review

வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 16:01, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பள்ளி சின்னம்

வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் காப்பாரில் உள்ளது. ஜனவரி 1946 -ல் தோற்றுவிக்கப்பட்டது. அரசாங்க பகுதி உதவி பெறும் இப்பள்ளியின் பதிவெண் BBD 0092 .

வரலாறு

வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி காப்பார் பட்டணத்துக்கு அருகில் அமைந்திருந்தது. வல்லம்புரோசா தோட்ட நிர்வாகியால் இப்பள்ளி உருப்பெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1947-ல் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 60 X 30 அடி அளவில் அமைந்திருந்தது. க. கன்னியப்பனை ஆசிரியராகக் கொண்டு இயங்கிய இப்பள்ளியில் 42 மாணவர்கள் பயின்றனர். காலை, மாலையென இரு வேளைப் பள்ளியாகச் செயல்பட்டது.

பள்ளி நிர்வாகம்

பள்ளியின் பழைய கட்டிடம்

1958-ல் பள்ளி வாரியம் அமைக்கப்பட்டபின், வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிர்வாகம் இவ்வாரியத்தின் கீழ் இயங்கியது. ஆர். ரெங்கநாதன் தன்னார்வ ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெருமாள் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். அடுத்துத் தலைமைப் பொறுப்பேற்ற ஈஸ்வரி நாயகியின் பணிக்காலத்தில் பள்ளியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

பள்ளிகளின் இணைப்பு

ஜூலை1, 1983 -ல் காப்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளியும் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியோடு இணைக்கப்பட்டன. இதன் காரணமாக, வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவரின் எண்ணிக்கை கூடியது. 1968 -ல் பள்ளிக்கட்டிடம் லீ சியோக் இயூ அவர்களால் அதிகார்வப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

புதிய கட்டிடம்

பள்ளியின் புதிய கட்டிடம்

1990 -ல் கத்ரி நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டிடத்தைக் கட்டித் தந்தனர். இப்புதிய பள்ளி பழைய இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2000-ல் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிடத்துக்கு இடம் மாறியது.

வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பினால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. 2004 -ல் தலைமையாசிரியர் இரா. சுப்ரமணியம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியத்துடன் இணைந்து ஓர் இணைக்கட்டிடத்தை எழுப்பினார்.

பள்ளியின் வளர்ச்சி

வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் தலைமையாசிரியர் சித்திரைச்செல்வன் கல்வியமைச்சிடம் நான்கு மாடிக்கட்டிடம் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலுவின் ஒத்துழைப்பில் 2010 -ல் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 2011-ல் புதிய நான்கு மாடிக் கட்டிடத்துடன் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி செயல்படத் தொடங்கியது.

கணினி அறை

போர்ட் கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவுடன் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 40 கணினிகளுடன் கணினி வகுப்பை உருவாக்கியது. இதனை ஏப்ரல் 7 , 2012 -ல் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமாரும் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகமும் இணைந்து அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2024, 09:17:44 IST