under review

திருவாரூர்ப் பன்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 16:00, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

திருவாரூர்ப் பன்மணிமாலை(பொ.யு. 18-ம் நூற்றாண்டு) திருவாரூரில் கோவில் கொண்ட புற்றிடங்கொண்டபிரான் மீதும், கனக வசந்தத் தியாகேசர் மீதும் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் பாடப்பட்ட பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

திருவாரூர்ப் பன்மணிமாலையை இயற்றியவர் திருவாரூர் வைத்தியநாத தேசிகர். இலக்கண விளக்கம், வாட்போக்கிப் புராணம் போன்ற நூல்களை எழுதியவர்.

நூல் அமைப்பு

திருவாரூர்ப் பன்மணிமாலை பன்மணிமாலை என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.

திருவாரூர் தலத்தின் சிறப்பும், தியாகேசர் மற்றும் வன்மீகநாதரின் சிறப்பும் கூறப்படுகின்றன. மூலாதாரத் தலமாகவும், சப்தவிடங்கத் தலமாகவும் திருவாரூர் அமைந்த சிறப்பு கூறப்படுகிறது. பன்மணிமாலையின் இலக்கணப்படி ஒருபோகு, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, கலித்தாழிசை, வஞ்சிப்பா, விருத்தம் எனப் பல்வகை யாப்புகளில் அந்தாதியாகப் பாடப்பட்டுள்ளது. இதில் மதங்கம், காலம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, பிச்சியார், கொற்றியார் எனப் பல்வகை பொருள் கூற்று உறுப்புக்கள் அமைந்துள்ளன.

பாடல் நடை

குறம்

முறத்தினிறை நெற்கொடுவா கைகாட்டம்மே
       பல்லி மொழிநன் றுன்பா
லுறத்திருவாரூர்ப் பெருமான் வருவாரெங்கள்
    குறி பொய்யா துறைப்பக்கேளாய்
திறத்தின் மரைபேற்றைப் பயந்தோன் குறிகற்பா
    னெங்குலத்திற் சேர்ந்தான் சேயோன்
குறத்திகுறிவழி செல்லலா
 லுத்தமவே தியனென்றே கூறுவீரே.

பிச்சியார்

பிச்சியார் மாசுபடு தலைகெடு தூற்சமயபேத
    மதங்களுக்தென் னாரூரர் வகுத்தவாறு
தேசுபெறு சமையத்தினொன்றேயாக
   திருவுளத்திலெண்ணியோ தெருவே வந்தார்
நாசியெனுங்குமிழார்மெய்ச் சண்பகத்தார்
   நறைவாய்ச் செங்குமுதத்தார் நல்லோ ரெல்லாம்
பேசுமுகத் தாமரையார் விழிலேத்தார்
 பிறக்கு நகைமுல்லை யார் பிச்சியாரே

மறம்

பிணங்குசமயமெவைக்குங் கடவுளா ரூர்ப்
   பெருமாற்குக் கண்கொடுத்த பெருங்குலத்தோம்
அணங்குமணம் பேசவந்தமன்னர் தூதாவ
   கூற்றங்கணையென்பதறியாய் கொல்லோ
வணங்குவிசையற்கரிய கணை யொன்றீந்தோ
   மாதரெண்ணீராயிரவரை வதுவைசெய்தே
மிணங்குதுவரைக்காசனெமைப் பெண் கேட்டெ
    பெங்கணையொன்றால் வானமெய்தினானே

உசாத்துணை

திருவாரூர்ப் பன்மணிமாலை, ஆர்கைவ் வலைத்தளம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-May-2024, 07:43:26 IST