under review

பி.கே. முத்துசாமி

From Tamil Wiki
Revision as of 15:58, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர், திரைப்பாடலாசிரியர் பி.கே. முத்துசாமி

பி.கே. முத்துசாமி (ஆகஸ்ட் 28, 1923 – ஆகஸ்ட் 11, 2020) கவிஞர், எழுத்தாளர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதினார். ஈ.வெ.ரா., அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது பல சிற்றிலக்கியங்களைப் படைத்தார். ‘வெண்பா வேந்தர்’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி.கே. முத்துசாமி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஆர். புதுப்பட்டியில், ஆகஸ்ட் 28, 1923 அன்று, எஸ்.பி. கருப்பண்ணன் - காளியம்மாள் இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். சுயமாகத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

தனி வாழ்க்கை

பி.கே. முத்துசாமி விவசாயத்தைத் தொழிலாக மேற்கொண்டார். பின் மிதிவண்டிக் கடை நடத்தினார். மின் இணைப்புப் பணிகள், மோட்டார் காயில் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டார். பின் நாடக, திரைப்படத் துறையில் பணிபுரிந்தார். மணமானவர். மனைவி பாவாயம்மாள். இவர்களுக்கு இரு மகன்கள்; ஒரு மகள்.

பி.கே. முத்துசாமி நூல்கள்
எம்.ஜி.ஆர். காப்பியம்

இலக்கிய வாழ்க்கை

பி.கே. முத்துசாமி, திராவிட இயக்கத் தலைவர்களான ஈ.வெ.ரா., அண்ணா போன்றோரைக் குறித்து, ‘அண்ணா அறுபது’, ‘பெரியார் புரட்சி காப்பியம்’ போன்ற பல நூல்களை எழுதினார். 15 ஆயிரம் வெண்பாக்களையும் 1000 கவிதைகளையும் எழுதினார். பெரியார், அண்ணா, எம்ஜிஆர்., போன்றோரைப் பாராட்டி தனித்தனியே வெண்பாக்களை எழுதினார். 'பெரியார் புரட்சி காப்பியம்' நூல் 3000 வெண்பாக்களைக் கொண்டது.

பி.கே. முத்துசாமி, 'கலைதேவி', 'தேவதை' எனப் பொது வாசிப்புக்குரிய நாவல்களை எழுதினார்.

பி.கே. முத்துசாமியின் பல படைப்புகள் அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன.

அரசியல்

பி.கே. முத்துசாமி, ஈ.வெ.ரா.வின் மீது மதிப்பு கொண்டிருந்தார். அண்ணாதுரையால் திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

நாடகம்

பி.கே. முத்துசாமி, திராவிட இயக்கங்களின் மீது கொண்ட பற்றால் பல நாடகங்களை எழுதினார். சி.பி. சிற்றரசுவின் ’நச்சுக்கோப்பை’, எம்.ஆர். ராதாவின் ‘போர்வாள்’, ‘தூக்குமேடை’ போன்ற நாடகங்களைத் தன் சொந்தச் செலவில் நடத்தினார்.

தமிழக அரசின் நிதி உதவி மற்றும் பாராட்டு (படம் நன்றி: தினமணி)

திரை வாழ்க்கை

சேலத்தில் புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பி.கே. முத்துசாமியின் நண்பர்கள் சிலர் பணியாற்றினார். அவர்கள் மூலம் திரைப்படத்துறையில் முத்துசாமிக்கு ஆர்வம் உண்டானது. ஏற்கனவே நாடகம் தயாரித்து, இயக்கி நடித்த அனுபவம் கொண்ட முத்துசாமி, திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க விரும்பினார். தனக்குச் சொந்தமாக இருந்த விவசாய நிலங்களை விற்றுத் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டார்.

’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் படத்தைத் தயாரிக்க முற்பட்டார். ஆனால், செலவு அதிகமானதால் படத்தை ஏகே. வேலனிடம் கையளித்து விட்டு விலகினார்.

திரைப் பாடல்கள்

’தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில், “'மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு கிளை பாரமா - பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா ' என்ற பாடலை எழுதிக் கவிஞராக அறிமுகமானார்.

தொடர்ந்து "மாப்பிள்ளை வந்தார்... மாப்பிள்ளை வந்தார்... மாட்டு வண்டியிலே..." ‘"சின்ன சின்ன நடை நடந்து... செம்பவள வாய் திறந்து".. போன்ற பல பாடல்களை எழுதினார்.

சர்ச்சை

பி.கே. முத்துசாமி, எம்.ஜி.ஆர். நடித்த ‘மருத நாட்டு இளவரசி’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், தான் வாசிக்க அளித்திருந்த பிரதியை மு. கருணாநிதி தன் பெயரை இட்டுப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விருதுகள்

  • திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் அளித்த வெண்பா வேந்தர் பட்டம்
  • சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை அளித்த தமிழ் வாகைப் பரிசல்
  • சேலம் கே.ஆர்.ஜி. நாகப்பன் – இராஜம்மாள் அறக்கட்டளை அளித்த வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது
  • தமிழக அரசின் ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி மற்றும் நினைவுப் பரிசு

பாடல்கள்

மதிப்பீடு

பி.கே. முத்துசாமி, மண்ணின் மரபு சார்ந்த இலக்கிய நயமிக்க திரைப்பாடல்களை எழுதியவராகவும், அரசியல் தலைவர்கள் மீது சிற்றிலக்கியங்களை, மரபுப் பாடல்களை இயற்றிய கவிஞராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • அண்ணா அறுபது
  • அண்ணா கோவை
  • பெரியார் புரட்சி காப்பியம்
  • பெரியார் பிள்ளைத் தமிழ்
  • எம்.ஜி.ஆர். காப்பியம்
  • புரட்சி தலைவியின் புரட்சி காப்பியம்
  • அம்மா அந்தாதி ஆயிரம்
  • அருள்மிகு அம்மா தாலாட்டு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-May-2024, 09:09:40 IST