under review

நல்வழி

From Tamil Wiki
Revision as of 15:54, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நல்வழி (பொ.யு. 12-ம் நூற்றாண்டு) ஔவையார் எழுதிய அற நூல்களுள் ஒன்று. வாழ்க்கையில் பின்பற்றத்தக்க நல்வழிகளைப் பற்றிக் கூறுவதால் ‘நல்வழி’ எனும் பெயர் பெற்றது.

தோற்றம்

12-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஔவையாரால் பாடப்பட்ட நீதி இலக்கிய நூல் நல்வழி. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகியன ஔவையாரால் பாடப்பட்ட பிற நீதி நூல்கள்.

நூல் அமைப்பு

மக்கள் நல்வழியில் வாழ்வதற்கான அறக்கருத்துகளைக் கூறுவதால், இந்நூல் ‘நல்வழி’ என்று பெயர் பெற்றது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது.

உள்ளடக்கம்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா

- என்பது நல்வழியின் கடவுள் வாழ்த்து.

அறத்தின் தன்மை, செல்வத்தின் சிறப்பு, ஈகையின் பெருமை, உழவின் இன்றியமையாமை, நன்மை, தீமைகளின் விளைவுகள் என வாழ்க்கையில் பின்பற்றத் தக்கப் பல அறிவுரைகளை செய்யுள் வடிவில் நல்வழி கூறுகிறது.

பாடல் நடை

செல்வத்தின் தன்மை

ஆறிடும் மேடும்மடுவும் போலாம் செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்! - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உள்நீர்மை வீறும் உயர்ந்து

வள்ளலின் இயல்பு

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லைஎன மாட்டார் இசைந்து

இன்சொல்லின் சிறப்பு

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குடைப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்

தீவினையின் விளைவுகள்

செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்றறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்

தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை யென்செயலா மூரெல்லா மொன்றா
வெறுத்தாலும் போமோ விதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2024, 19:22:28 IST