யோகம் (பயிற்சிகள்)

From Tamil Wiki

யோகம் (பயிற்சிகள்) இந்திய ஆளுமைப் பயிற்சி முறை. தொன்மையான யோக மரபின்படி உடலையும் உள்ளத்தையும் பயிற்றுவிக்கும் வழிமுறைகளின் தொகுப்பு. தொன்மையான யோகமுறை இந்தியாவில் இந்து, சமண, பௌத்த மரபுகளில் பலவாறாக வளர்ச்சியடைந்து வந்தது. பிற பயிற்சிமுறைகளுடன் கலந்து விரிவடைந்தது. இன்று நவீன ஆளுமைப்பயிற்சியாக உலகமெங்கும் பரவியுள்ளது.

பார்க்க : யோகம்

ஆசிரியர்

யோக மரபின் முதலாசிரியர் என பதஞ்சலி முனிவர் கருதப்படுகிறார். இவருடைய காலகட்டம் பொமு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் என பொதுவாக ஊகிக்கப்படுகிறது. பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரம் என்னும் நூலே யோகத்தின் முதன்மைநூலாகும். இந்நூல் இன்றும் ஒரு முதன்மையான நூலாக பயிலப்படுகிறது. ஏராளமான உரைகளும் விளக்கங்களும் இந்நுலுக்கு உள்ளன.

தரிசனம்

யோகம் இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனமாக அது சொல்லப்படுகிறது. பலநூல்களில் சாங்கியயோகம் என்றே குறிப்பிடப்படுகிறது. (பார்க்க யோகம் (தரிசனம்) )

யோக மரபுகள்

இன்றிருக்கும் யோகச் செயல்பாடுகளின் அடிப்படையில் ஐந்து யோகம் மரபுகள் இருந்தன என்றும் அவை ஒன்றுடனொன்று கலந்து இன்றைய யோக முறைமை உருவாகியிருக்கிறது என்றும் கூறலாம் அவையாவன

  1. பதஞ்சலி யோகம் : பதஞ்சலி யோகசூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.சாங்கிய தரிசனத்தின் துணைத்தரிசனமாக உருவாகி வந்தது. புருஷன் தன்னுடைய மகத், அகங்காரம் வழியாக உருவாக்கிக்கொள்ளும் இயற்கையுடனான உறவு வழியாக தன்னை அறிந்து வகுத்துக்கொள்வதை தடுத்து தன் தூய உருவுக்கு மீள்வதற்கான பயிற்சிகள் கொண்டது. பிரகிருதி புருஷஞானம் அடைவதே யோகம் அளிக்கும் மீட்பு என வரையறை செய்கிறது. மரபுயோகம் என்று இதுவே கூறப்படுகிறது
  2. வைதிக யோகம் : வைதிகர்களில் ஒரு தரப்பினர் வேதங்களிலேயே யோகத்தின் வேர்கள் உள்ளன என்றும், உபநிடதங்களில் யோகம் பேசப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். ஸ்வேதாஸ்வேதர உபநிடதம் போன்றவை யோகத்திற்கு இணையான நில பயிற்சிகளைப் பற்றிச் சொல்கின்றன (பார்க்க : யோகம் (வேதாந்தம்) )
  3. ஹடயோகம் : உடலை பல்வேறு பயிற்சிகள் வழியாக செம்மையாக்கி, உடலை கருவியாகக் கொண்டு மீட்பை அடைவது இது. இந்த முறையே யோகத்தில் இன்றுள்ள பல்வேறு உடல்சார்ந்த பயிற்சிநிலைகளை உருவாக்கியது. இவை பின்னர் பதஞ்சலி யோகத்தில் உள்ள எட்டு கூறுகளில் ஆசனம் என்னும் கூறுடன் இணைக்கப்பட்டன. பதஞ்சலி கூறும் ஆசனம் சரியான படி அமர்வது மட்டுமே. ஹடயோக யோகாசன முறையில் நூற்றுக்கும் மேலான உடல்வைப்புகள் உள்ளன. ஹடயோகம் உடல்வைப்புகளை மேலும் பல நுணுக்கமான குறியீடுகளாகவும் விரிக்கிறது. எட்டு அரியபேறுகள் (சித்திகள்) உட்பட பல நிலைகளை அதனூடாக அடையலாமென போதிக்கிறது.. ( பார்க்க ஹட யோகம்)
  4. வாசி யோகம் : மூச்சுப்பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு உயிரைப் பழக்குவது வாசியோகம். தமிழ்ச்சித்தர் மரபு வாசியோகத்தின் பலநிலைகளை பேணி வருகிறது. இது பதஞ்சலியின் யோகத்தின் எட்டு கூறுகளில் பிராணயாமம் என்னும் பகுதியில் இணைந்தது. ஆனால் வாசியோகம் மீட்புக்கான முதன்மை வழியாகவே மூச்சைப் பயிற்றுதலை முன்வைக்கிறது ( பார்க்க வாசி யோகம்)
  5. குண்டலினி யோகம்: இந்தியாவின் மறைஞானச் சடங்குகள் (தாந்த்ரீகம்) சைவம், சாக்தம் சார்ந்து அந்த மதங்களுக்குள் தனித் துணைமதங்களாக நீடித்து வந்தன. அவை தங்களுக்கான யோகமுறைமைகளை உருவாக்கிக் கொண்டன. பல்வேறு வகை குறியீட்டுச் சடங்குகள் கொண்டவை அவை. அச்சடங்குகளில் உடல் முதன்மையான கருவி. உடலை ஏழு ஆற்றல்களின் உறைவிடமாக அவை கண்டன. அந்த ஆற்றல் மையங்களை சக்கரங்களாகவும், தாமரைகளாகவும் உருவகித்தன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை,சகஸ்ரம் என ஏழு மையங்கள் உடலில் உள்ளன. குண்டலினி என்னும் உயிரின் ஆதாரவிசை மூலாதாரத்தில் உறங்கியுள்ளது என்றும் அது விழித்தெழுந்து சகஸ்ரத்தை அடைவதற்கான முயற்சியே யோகம் என இந்த மரபு கூறுகிறது. (குண்டலினி யோகம்)

இந்த ஐந்து யோக மரபுகளும் வெவ்வேறானவை. ஆனால் அண்மையில் இவை ஐந்தும் ஒன்றுடனொன்று கலந்துவிட்டன. சில நவீன ஆசிரியர்கள் இவற்றை கலந்து புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர்.