under review

மனவாசகங்கடந்தார்

From Tamil Wiki
Revision as of 14:07, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மனவாசகங்கடந்தார்(திருவதிகை மனவாசகங்கடந்தார்) (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூலை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மனவாசகங்கடந்தார்‌ பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இவர்‌ திருவதிகையில் வாழ்ந்தவர். மெய்கண்டாரின்‌ 49 மாணாக்கர்களில் ஒருவர் என்பது பின்வரும் பாயிரச் செய்யுளிலிருந்து அறியவருகிறது.

“மன்னதிகை வாழும்‌ மனவாசங்கடந்தான்‌
மின்னனைய வாழுவிலுரு மெய்கண்டான்‌ - பன்னுமறை
வண்மை தரும்‌ ஆகமநூல்‌ வைத்த பொருள்‌ வழுவா
உண்மை விளக்கம்‌ செய்தான்‌ உற்று”

இப்பாயிரம்‌ இவ்வாசிரியரை மெய்கண்டாரின்‌ மாணாக்கர்‌ எனக்‌ குறிப்பிடுவதால்‌ சிவஞான சித்தியார்‌ அருளிய அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு இவர்‌ ஒருசாலை மாணக்கர்‌ ஆவர்‌ என்பது விளங்கும்‌. திருவதிகையில்‌ இவர்‌ பெயரால்‌ தெற்கு வீதியில்‌ ஒரு திருமடம்‌ உள்ளது. இவையன்றி இவரைப்‌ பற்றிய வேறு வரலாறு ஏதும்‌ தெரியவில்லை. இவர்‌ வாழ்ந்த காலம்‌ மெய்கண்டாரின்‌ காலமான பொ.யு.1232-க்கு அருகில் என்பது ஆராய்ச்சியாளர்களின்‌ கருத்து.

ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை

மனவாசகங்கடந்தார் இயற்றிய சைவசித்தாந்த நூல் உண்மை விளக்கம். சைவ சித்தாந்தத்தில் அறிய வேண்டிய பசு, பதி, பாசம் பற்றிய உண்மைகளை விளக்கிக் கூறுவதால்‌ இப்பெயர்‌ பெற்றது. மாணவரான மனவாசகங் கடந்தார் கேள்விகள் எழுப்ப, குருநாதர் மெய்கண்டார், அவ்வினாக்களுக்கு விடை கூறும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.

மெய்ப்பொருளாகிய இறைவனின்‌ இயல்பையும்‌ அந்த இறைவனிடத்து அடங்கியுள்ள பசு பாசங்களின்‌ இயல்பையும்‌ விளக்கும்‌ உண்மை விளக்கம். சிவஞானபோதம்‌ முதலிய விரிவான சாத்திரங்களைக்‌ கற்க தொடக்க நூலாக அமைகிறது.

மெய்கண்டார், அருணந்தி சிவம் ஆகிய இருவரும் பதியை முதலில் வைத்துப் பாடியதுபோலல்லாமல் மனவாசகங்‌ கடந்தார்‌ பாசத்தை முன்‌ வைத்துப்‌ பாசம்‌, பசு, பதி என்ற முறையில்‌ வரிசைப்படுத்தி விளக்குகிறார். நடராச தத்துவத்தை இந்நூலில் சிறப்பாக விளக்குகிறார்.

பாடல் நடை

நாற்கோணம்‌ பூமிபுன னண்ணுமதீ யின்பாதி
யேற்குமனல்‌ முக்கோண மெப்போதும்‌ - ஆக்கும்‌
அறுகோணங் கால்வட்ட மாகாய்‌ மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று

உசாத்துணை

உண்மை விளக்கம்- ஆனந்தராசன் உரை,ஆர்கைவ் வலைத்தளம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jun-2024, 09:41:20 IST