அம்மன் கூத்து தோற்றக் கதை
அம்மன் கூத்து தோற்றக் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடலகளுள் ஒன்று. கணியான் கூத்தின் துணை ஆட்டமான அம்மன் கூத்து தொடர்பான வாய்மொழி கதைப்பாடல் இது. இது கணியான் சாதியினரின் காளி வழிபாடு குறித்த கதைப்பாடல். நாட்டார் கோவில் திருவிழாக்களில் பாடப்படுகிறது.
பார்க்க: அம்மன் கூத்து
கதை
கணியான் சாதியினரும், பிற சாதியினரும் வாழ்ந்த ஊரில் காளி கோவில் ஒன்றிருந்தது. அதில் ஆண்டுதோறும் நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. நரபலிக்குரிய சிறுவனையும், படையல் பொருட்களையும் ஊர் மக்கள் சேர்ந்து கோவிலுக்கு அனுப்புவர். அவர்களுள் ஒரு முறை வைத்து ஊரில் கன்னி கழியாத சிறுவனை அனுப்புவர்.
பலிச்சிறுவனையும், மங்கல பொருட்களையும் கோவிலினுள் அனுப்பிவிட்டு முன்கதவைச் சாத்திவிடுவர். மறுநாள் கோவிலைத் திறக்கும் போது பலிச்சிறுவன் இறந்து கிடப்பான். அவன் சடலத்தை எடுத்து வந்து காரியம் செய்வது வழக்கமாக இருந்தது. ஒருமுறை கணியான் சாதி சிறுவன் பலிக்கு செல்லும் வழக்கம் வந்தது. அவனை ஊர் மக்கள் கோவிலினுள் அனுப்பிவிட்டு முன்கதவை அடைத்துவிட்டனர்.
சிறுவன் கோவிலினுள் சென்றதும் வேப்பமரத்தில் ஏறி அதன் குழையைப் பறித்து இடையில் கட்டிக் கொண்டான். மடப்பள்ளியில் இருந்த சாம்பலை உடலில் பூசிக் கொண்டு மைய கருவறையிலிருந்த காளியின் முன் ஆடினான். இதனை பார்த்த காளி அவனருகே வந்தாள். சிறுவன் தைரியமாக ஆடுவதைக் கண்டு அவனை அணைத்துக் கொண்டாள். மறுநாள் ஊர் மக்கள் கோவிலை திறந்த போது சிறுவன் உயிருடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதன் பின் ஊரில் நரபலி நிறுத்தப்பட்டது. நரபலி கொடுக்கும் நாளில் காளியின் முன் கணியான் சாம்பல் பூசி ஆடுவது வழக்கமானது.
உசாத்துணை
- சடங்கில் கரைந்த கலைகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Nov-2023, 09:07:10 IST