under review

குமரேச சதகம்

From Tamil Wiki
Revision as of 13:59, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குமரேச சதகம் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) திருப்புல்வயலில் கோவில் கொண்ட கந்தசுவாமியைப் பாடிய சதகம் என்னும் சிற்றிலக்கியம். பக்தியைத் தவிரவும் உலக வாழ்வின் உண்மைகளையும் நீதிகளையும் பேசிய நூல்.

ஆசிரியர்

குமரேச சதகத்தை இயற்றியவர் குருபாததாசர். சதகத்தின் இறுதியிலே,

‘பன்னிய புல்வயலில் வாலகும ரேசர்மேற்
பரிந்து 'குருபாத தாசன்'

என்ற வரிகளால் இவர் பெயர் குருபாததாசர் என அறிய வருகிறது.

நூல் அமைப்பு

குமரேச சதகம் புதுக்கோட்டையில் உள்ள திருப்புல்வயலில் கோவில் கொண்ட குமரேசக் கடவுளைப் பாடிய சதகம் என்னும் சிற்றிலக்கியம். காப்பு, அவையடக்க விருத்தம் தவிர சதகத்தின் இலக்கணப்படி 100 விருத்தப்பாக்கள் கொண்டது. ஒவ்வொரு விருத்தமும் உலக வாழ்வின் பொதுவான உண்மைகளையும், இறுதிப்பகுதி முருகனின் அருள், ஆடல் போன்றவற்றையும் கூறி

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
  மலைமேவு குமரேசனே.

என்ற வரிகளோடு முடிகிறது. விருத்தங்கள் அரசர் வணிகர் போன்றோரின் இயல்பு, இவ்வுல வாழ்வில் சிறந்தவையும் அல்லாதவையும், செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும், பொதுவான அறங்கள், நீதிகள் போன்றவற்றைப் பற்றிக் கூறுகின்றன.

குமரேச சதகம் கடன் தந்தவர் வந்து திருப்பிக் கேட்கும்போது முகம் கடுகடுப்பவர், பெரிய பதவி வந்த போது செருக்கோடு நடப்பவர், பகைவரின் சொல்லை மதித்து அதில் மயங்கி அகப்படுவோர், இலஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்குத் துன்பம் செய்பவர், மனைவி வீட்டில் இருக்கப் பரத்தையரை நாடிச் செல்வோர் எனச் சிலவகை மனிதர்களைப் பேய்கள் என்று குறிப்பிட்டுகிறது.

பாடல் நடை

மக்களில் விலங்குகள்

தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
  தள்ளிச்செய் வோர்குரங்கு
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
  தாம்பயன் இலாதமரமாம்

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
  வெறியர்குரை ஞமலியாவர்
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
  மேன்மையில் லாதகழுதை

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
  தூங்கலே சண்டிக்கடா
சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்
  துட்டனே கொட்டுதேளாம்

மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை
  வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
  மலைமேவு குமரேசனே.

சான்றோர் தன்மை

அன்னதா னஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
  ஆபத்தில் வந்தபேர்க்
கபயம் கொடுத்திடுதல் நல்லினம் சேர்ந்திடுதல்
  ஆசிரியன் வழிநின்றவன்

சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
  துணையடி அருச்சனைசெயல்
சோம்பலில் லாமல்உயிர் போகினும் வாய்மைமொழி
  தொல்புவியில் நாட்டியிடுதல்

மன்னரைச் சேர்ந்தொழுகல் கற்புடைய மனைவியொடு
  வைகினும் தாமரையிலை
மருவுநீர் எனவுறுதல் இவையெலாம் மேலவர்தம்
  மாண்பென் றுரைப்பர் அன்றோ

வன்னமயில் மேலிவர்ந் திவ்வுலகை ஒருநொடியில்
  வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
  மலைமேவு குமரேசனே.(99)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2023, 09:11:26 IST