யோகம் (தரிசனம்)

From Tamil Wiki
Revision as of 21:28, 12 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "யோகம் (தரிசனம்) (யோக தர்ஸனம்) இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனம். சாங்கியம் முன்வைக்கும் பிரகிருதி புருஷ ஞானம் என்னும் உயர்நிலையை அடைவ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

யோகம் (தரிசனம்) (யோக தர்ஸனம்) இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனம். சாங்கியம் முன்வைக்கும் பிரகிருதி புருஷ ஞானம் என்னும் உயர்நிலையை அடைவதற்கான பயிற்சிகளை முன்வைக்கும் மரபு. சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனி தரிசனமாக பின்னாளில் வளர்ந்தது. இந்து மதப்பிரிவுகள், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களிலும் ஏற்படைந்தது, நவீன யோகப்பயிற்சி முறையாக மறுமலர்ச்சி அடைந்து உலகமெங்கும் பரவியுள்ளது

( பார்க்க யோகம்)

தோற்றுவாய்

யோக தரிசனம் இந்தியாவின் பண்பாட்டின் தொடக்க காலம் முதலே இருந்துவந்துள்ளது என ஆய்வாளர் கூறுகின்றனர். மொகஞ்சதாரோ ஹரப்பா சுடுமண் இலச்சினைகளில் யோகத்திலமர்ந்த ஒரு சிலை கிடைக்கிறது. அது யோகம் என்னும் கருத்து இருந்திருப்பதற்கான சான்றாகும். சாங்கியம் போலவே யோகமும் வேதமரபு அல்லாத மரபில் இருந்து வந்தது என்பதற்கு இது சான்று.

தரிசனம்

யோகம் இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனமாக அது சொல்லப்படுகிறது. பலநூல்களில் சாங்கியயோகம் என்றே குறிப்பிடப்படுகிறது. சாங்கிய தரிசனம் வேதமரபுக்கு புறம்பானதாக இருந்தாலும் யோகப்பயிற்சிகளைப் பற்றி ஸ்வேதாஸ்வேதர உபநிடதம் விரிவாகப் பேசுகிறது (ஸ்வேதாஸ்வேதரம் பகுதி 2- பாடல் 10)

தனக்கென ஒரு பிரபஞ்சப்பார்வை கொண்டிருந்த சாங்கியம் யோக முறையை தன்னுடைய பயிற்சியாக விரிவாக்கம் செய்துகொண்டது. யோகம் தனக்கான தத்துவத்தை சாங்கியத்திலிருந்து பெற்றுக்கொண்டது. யோகம் சாங்கியத்தில் இருந்து உருவாகவில்லை.

ஆசிரியர்

யோகதரிசனத்தின் முதன்மையாசிரியர் பதஞ்சலி . இவருடைய காலகட்டம் பொமு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் என பொதுவாக ஊகிக்கப்படுகிறது. பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரம் என்னும் நூலே யோகத்தின் முதன்மைநூலாகும். இந்நூல் இன்றும் ஒரு முதன்மையான நூலாக பயிலப்படுகிறது. ஏராளமான உரைகளும் விளக்கங்களும் இந்நுலுக்கு உள்ளன.

பதஞ்சலி யோகத்தை உருவாக்கியவர் அல்ல, அவர் அதுவரையிலான யோக மரபின் பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைத்தவர். பதஞ்சலி அன்றிருந்த வெவ்வேறு யோகமரபுகளை ஒருங்கிணைத்தவர் என்றும், யோகத்தின் தரிசனத்தை சாங்கிய தரிசனத்துடன் இணைத்து தத்துவரீதியாக வலுவான அடித்தளம் அமைத்தவர் என்றும் எஸ்.என். தாஸ்குப்தா கருதுகிறார்.