பிரகிருதி

From Tamil Wiki
Revision as of 18:06, 11 June 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "பிரகிருதி: (ப்ரக்ரிதி) நம்மைச்சூழ்ந்துள்ள பிரபஞ்சப்பொருள். இயற்கை. தானாக இயல்வது. தானாகவே தன்னை பரப்பி நிலைநிறுத்திக் கொள்வது. சம்ஸ்கிருதத்தில் இச்சொல் இயற்கை என்னும் சாதாரண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிரகிருதி: (ப்ரக்ரிதி) நம்மைச்சூழ்ந்துள்ள பிரபஞ்சப்பொருள். இயற்கை. தானாக இயல்வது. தானாகவே தன்னை பரப்பி நிலைநிறுத்திக் கொள்வது. சம்ஸ்கிருதத்தில் இச்சொல் இயற்கை என்னும் சாதாரண பொருளிலும், அனைத்துப் பொருட்களும் அடங்கிய பொருள்வயப் பிரபஞ்சம் என்னும் பொருளிலும், ஒன்றின் இயல்பு என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சாங்கிய தரிசனத்தில் இது முதலியற்கை என்றும், பிரபஞ்சத்தின் மூலப்பொருள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்திய சிந்தனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் பிரகிருதியை விளக்குகின்றன.

சொற்பொருள்

பிரகிருதி என்னும் சொல் ப்ர+க்ருதி என பிரிந்து பொருள் படும். கிருதி என்றால் செய்யப்பட்டது, செயல்கொண்டது என்று பொருள். ப்ர என்றால் முன்னரே இருப்பது, திகழ்வது, பரவுவது என்று பொருள். இச்சொல் யாஸ்கர் இயற்றிய தொன்மையான சம்ஸ்கிருத சொல்லகராதியான யாஸ்க நிருக்தத்தில் இயற்கை, மூலப்பருப்பொருள் என்னும் இரு பொருளில் காணப்படுகிறது.

இச்சொல் சம்ஸ்கிருதத்தில் மூன்றுவகையில் பயன்படுத்தப்படுகிறது.

  • இயற்கை: பிரகிருதி என்னும் சொல் இயற்கை என்னும் பொருளில் சாதாரணமாக கையாளப்படுகிறது. உதாரணமாக பிரகிருதி சௌந்தர்ய: என்றால் இயற்கையின் அழகு.
  • இயல்பு : ஒன்றின் இயல்பை பிரகிருதி என்னும் சொல்லால் குறிப்பிடுவதுண்டு. உதாரணமாக வாத பிரகிருதி என்றால் ஒருவரின் உடலில் வாதம் ஓங்கியிருக்கும் இயல்பு
  • முதலியற்கை : சாங்கியம் போன்ற தரிசனங்களிலும் பிற தத்துவக் கொள்கைகளிலும் பிரகிருதி என்பது பருப்பொருட்களாலான இப்பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் கலைச்சொல். இது நிலம், தீ, காற்று, நீர் என நான்கு பருப்பொருட்களாக முதலிலும் வானமும் சேர்ந்து ஐந்து பருப்பொருட்களாக பின்னரும் பிரிக்கப்பட்டது.

தமிழில் இயற்கை என்னும் சொல் இதற்கு இணையானது. அச்சொல்லும் மேற்குறிப்பிட்ட மூன்று பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் nature என்னும் சொல் முதல் இரண்டையும் matter என்னும் சொல் மூன்றாவது பொருளையும் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது

பிரகிருதி வரையறை

பிரகிருதி எனப்படும் முதலியற்கைக்கு எவ்வகையான வரையறை அளிக்கப்படுகிறது என்பது இந்திய சிந்தனை மரபில் ஒரு குறிப்பிட்ட தத்துவப்பார்வையை வரையறை செய்யும் அம்சங்களில் ஒன்று.

சாங்கியம்

இந்திய சிந்தனை முறைகளில் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியம் பிரகிருதி என்னும் கருத்தை முதன்மையாக முன்வைத்து, அதையே தன் பிரபஞ்சக்கொள்கைகலில் முதன்மையாக முன்வைத்தது. பிரகிருதி பருப்பொருளால் ஆனது. அது எவராலும் படைக்கப்படுவதோ அழிவதோ அல்ல. அதற்கு நோக்கமோ உள்ளுணர்வோ சாரமோ மையமோ இல்லை. அதைக் கடந்த எதனாலும் அது இயக்கப்படுவதுமில்லை. அது தன்னுள் உறையும் சத்வம், தமஸ், ரஜஸ் (நேர்நிலை, எதிர்நிலை, செயலூக்க நிலை) என்னும் மூன்று குணங்களினாலானது. அம்மூன்று குணங்களின் சமநிலையழிவால் அது செயல்நிலை கொள்கிறது. முடிவில்லாத வடிவவேறுபாடுகளை அடைந்து பிரபஞ்சமாக ஆகிறது. பிரபஞ்ச இயக்கம் நிகழ்வது பிரகிருதியிலுள்ள இயல்புகள் மற்றும் அவை இணைவதன் நெறிகளால் மட்டுமே. பிரகிருதியின் முக்குணங்களையும் அறிவது புருஷன் என்னும் தன்னிலை. இதுவே சாங்கியத்தின் கொள்கையாகும்.

பிரகிருதியிலுள்ள குணங்களை அறியும் தன்னிலையே புருஷன் . பிரகிருதி பெருகும்போது புருஷனும் பெருகி பலகோடி தனிப்பிரக்ஞைகளாகிறான். அவனே பிரபஞ்சத்தை அறிகிறான். பிரகிருதியை அவன் தனித்தனிப்பொருட்களாக அறிகிறான். அந்த தனித்தன்னிலை அகன்று அவன் புருஷன் என்னும் ஒற்றைநிலையென தன் அகத்தை ஆக்கிக்கொள்கையில் பிரகிருதியும் தன் முழுமையுருவாக அவன் முன் நிற்கிறது. இந்த பிரகிருதிபுருஷ இணைவே விடுதலை. அதுவே துயரை நீக்கும் வழிமுறை. இது சாங்கியத்தின் துணைத்தரிசனமாகிய யோகம் முன்வைக்கும் பார்வையாகும்.

சாக்தம்

பிரகிருதி என்னும் கருத்துருவம் இந்திய மெய்யியலில் பெரும்பாலும் பெண்பாலாகவே பயன்படுத்தப்படுகிறது. சக்தியின் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது. இப்போதும் பெண்களுக்கு இப்பெயர் போடப்படுகிறது. சாக்த மரபின் படி முழுமுதல் தெய்வமான பராசக்தியின் உலகத்தோற்றம் அல்லது பொருள்வயத் தோற்றமே பிரகிருதி ஆகும்.