பஞ்ச சம்ஸ்காரம்

From Tamil Wiki

பஞ்ச சம்ஸ்காரம்: வைணவர்கள் தங்களை விஷ்ணுவின் பக்தர்கள் அல்லது அடிமைகளாக தங்களுக்கும் பிறருக்கும் அறிவித்துக்கொள்ளும் பொருட்டு செய்யப்படும் சடங்கு. இது பாஞ்சராத்ர ஆகம முறையில் செய்யப்படுகிறது. ராமானுஜ மரபைச் சேர்ந்த வைணவர்களின் முதன்மைச்சடங்காக இது கருதப்படுகிறது

மரபு

வைணவ மரபில் பாஞ்சராத்ர ஆகம முறையில் ஒருவர் வைணவராக ஆகும்பொருட்டுச் செய்யப்படும் அடையாளமேற்றுக்கொள்ளும் சடங்கு. ராமானுஜர் உருவாக்கிய ஶ்ரீ சம்பிரதாயம் இச்சடங்குக்கு முதன்மையிடம் அளிக்கிறது. ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்மாசனாதிபதிகளின் வழிவந்த ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியார்கள் மட்டுமே ம பஞ்சசம்ஸ்கார சடங்குகள் செய்ய அதிகாரம் கொண்டவர்கள்.

சடங்கு

பாஞ்சராத்ர ஆகம முறைப்படி ஒரு வைணவர் விஷ்ணு அன்றி எந்த தெய்வத்தையும் முழுமுதல்தெய்வமாக கொள்வதில்லை என்று ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்யவேண்டும். இதற்கு பிரதிபத்தி என்று பெயர். அதன்பின் அவர் ஓர் ஆசிரியரிடமிருந்து பஞ்சசம்ஸ்காரம் என்னும் சடங்கைச் செய்துகொள்ளவேண்டும். அவை:

  • தாப சம்ஸ்காரம்: உடலில் தோள்பட்டையின்மேல் சூட்டுக்கோலால் சுட்டு விஷ்ணுவின் சங்குசக்கர முத்திரைகளை தழும்பாக்கிக்கொள்ளுதல்
  • புண்ட்ர சம்ஸ்காரம்: திருமாலின் பன்னிரண்டு திருப்பெயர்களைச் சொல்லி, உடலில் நெற்றி, தோள், புயம், மார்பு, நடு வயிறு போன்ற பன்னிரு இடங்களில் திருமண் அணிதல்.
  • நாம சம்ஸ்காரம்: திருமால் மற்றும் வைணவ ஆசாரியார்களின் பெயர்களைச் சூட்டிக்கொள்ளுதல்
  • மந்திர சம்ஸ்காரம்: வைணவ ஆசிரியர்களிடமிருந்து தியானத்துக்கான மந்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல்
  • யாக சம்ஸ்காரம்: வேள்விகள், பூசைகளை கற்றுக்கொள்ளுதல்

நெறி

பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற வைணவர் பஞ்சகால விதி எனப்படும் ஐந்து கால தனிநபர் நெறிகளைக் கடைப்பிடித்து வாழவேண்டும். விஷ்ணுவை மட்டுமே வழிபடுவது, ஆசிரியனுக்கு மட்டுமே தாசனாக இருப்பது இரண்டும் ஒரு வைணவருக்குரிய நோன்புகள். ராமானுஜ மரபைச் சேர்ந்தவர்கள் தங்களை 'அடியேன் ராமானுஜதாசன்' என்று அறிமுகம் செய்துகொள்வார்கள்