பாஞ்சராத்ரம்

From Tamil Wiki

பாஞ்சராத்ரம் : வைணவ ஆகமத் தொகைநூல். தொன்மையான வைணவ வழிபாட்டு மரபு. பாஞ்சராத்ரம் என்பது வேதங்களில் இருந்து உருவான ஒரு வழிபாட்டு இயக்கமாக நீண்டகாலம் இருந்தது. நாராயணன் இதன் முதன்மைத்தெய்வம். ஒரு பாஞ்சராத்ரம் என்னும் குறிப்பிட்ட சடங்கு அல்லது குறியீடு இதன் மையம். இந்த வழிபாட்டு மரபு பின்னர் பிற வழிபாடுகளை இணைத்துக்கொண்டு விரிந்து பாஞ்சராத்ர மதமாக ஆகியது. இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த மரபில் இருந்ததாக தெரிகிறது. அவற்றில் பெரும்பகுதி அழிந்துவிட்டன. வைணவப்பெருமதம் உருவானபோது பாஞ்சராத்ரம் அதற்குள் ஒரு வழிபாட்டு முறையாக நீடித்தது. பாஞ்சராத்ர மரபில் இருந்து உருவான ஆகமநூல்களை பாஞ்சராத்ர ஆகமம் என ஒற்றை நூல்தொகையாக பிற்காலத்தில் ஒருங்கிணைத்தனர்.

ஆகமம்

வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இப்போது கிடைப்பதில்லை. பாஞ்சராத்ர மரபு பின்னர் பாஞ்சராத்ர ஆகமம் ஆக மாறியது.

பாஞ்சராத்ர இயக்கம்

பாஞ்சராத்ர இயக்கம் என்பது வேதகாலத்தில் பாஞ்சராத்ரம் என அழைக்கப்பட்ட ஒரு சடங்கில் இருந்து உருவான வழிபாட்டுமுறை. பின்னர் வைணவப் பெருமரபுக்குள் ஒரு வழிபாட்டியக்கமாக ஆகியது. முதல் சில நூற்றாண்டுக்காலம் ஒரு துணைமதம் என்னும் அளவிலேயே செயல்பட்டது என ஆய்வாளர் ஊகிக்கிறர்கள்.

தொடக்கம்

பஞ்சராத்ர என்ற சொல் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையில் 7.1.10 என்ற வரிகளில் உள்ளது. வேதச்சொல் தெளிவுறும்பொருட்டு ஒரு முனிவர் பாஞ்சராத்ரம் என்னும் சடங்கைச் செய்ததை அது குறிப்பிடுகிறது.

சதபதபிராமணம் (13.6) பாஞ்சராத்ரச் சடங்கின் முதன்மைத்தெய்வம் நாராயணன் என்று குறிப்பிடுகிறது.

மகாபாரதத்தின் நாராயணியப் பகுதி (மகாபாரதம் சாந்திபர்வத்தில் உள்ள நாராயணன் புகழ்பாடும் பகுதி. XII, 335-351) ஏழு ரிஷிகளைக் குறிக்கிறது, அவர்கள் வேதச்சடங்காகிய பாஞ்சராத்ரத்தை செய்தனர். ஆனால் இப்பகுதி பின்னாளில் சேர்க்கப்பட்டது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

பொருள்

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லுக்கு நேர்ப்பொருள் ஐந்து இரவுகள். இச்சொல் பலவாறாக விளக்கப்படுகிறது.

வைணவ ஆகமநூல்களில் ஒன்றாகிய நாரதீய சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவுநிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப்பெயர் என்று சொல்லப்படுகிறது

இதன் தொடக்கம் பொயு 2 அல்லது பொயு 3 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த இயக்கத்தின் முதன்மைத்தெய்வம் நாராயணன். பின்னர் விஷ்ணுவின் வெவ்வேறு வடிவங்கள் இதில் இணைந்துகொண்டே இருந்தன. விளைவாக இன்று வைணவம் என அழைக்கப்படும் மதமரபு உருவாகி வந்தது. இந்தப் பரிணாமம் பொயு 14 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியாக நிகழ்ந்தது.

பாஞ்சராத்ர இயக்கத்தின் தொன்மையான நூலாக இன்று கிடைப்பது சாண்டில்யர் (பொயு 100) எழுதிய சாண்டில்யசூத்ரங்கள். இவை நாராயண வழிபாட்டைச் சேர்ந்தவை.

பொயு 2 ஆம் நூற்றாண்டு முதலே பாஞ்சராத்ர இயக்கம் தென்னிந்தியாவில் இருந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. அத்வைதம் மரபைச் சேர்ந்த வேந்தாந்தியான சங்கரர் பொயு 8 (9) ஆம் நூற்றாண்டில் பாஞ்சராத்ர இயக்கத்தை கண்டித்து எழுதியுள்ளார்.

ராமானுஜர் (பொயு 1017-1137) பாஞ்சராத்ர மரபையே தனக்கு உகந்ததாக முன்வைத்தார்.

தொன்மம்

நாராயணன் ஐந்து இரவுகளிலாகச் செய்த பெருவேள்வியின்படி இப்பிரபஞ்சமாக தான் மாறினார் என்ற தொன்மம் சாண்டில்யசூத்திரங்களிலுள்ளது. நாராயணன் என்னும் முனிவரை அது குறிப்பிடுகிறது என்று ஒரு தரப்பு உண்டு (ஆக்ஸ்போர்டு தத்துவ அகராதி அவ்வாறு குறிப்பிடுகிறது) அருவமான இறையுருவகாமிய பிரம்மம் ஈஸ்வரன் என்னும் அனைத்திலும் உறையும் செயல்வடிவமாக ஆவதைப் பற்றிய கவித்துவ உருவகம் அது.

சொற்பொருள்

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லிற்கு ஐந்து இரவுகள் என்று பொருள். இந்நூலின் பொருள் கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது.

  • ஈஸ்வரசம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது
  • நாரத சம்ஹிதையில்
  • ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந்நூல்கள் பேசுவதனால் இப்பெயர் என சொல்கிறது

வரலாறு

வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர் முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.

மும்மணிகள்

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாஸ்வதம், பௌஷ்கரம், ஜெயாக்கியம் ஆகியவை மூன்றும் முக்கியமானவை. இவை ரத்னத்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகமசம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை.

பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஜெயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்மசம்ஹிதை உருவானது. இன்று ஜெயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வர சம்ஹிதையும், காஞ்சி வைகுண்டப்பெருமாள் ஆலயத்தில் ஜெயாக்ய சம்ஹிதையும், கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் ஈஸ்வர சம்ஹிதையும், கும்பகோணம் மற்றும் திருமோரூரில் ஸ்ரீபிரசன்ன சம்ஹிதையும் பின்பற்றப்படுகின்றன

அமைப்பு

பாஞ்சாரத்ர ஆகமம் சுக்லயஜுர் வேதத்தின் ஏகாயன பிரிவை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆலயங்களில் பாடப்படுவதற்கான அனுமதி உள்ளமையால் இந்த ஆகமம் ஆழ்வார் காலத்திற்குப் பின் உருவானது எனப்படுகிறது.

இந்நூல் கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுக்கிறது

  • பிராசாத (ஆலயம்)
  • பிரதிமா (சிலை)
  • பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
  • பூஜா (வழிபாடு)
  • பிராயச்சித்தம் (பிழையீடு)
  • உத்ஸவம் (விழா)
  • ஆசாரம் (நெறி)
  • மந்திரம் (மந்திரங்கள்)
  • யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
  • தீக்ஷை (நோன்பு)

பாஞ்சராத்த ஆகமம் விஷ்ணுவின் ஐந்து நிலைகளை விளக்குகிறது. அவை முறையே

  • பரம் (மிக உயர்ந்த, அறியப்பட முடியாத நிலை)
  • வியூகம் (வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன் ஆகிய நான்கு வடிவங்களில் இறைவன் வெளிப்படும் நிலை)
  • விபவம் (திருமாலின் அவதாரங்கள்)
  • அந்தர்யாமி (அனைத்திலும் உள்ளுறைந்திருகும் நிலை. உள்ளத்தில் திகழும் நிலை)
  • அர்ச்சம் (வழிபடப்படும் சிலைகள் மற்றும் உருவங்கள்)

உசாத்துணை