பாஞ்சராத்ரம்

From Tamil Wiki
Revision as of 16:11, 28 May 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "பாஞ்சராத்ரம் : வைணவ ஆகமநூல். வைணவ ஆலயங்களின் அமைப்பு,வழிபாட்டு முறை ஆகியவற்றை விளக்கும் நூல்களில் ஒன்று == ஆகமம் == வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாஞ்சராத்ரம் : வைணவ ஆகமநூல். வைணவ ஆலயங்களின் அமைப்பு,வழிபாட்டு முறை ஆகியவற்றை விளக்கும் நூல்களில் ஒன்று

ஆகமம்

வழிபாடு, ஆலய அமைப்பு ஆகியவற்றைச் சொல்லும் நூல்கள் ஆகமம் எனப்படுகின்றன. வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரண்டு. பிற ஆகமங்கள் இப்போது கிடைப்பதில்லை.

சொற்பொருள்

பாஞ்சராத்ரம் என்னும் சொல்லிற்கு ஐந்து இரவுகள் என்று பொருள். இந்நூலின் பொருள் கீழ்க்கண்டவாறு விளக்கப்படுகிறது.

  • ஈஸ்வரசம்ஹிதையில் இந்த ஆகமம் சாண்டில்யர், ஔபாக்யானர், மஞ்சியாயனர், கௌரிகர், பாரத்வாஜர் ஆகிய ஐந்து முனிவர்களுக்குச் சொல்லப்பட்டதனால் இப்பெயர் அமைந்தது எனப்படுகிறது
  • நாரத சம்ஹிதையில் தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசாயிகம் என்னும் ஐந்து அறிவுநிலைகளைப் பற்றிப் பேசுவதனால் இப்பெயர் என்று சொல்லப்படுகிறது
  • ஸ்ரீபிரசன்ன சம்ஹிதை விஷ்ணுவின் பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளை இந்நூல்கள் பேசுவதனால் இப்பெயர் என சொல்கிறது

வரலாறு

வைகானஸ ஆகமமே தொன்மையானது என்று கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகானஸ ஆகமம் பின்பற்றப்பட்டதாகவும், ராமானுஜர் அதை பாஞ்சராத்ர் முறைக்கு மாற்றியதாகவும் வைணவர்களால் கூறப்படுகிறது.

மும்மணிகள்

பாஞ்சராத்ர ஆகமத்தின் சம்ஹிதைகள் 108. இவற்றில் சாஸ்வதம், பௌஷ்கரம், ஐயாக்கியம் ஆகியவை மூன்றும் முக்கியமானவை. இவை ரத்னத்ரயம் (மும்மணிகள்) எனப்படுகின்றன. இவையே பிற்கால ஆகமசம்ஹிதைகளுக்கு அடிப்படையானவை.

பௌஷ்கர சம்ஹிதையின் விரிவாக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை உருவானது. அதிலிருந்து ஈஸ்வர சம்ஹிதை உருவானது. ஐயாக்ய சம்ஹிதையில் இருந்து பாத்மசம்ஹிதை உருவானது. இன்று ஐயாக்ய சம்ஹிதையின் அடிப்படையிலேயே வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

ஸ்ரீரங்கத்தில் பாரமேஸ்வர சம்ஹிதையும், காஞ்சி வைகுண்டப்பெருமாள் ஆலயத்தில் ஐயாக்ய சம்ஹிதையும், கர்நாடக மாநிலம் மேல்கோட்டையில் ஈஸ்வர சம்ஹிதையும், கும்பகோணம் மற்றும் திருமோரூரில் ஸ்ரீபிரசனன்ன சம்ஹிதையும் பின்பற்றப்படுகின்றன

அமைப்பு

பாஞ்சாரத்ர ஆகமம் சுக்லயஜுர் வேதத்தின் ஏகாயன பிரிவை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆலயங்களில் பாடப்படுவதற்கான அனுமதி உள்ளமையால் இந்த ஆகமம் ஆழ்வார் காலத்திற்குப் பின் உருவானது எனப்படுகிறது.

இந்நூல் கீழ்க்கண்ட பிரிவுகளில் நெறிகளை வகுக்கிறது

  • பிராசாத (ஆலயம்)
  • பிரதிமா (சிலை)
  • பிரதிஷ்டா (சிலைநிறுவுதல்)
  • பூஜா (வழிபாடு)
  • பிராயச்சித்தம் (பிழையீடு)
  • உத்ஸவம் (விழா)
  • ஆசாரம் (நெறி)
  • மந்திரம் (மந்திரங்கள்)
  • யந்திரம் (மந்திரம் ஓதப்பட்ட பொருட்கள்)
  • தீக்ஷை (நோன்பு)

பாஞ்சராத்த ஆகமம் விஷ்ணுவின் ஐந்து நிலைகளை விளக்குகிறது. அவை முறையே

  • பரம் (மிக உயர்ந்த, அறியப்பட முடியாத நிலை)
  • வியூகம் (வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன் ஆகிய நான்கு வடிவங்களில் இறைவன் வெளிப்படும் நிலை)
  • விபவம் (திருமாலின் அவதாரங்கள்)
  • அந்தர்யாமி (அனைத்திலும் உள்ளுறைந்திருகும் நிலை. உள்ளத்தில் திகழும் நிலை)
  • அர்ச்சம் (வழிபடப்படும் சிலைகள் மற்றும் உருவங்கள்)

உசாத்துணை

  • திருக்கோவில் அமைப்பும் திருவுருவ அமைதியும் முனைவர் அம்பை மணிவண்ணன்