under review

மூவர் அம்மானை

From Tamil Wiki
Revision as of 08:06, 22 May 2024 by Tamizhkalai (talk | contribs)

மூவர் அம்மானை (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சூ. தாமஸ்.

மூவர் அம்மானை என்ற தலைப்பில் திருவெண்காடு ஆறுமுகசுவாமிகளால் தொகுக்கப்பட்ட நூல் ஒன்றும், 1869-ல் வெளியாகியுள்ளது)

வெளியீடு

மூவர் அம்மானை, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

நூல் அமைப்பு

மூவர் அம்மானை நூலில் ஐம்பது பாடல்கள் இடம்பெற்றன. அம்மானைக் கண்ணிகளாக வினா - விடை வடிவில் பாடல்கள் அமைந்துள்ளன. முதல் இரு அடிகளில் ஒரு கேள்வியும், அடுத்த இரு அடிகளில் விடையும், இறுதி அடியில் வாழ்த்தும், இரண்டு-மூன்று அடிகளில் மடக்கும், கலித்தாழிசையும் இந்நூலில் அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

மூவர் அம்மானை மறைவேதங்களில் கூறப்படும் இயேசுவின் அற்புதங்களையும், சீடர்கள் மற்றும் யூதேயா மக்களின் நிலையையும் கூறும் நூலாக அமைந்துள்ளது. இந்நூலில் இயேசுவின் பெருமைகள், இயேசுவின் அன்னையினது புகழ், மறை வேதத்தில் கூறப்பட்டுள்ள மக்களின் நிலை, குறுகிய காலமே வாழ்ந்த இயேசுவின் நற்பணிகள், நற்குணங்கள், வள்ளல் தன்மை, நோயுற்றோரைக் குணப்படுத்துதல், வேதம் போதித்தல், மக்களை அறவுரை கூறி நல்வழிப்படுத்துதல் போன்ற செய்திகள் இடம் பெற்றன.

பாடல் நடை

இயேசுவின் அற்புதச் செயல்கள்

புலவோர் புகழ்நசரைப் பூவை மரிமைந்தன்
அலைகடலின் மேல்நடந்தார் அன்றொருநாள் அம்மானை
அலைகடலின்‌ மேல்நடந்தார்‌ அன்றொருநா ளாமாகில்‌
தலைகால்‌ அமிழாதோ தண்ணீரில்‌ அம்மானை
கால்தலை யேதந்தக் கடவுளுக்கே அம்மானை


கூறுபுகழ் நன்னசரைக் கொற்ற மரிமகனார்
ஆறுகுடம்‌ நீரைரரசம்‌ ஆக்கினார்‌ அம்மானை
ஆறுகுடம் நீரைரசம் ஆக்கினாரே யாமாகில்
பாரில் அமுதும் கறியும் பண்ணுவரோ அம்மானை
வானமுதை யார்க்கும் வழங்கினரே அம்மானை

இயேசு குணமளித்தல்

காவிவயல் சூழ் நசரைக் கத்தன் திருப்பதத்தைப்
பாவியொரு பெண்தொடவே பார்த்திருந்தார் அம்மானை
பாவியொரு பெண்‌ தொடவே பார்த்திருந்தா ராமாகில்‌
சீவியரைப்‌ பாவியவள்‌ தீண்டியதேன்‌ அம்மானை
தீண்டியதும் மாசுதனைத் தீர்ப்பதற்கே அம்மானை


தருவுயரும்‌ நன்னசரைத்‌ தம்பிரா னார்பிறவிக்‌
குருடருக்கும் பார்வை கொடுத்தனர்காண் அம்மானை
குருடருக்கும்‌ பார்வை கொடுத்தனரே யாமாகில்‌
திருடனைப்போ லேனவரைத்‌ தேடினா ரம்மானை
தேடாரோ வம்பு தினம்புரிந்தால் அம்மானை

இயேசுவின் புகழ்

இலகும் புகழ்நசரை எம்பெருமான் தானே
உலகுக் கொளியென்றுரைத்தனர்காண் அம்மானை
உலகுக் கொளியென்றுரைத்தனரே யாமாகில்
பலருமதைக் கண்கொண்டு பார்த்தனரே அம்மானை
காணும் தவமுடையார் கண்டனர் அம்மானை.


தோமிலா நன்னசரைத் தோன்றல் தனைத்தானே
சாமிக்கு மைந்தனெனச் சாற்றினர்கா ணம்மானை
சாமிக்கு மைந்தனெனச் சாற்றினரே யாமாகில்‌
பூமியில்வந்‌ தேன்பிறந்தார்‌ புல்லணையில்‌ அம்மானை
பொருளாசை விட்டிலதாப் புண்ணியரை அம்மானை

சள்ளையிலா நன்னசரைத் தற்பரனோர் ஆலயத்தின்
உள்ளிருந்து நல்லோர்க் குரைபகர்ந்தார் அம்மானை
உள்ளிருந்து நல்லோர்க்‌ குரைபகர்ந்தா ராமாகில்‌
தள்ளையறி யாதொழித்தல் தர்மமோ அம்மானை
வெள்ளைமதி யாளெனவே விண்டிலர் காண் அம்மானை

மதிப்பீடு

மூவர் அம்மானை, சுவிசேடமாகிய மறைவேத நூலில் உள்ள பல செய்திகளின் தொகுப்பாக அமைந்தது. இந்நூலில் இயேசுவின் பெருமை, சிறப்பு, ஆற்றல், நற்குணங்கள் போன்றவை வினா - விடை வடிவில் விளக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ அம்மானை நூல்களில் இலக்கியச் சுவை அமைந்த நூலாகவும், குறிப்பிடத்தகுந்த நூலாகவும் மூவர் அம்மானை நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.