பழனியாண்டவர் மயில் விடு தூது

From Tamil Wiki
Revision as of 20:25, 16 May 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பழனியாண்டவர் மயில் விடு தூது (1953), பழனி முருகனைத் தரிசித்து வந்த நூலின் ஆசிரியர், மீண்டும் அத்தரிசனம் பெறும் வகையில் முருகனை அழைத்துவரும்படி மயிலைத் தூதாக விடுப்பதாக அமைந்துள்ளது. இதன் ஆசிரியர், புலவர் கு. நடேசகவுண்டர்.

வெளியீடு

பழனியாண்டவர் மயில் விடு தூது நூல், பழனி ஸ்ரீதண்டாயுதபாணிசுவாமி தேவஸ்தானத்தால் 1953-ல் வெளியிடப்பட்டது. இதன் புதிய பதிப்பை, மெய்யப்பன் பதிப்பகம், 2015-ல் வெளியிட்டது. பழனியாண்டவர் மயில் விடு தூது நூல், சிற்றிலக்கியக் களஞ்சியம் - 5 தொகுப்பு நூலில், நூலாக இடம் பெற்றது. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன்.2023-ல், மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

பழனியாண்டவர் மயில் விடு தூது நூலை இயற்றியவர் புலவர் கு. நடேசகவுண்டர். இவர் ‘கவியரசு’ என்று போற்றப்பட்டார். சைவ சித்தாந்த சாத்திர அறிஞரான இவர், சேக்கிழார் பிள்ளைத்தமிழுரை, திருவெம்பாவையுரை, எட்டிக்குடி முருகன் பிள்ளைத் தமிழ் எனப் பல்வேறு இலக்கிய, உரை நூல்களை எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று பழனியாண்டவர் மயில் விடு தூது.

நூல் அமைப்பு

பழனி நந்தியாச்சிரமத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சாது சுவாமிகளது விருப்பத்தின்படி இந்நூல் பாடப்பட்டது. இதில் 400 கண்ணிகள் உள்ளன.

உள்ளடக்கம்

பழனியாண்டவர் மயில் விடு தூது நூலில், சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிய தமிழில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். முருகனின் பரத்துவம், சிவஞான சித்தியாரின் கருத்து, சுப்பிரமணியன், முருகன், குகன், குமாரன் போன்ற பெயர்களின் உட்கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. மயிலுக்கு அமைந்த பல்வேறு பெயர்களான சிகாவளம், சிகண்டீ, சிகி, கேதாரம் போன்றவை பற்றிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. முருகன் பெருமை, பழனித்தலச் சிறப்பு, வேலவன் பூசனைச் சிறப்பு, திருவுலாக் காட்சி, கோபப் பிரசாதம், இன்ப அனுபவ நிலை, மயிலின் பெருமை, பிறவிப்பயன் போன்ற தலைப்புகளில் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

பாடல் நடை

காப்பு

அளிபயிலுந் தென்பழனி யாண்டவனை வேண்டிக்

களிமயில்சேர் தூதுக்குக் காப்பாம் - தெளிநறுந்தேன்

தேங்குஞ் சரத்தாமச் செஞ்சடைமுக் கட்கருணை

ஓங்குங் சரத்தா னுவந்து

சற்குருநாதர் வணக்கம்

தஞ்சமென வஞ்சலெனுஞ் சாதுகுரு நாதனிரு

செஞ்சரண நெஞ்சதனில் சேர்தலினால் - விஞ்சும்

அயில்விடலை தென்பழனி யாண்டவன்பா லன்பாய்

மயில்விடுதூ தாகு மகிழ்ந்து.

வித்யாகுரு துதி

கந்தச் சுவாமி கருணா கரச்சாமி

சந்தச் சுவாமிதமப் பச்சாமி - மந்தத்

துயில்விடு மாறருளுந் தூயகழல் போற்ற

மயில்விடு தூது வரும்

முருகனின் பெருமை

ஏசுத லில்லாப் பிரமம்இது வென்றுமறை

பேசுஞ் சிவசுப்பிரமணியன் - தேசமெலாம்

ஆக்கி அளித்தழிக்கு மாற்றலவர் போற்றுபுகழ்

தூக்குஞ் சதாசிவவோஞ் சுப்ரமண்யன் - ஆக்காத

ஆக்கை யிளமை யழியாத தெய்வமணம்

பூக்கும் அழியாப் புகழ்முருகன் - தேக்கரும்பர்

எண்ணா யிரங்கோடி யீண்டிடினுங் காலழகு

நண்ணா வெழின்மிகுந்த நன்முருகன் - எண்ணாமல்

ஓங்காரத்தின் பொருளை யோதாத வேதாவைத்

தாங்காச் சிறைவைத்த தாடாளன் - பூங்காலிற்

றெண்டனிடு தந்தைக்குச் செம்பொருளைச் செப்பியாட்

கொண்ட பரம குருசாமி - விண்டுவையோர்

கையாற் குறுக்குங் கலசமுனிக் கின்னருளைப்

பொய்யா தளித்த புகழ்ச்சாமி - வையமெலாம்

தன்னுடைமை யாகத் தனையுடையார் வேறில்லாக்

கொன்னுடைய சாமி குகசாமி - முன்னர்மதன்

வெந்ததுநன் றென்றுள் வியக்கவவற் குற்சிதஞ்செய்

அந்த மிகுங்குமர னாஞ்சாமி - பந்தமலக்

குற்சிதங்கள் போக்குங் குமாரபர மேசனுயிர்

நற்குகையில் மேயகுக நாயகன் - சிற்பொருள்கள்

அத்தனைக்குந் தம்பெருமா னாளுஞ்சேனாபதி

மதிப்பீடு

பழனியாண்டவர் மயில் விடு தூது நூல் முருகனின் சிறப்பு, பெருமை போன்றவற்றை பக்தி நயத்துடனும், இலக்கியச் சிறப்புடனும் விளக்கும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
  • பழனியாண்டவர் மயில் விடு தூது, மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம், பதிப்பு: 2015
  • பழனியாண்டவர் மயில் விடு தூது: கவியரசு கு. நடேச கவுண்டர்; பழனி ஸ்ரீதண்டாயுதபாணிசுவாமி தேவஸ்தானம், முதல் பதிப்பு: 1953.