வேளை அந்தாதி

From Tamil Wiki
Revision as of 22:29, 13 May 2024 by ASN (talk | contribs)

வேளை அந்தாதி (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சு. தாமஸ்.

வெளியீடு

வேளை அந்தாதி நூல், 'ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று, தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சு. தாமஸ்.

நூல் அமைப்பு

வேளை அந்தாதி வேளாங்கண்ணி மாதா மீது பாடப்பட்ட அந்தாதி நூல். அந்தாதி இலக்கணத்திற்கேற்ப அமைந்த இந்நூல், நூறு பாடல்களைக் கொண்டது.

உள்ளடக்கம்

வேளை அந்தாதி, வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதாவின் சிறப்புகளையும் பெருமைகளையும் அருளும் விதத்தையும் பலவிதங்களில் கூறுகிறது.

பாடல் நடை

அன்னையிடம் வேண்டுதல்

கற்பிற் கிலக்கண மாகிநின் றாய்
ஒரு கர்த்தனைமுன்
அற்புக் கிலக்கண மாய்ப்பயந் தாய்
இந்த அம்புவியோர்
நட்புக்கிலக்கண மாய்த் திகழ்
வேளையை நாடிவந்தாய்
பொற்புக் கிலக்கண மாங்கழல்
போற்றினன் காத்தருளே

காக்கும்‌ படிக்குனை வந்தடைந்‌ தேன்‌
என்‌ கருமவினை
தீர்க்கும்‌ படிக்கறி யேன்மய லே
கொண்டு செல்வமெல்லாம்‌
சேர்க்கும்‌ படிக்கலைந்‌ தேனுயர்‌
வேளையிற்‌ செல்வியறம்‌
பார்க்கும்‌ குடிப்பிறந்‌ தாய்‌
வினை யேற்கருள்‌ பாலிப்பையே

அறிவுக்கு வினா

பூவிற் சிறக்கவும் பொன்னைக்
குவிக்கவும் போகமெல்லாம்
மேவிச் சுகிக்கவும் ஏவுகின் றாய்
மிக்க வேளையன்னை
கோவிற் குதிக்கவும் நாவில்
துதிக்கவும் கோதகன்றே
சீவித் திருக்கவும் செப்பாத
தென்னவென் சிற்றறிவே

சித்தருங்‌ காணருஞ்‌ சீர்‌
மறையோருஞ்‌ சிறந்ததவ
முத்தருந்‌ தான வருந்தொழ
வான்‌ தல முன்னியநீ
பித்தரும்‌ பேதைய ரும்‌
மட வோரும்‌ பிழைசுமந்த
பத்தரும்‌ காணநின்‌ றாய்மெச்சும்‌
வேளையில்‌ பார்புரந்தே

பாரிற்‌ பொருளில்லை
ஈவாரு மில்லை படித்தறிந்து
தேறிப்‌ பயனில்லை செய்யுந்‌
தொழிற்கொரு சீருமில்லை
வேரிப்‌ புனற்றட வேளைநின்று
ஆளும்‌ விமலியுன்றன்‌
பேரிற்‌ பழுதில்லை யெல்லாமென்‌
தீவினைப்‌ பேதமையே

மதிப்பீடு

வேளை அந்தாதி, இலக்கிய, இலக்கணச் சுவையுடன் எளிய தமிழில் இயற்றப்பட்ட நூல். வேளாங்கண்ணி ஆரோக்கிய மேரி அன்னையின் சிறப்பைக் கூறும் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாக வேளை அந்தாதி நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை