under review

சுமைரா அன்வர்

From Tamil Wiki
Revision as of 10:23, 11 May 2024 by Madhusaml (talk | contribs) (Finalised)

சுமைரா அன்வர் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர். சிறுவர்களுக்கான கதைகள், பாடல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சுமைரா அன்வர் இலங்கை குருநாகல் மல்லப்பிட்டியில் அன்வர், சுஹுதா இணையருக்குப் பிறந்தார். குருநாகல் ஹிஸ்புல்லாஹ் மத்திய கல்லூரியில் கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைமாணி பட்டம் பெற்றார்.. தேசிய கல்வி நிறுவனத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். மக்கள் தொடர்புத் துறையில் (Mass Media) டிப்ளோமா சான்றிதழ் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுமைரா அன்வர் 1986 முதல் தினகரன் வாரமஞ்சரி சிறுவர் உலகம் பகுதியில் யார் ஏழைகள்? என்ற தலைப்பில் எழுதினார். அதைத் தொடர்ந்து மித்திரன், தினமுரசு பத்திரிகைகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளான மாதர் மஜ்லிஸ், பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, நாளைய சந்ததி போன்ற நிகழ்ச்சிகளிலும் படைப்புகள் எழுதினார். 'மல்லிகை', 'இளங்கதிர்', 'பூங்காவனம்', மற்றும் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் சஞ்சிகையிலும் இவரது சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், நாவல் என ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 'எண்ணச் சிதறல்கள்'என்ற கவிதைத்தொகுப்பு 2003-ல் வெளியானது. 'விடியலில் ஓர் அஸ்தமனம்', 'வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்' ஆகிய நாவல்களை எழுதினார். சிறுவர்களுக்காக நிறைய கதைகளையும் பாடல்களையும் எழுதினார்.

விருதுகள்

  • 'எண்ணச் சிதறல்கள்' கவிதைத் தொகுப்புக்காக வடமேல் மாகாண இலக்கிய விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருது (2004)
  • 'விடியலில் ஓர் அஸ்தமனம்' நாவலுக்கு வடமேல் மாகாண இலக்கிய விழாவில் சிறந்த நாவலுக்கான விருது (2010)

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • எண்ணச் சிதறல்கள் (2003)
நாவல்
  • விடியலில் ஓர் அஸ்தமனம் (2009)
  • வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (2011)

உசாத்துணை


✅Finalised Page