second review completed

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால்

From Tamil Wiki
ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால்

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால் (ரெவரண்ட் ஜான் பாப்டிஸ்ட் திரிங்கால்; ஜி .பா. திரிங்கால் சுவாமி; ஜான் பாப்டிஸ்ட் திரிங்கால் சுவாமி; ஜே.பி. திரிங்கால் சுவாமி; அருட்திரு திரிங்கால் அடிகளார்; அருட்திரு திரிங்கால் அருளப்பர்). (செப்டம்பர் 8, 1815 – மே 1, 1892). ஃபிரான்சிலிருந்து இந்தியாவுக்கு வந்து மதப்பணியாற்றிய மிஷனரி ஜேசுட் பாதிரியார். முதன் முதலில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை லத்தீனில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவராக அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், ஃபிரான்ஸின் கோத்லூவார் மாநிலத்தில் உள்ள சோல்கனில் 1815-ல் பிறந்தார். சோல்கனில் பள்ளிக் கல்வி கற்றார். தொடர்ந்து இறையியல் கல்வி கற்றார். இயேசு சபையில் சேர்ந்து மதப்பணியாற்றினார். 1844-ல், தமிழ்நாட்டில் மதப் பணியாற்றுவதற்காக கத்தோலிக்க இயேசு சபையினரால் அனுப்பி வைக்கப்பட்டார். ஏப்ரல் 14, 1844 அன்று சென்னைக்கு வந்தார்.

பரிசுத்த புதிய ஏற்பாடு நூல்

மதப்பணிகள்

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், 1844 முதல் 1847 வரை திருச்சியில் பணி செய்த அயர்லாந்து படை வீர்களின் ஆன்ம வழிகாட்டியாகவும், உதவிப் பணியாளராகவும் செயல்பட்டார். இக்காலகட்டத்தில் தமிழை முழுமையாகக் கற்றுப் புலமை பெற்றார். 1847 முதல் 1853 வரை தஞ்சாவூர் இயேசு சபையில் உதவிப் பணியாளராகப் பொறுப்பு வகித்தார். 1853 முதல் 1855 வரை நாகப்பட்டினத்திலும், வேளாங்கண்ணியிலும் இறைப்பணி ஆற்றினார்.

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், 1855-ல் மதுரையில் மதப்பணியாற்ற வந்தார். மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் மதப்பணியாற்றினார். மதுரை வியாகுல அன்னை பேராலயத்தில் பங்குப் பணியாற்றினார்.

மதுரையில் அக்காலத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விடியற்காலையில் தெருவில் பஜனைப் பாடல்களைப் பாடிச் சுற்றி வருவதைக் கண்ட ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், கிறிஸ்தவ பஜனைப் பாடல்களையும் அவ்வாறே பாடி வர குழு ஒன்றை உருவாக்கினார். அக்குழுவினர் கிறிஸ்தவ பஜனைப் பாடல்களை மதுரையின் வெளிவீதி, ஆடிவீதி, ஆவணி மூலவீதிகளில் பாடினர். பாடும் ஆர்வத்தையும், இசைக்கருவிகளை மீட்டும் ஆர்வத்தையும் கிறிஸ்தவ பக்தர்களிடம் வளர்த்தார். மதுரையைச் சுற்றில் உள்ள பல ஊர்களுக்கும் சென்று கிறிஸ்தவ மதத்தை, வேதாகமத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டார்.

சமூகப் பணிகள்

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், விதவை மறுமணம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தினார். திருச்சியில் போதைக்கு அடிமையாக இருந்த ராணுவ வீர்ர்களை அதிலிருந்து மீட்டார். விதவை மறுமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்த சூழலில், செயின்ட் மேரிஸ் தேவாலயத்தின் பொறுப்பில் இருந்த ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால் வெள்ளாள சமூகத்தில் ஒரு விதவை மற்றும் இளைஞருக்கு இடையேயான திருமணத்தை தான் பொறுப்பேற்று நடத்தி வைத்தார்.

கல்விப் பணிகள்

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், 1863-ல், மதுரையில் குருகுலம் சார்ந்த பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அதில் தங்கும் விடுதியையும் அமைத்தார். அப்பள்ளியின் அதிபர், தலைமையாசிரியர், விடுதிக் காப்பாளர், நிதியாளர் எனப் பல பொறுப்புகளைக் கையாண்டார். இப்பள்ளியில் ஏட்டுச் சுவடிப்படிப்பும், காகித நூல் வாசிப்பும் சொல்லித்தரப்பட்டது. இவற்றுடன் கணக்கு, வரலாறு, தமிழ் இலக்கியம், ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது. தமிழ்ச் செய்யுள்கள் கற்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் இங்கு வெளி மாணவர் 27 பேரும் விடுதி மாணவர் 33 பேரும் கல்வி கற்றனர். இப்பள்ளி இன்று தூயமரியன்னை மேல் நிலைப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியில் தலித் மாணவர்களுக்காக பள்ளி ஒன்றைத் தொடங்கினார். தலித்துகளுக்காக என்று அங்கு ஓர் தேவாலயத்தை அமைத்தார். அங்கேயே தம் வாழ்நாள் இறுதிவரை தங்கி கல்வி மற்றும் மதப்பணியாற்றினார்.

இலக்கியப் பணிகள்

ஜான் பாப்டிஸ்ட் ட்ரிங்கால், திருச்சபைச்சரித்திரம், சுவிசேஷச் சொல் ஒப்பீட்டு நூல் போன்ற நூல்களை எழுதினார். முதன் முதலில் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை லத்தீனில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். நூலின் முன்னுரையில் திரிங்கால் சுவாமி “வேத வாக்கியங்களின் அர்த்தம் வேறுபடாமல் இருக்கும் பொருட்டு சிலசமயம் தமிழ் வசனநடையை இரண்டு அல்லது மூன்று வசனங்களைச் சேர்த்து வெளியிட வேண்டியுள்ளது. இவ்வேதாகமங்கள் அனைவருக்கும் அதிக ஞானப் பிரயோசனம் ஆகும் பொருட்டு இவற்றை செந்தமிழ் இலக்கணமாய் எழுதாமல் அனைவரும் வாசித்துப் புரிந்து கொண்டிடும் எளிய நடையில் எழுதி வெளியிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

மறைவு

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், மே 1, 1892-ல், மதுரையில் காலமானார். புனித வியாகுல அன்னை பேராலயத்தின் அருகே இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்காலின் வாழ்க்கை வரலாறு

ஆவணம்

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்காலின் வாழ்க்கையையும், அவரது வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவங்களையும் நாவல் வடிவில், ‘முன்னத்தி’ என்ற தலைப்பில், பாதிரியார் மாற்கு ஸ்டீஃபன் எழுதினார். இந்நூல் ஜான் பாப்டிஸ்ட் டிரிங்காலின் வாழ்க்கையையும், சமூகத்தின் கீழ்மட்டத்தில் வாழ்ந்த மக்களின் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய பணிகளையும் விவரிக்கிறது. இந்நூலை மைக்கேல் புகழேந்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

மதிப்பீடு

ஜான் பாப்டிஸ்ட் டிரிங்கால், ஃபிரான்ஸிலிருந்து வந்து கல்வி மற்றும் மதப்பணி ஆற்றிய முன்னோடிக் கிறிஸ்தவ மத ஆளுமையாகவும், முதன் முதலில் புதிய ஏற்பாட்டை லத்தீனில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த முன்னோடி அறிஞராகவும் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • திருச்சபை சரித்திரம்
  • சுவிசேஷச் சொல் ஒப்பீடு
  • யேசுக்கிறீஸ்துநாதருடைய பரிசுத்த புதிய ஏற்பாடு

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.