first review completed

யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி

From Tamil Wiki
Revision as of 09:35, 16 April 2024 by Tamizhkalai (talk | contribs)
யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி

யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி (இரண்டாம் பதிப்பு: 1936) கும்மி இலக்கிய நூல்களுள் ஒன்று. இலங்கைக்குப் பொறுப்பேற்று ஆட்சி செய்த பிரிட்டிஷ் அதிகாரிகள் மோயாட், லேயாட் என்பவர்களின் பெருமையையும், ஆட்சித் திறனையும் சிறப்பித்துக் கூறுகிறது இந்நூல்.

வெளியீடு

யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி, கொக்குவில் கிழக்கு எம்.எஸ். துரை அவர்களால், கொக்குவில் கிழக்கு சோதிடபிரகாச யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1936-ல் வெளியானது. இதனை இயற்றிய ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை.

நூல் அமைப்பு

நூலின் தொடக்கத்தில் பாயிரம் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விருத்தப்பாவில்,

"அரசியல் புரிந்திவ் வூரை
யாண்டமன் னவர்கள் தம்மிற்
பெரியவர் மோயாட் லேயாட்
பெட்புடன் குடிகள் வாழ
வரிமிகக் குறைவு செய்து
வஞ்சரை யடக்கிக் காத்த
உரிமையு மூர்க்குச் செய்த
வுதவியு முரைக்க லுற்றேன்."

என்ற பாடலுடன் நூல் தொடங்குகிறது.

தொடர்ந்து டச்சுக்காரர்கள் ஆட்சியில் இலங்கை மக்கள் பட்ட துயரம், பின்னர் பிரிட்டிஷாரின் ஆட்சி வந்தது, ஆட்சியாளர்களான மோயாட் லேயாட் இருவரும் இணைந்து செய்த நற்பணிகள், மக்கள் மீதான வரிகளைக் குறைத்தது, உணவுப் பஞ்சம், நீர்ப் பஞ்சம் இல்லாமல் மக்களைக் காத்தது, கல்வி வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு உதவியது, அவர்கள் செய்த அறப்பணிகள், பெருமைகள் இந்நூலில் பாடல் வடிவில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் இறுதியில் ’ஞானப் பெண்ணே’ என்ற சொல்லுடன் முடிவடைகிறது.

பாடல்கள்

டச்சுக்காரர்கள் ஆட்சியின் கொடுமை

பொல்லாத சாதி பறங்கி டச்சுநல்ல
போதஞ்சேர் கல்வி யறிவு சொற்பம்
சொல்ல முடியாக் கொடுமை யுடனே
துரைத்தனஞ் செய்தாராம் ஞானப்பெண்ணே

உத்தி யோகமுறை நான்சொல்லக் கேளடி
ஒப்புக் கணக்கரும் சின்னக் கணக்கரும்
மற்று மதிகாரம் தொம்போகித ரின்னும்
மகாதிசை யுள்ளவர் ஞானப்பெண்ணே

இவ்வண்ணம் பற்பல வேலை நிரூபித்து
ஏழைச் சனத்துக்குச் சோலி வருவித்து
ஐயோ வெவரும் பயந்து வருந்தவே
அரசு செய்தாரவர் ஞானப்பெண்ணே

மார்க்க வழிபாடு சற்றுமில்லை யப்போ
மனிதர் தலைமே லுறுமா வில்லை
பார்க்க முடியாக் கொடுமையுட
னிந்தப் பாராண்டு வந்தனர் ஞானப்பெண்ணே

ஒவ்வோர் புருஷர்க்கும் தங்கள்பேர் சூட்டினர்
உயர்சிவ பக்தி செய்யாது தடுத்தனர்
சைவர்களானாலும் தொம்பிலிப் பென்றபேர்
சொன்ன தறியாயோ ஞானப்பெண்ணே.

கோவில் தலங்களைத் தான் சிதைத்தா ரூரில்
குடிசனங் கல்வியைத் தான்மறித்தார்
வேதனை செய்து வரிவைத்து வாங்கின
விந்தை தெரியுமோ ஞானப்பெண்ணே

பிரிட்டிஷார் ஆட்சித் திறன்

பெற்றபி தாப்போல ராசனு மேநம்மைப்
பேணிவ ளர்க்கவி திகளுண்டு
எப்படிச் செய்தாலுஞ் செய்யட்டு மேழைநா
மென்னசெய் வோஞ்சொல்லு ஞானப்பெண்ணே

நலிதல்செய் யாமற்கு டிகளின் மேலன்பு
நாளும்வ ளர்ப்பவ னே துரையாம்
புலியின்பே ரைப்பூனை சூடிநின் றாலது
புழுத்துச்சா குமடி ஞானப்பெண்ணே.

கொனலித்து ரையிங்கே நீதவா னானது
குடிசனங் கள்செய்த புண்ணியந் தானென்று
பெரியோர்மு தலாக வெத்திறத் தோர்களும்
பேசநாங் கேட்டோமே ஞானப்பெண்ணே.

எந்தநே ரத்திலும் புத்தியா லோசனை
எப்போதுங் கோட்டுவ ழக்கிலே சிந்தனை
இந்தக்க ருத்தன்றி வேறுமு யற்சி
இவரிலே கண்டாயோ ஞானப்பெண்ணே.

கட்டளைச் சட்டமு றைதவ றாமலும்
காரிய வுண்மைவி ரோதம்வ ராமலும்
திட்டமாய்க் கூடிய வாலோச னைபண்ணிச்
சீராய்ந டத்துறார் ஞானப்பெண்ணே

சுத்தமா யெந்தவ ழக்கிலும் பின்னாலே
சோலிகள் வாராமற் றீர்வையெ ழுதுவார்
சித்தமாய்க் கோட்டினி லேவல்செய் வோரெல்லாம்
மெத்தவி யக்கிறார் ஞானப்பெண்ணே.

அரசப் பிரதிநிதி இராமநாதத் துரையின் பெருமை

இராமநா தத்துரை வந்துசேர்ந் தாரிங்கு
எத்திறத் தோர்களும் சித்தம கிழ்ந்தனர்
போன சனங்களுக் கேற்றவி தமவர்
போற்றிந டத்தினார் ஞானப்பெண்ணே

அறிவின்மி குத்தபு லவர்பி ரபுக்க
ளங்கங்கே யுள்ளவே ளாளர்மு தலாக
வறிஞர்க ரைச்சிகண் டாவளை யூராரும்
வந்துகண் டாரடி ஞானப்பெண்ணே

புலோலிப்ப குதியி லுள்ள ரபுக்கள்
பூச்சரங் கொண்டொரு பந்தல்ச மைத்தனர்
நெறிவழி யானசீ ராட்டுக ளெல்லாம்
நேராய்ந டத்தினார் ஞானப்பெண்ணே.

சைவச மயிகள் வித்தியா சாலைக்குத்
தயாளமு டன்போய்ப ரீக்ஷைகள் செய்தனர்
தெய்வத லங்களுங் கண்டுவ ணங்கித்
தெரிசனம் பெற்றனர் ஞானப்பெண்ணே.

இராமசா மிசிவன் கோயில்மா னேசரு
மின்பமு டனேய வரைய ழைத்துத்தன்
கோயில ருச்சனை பூசைவி திப்படி
குணமாய்ந டத்தினார் ஞானப்பெண்ணே

ஐயாவ ரசனால் நாம்பெறும் நன்மையை
மெய்யாக நீர்தான்ந மக்காகப் பேசியே
செய்யாவி டிலிந்தத் தேசத்தில் நாமிருந்
துய்தல ரிதென்றார் ஞானப்பெண்ணே.

இன்னுமிவ் வர்க்குந யந்தரு வாரென்று
மெங்குமொ ருகதை பொங்குகுது
அன்னையொப் பானபி ரதிநி தியன்றி
யார்செய்வார் சொல்லடி ஞானப்பெண்ணே.

மதிப்பீடு

யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மி நூல், டச்சுக்கார்ர்கள் ஆட்சியில் இலங்கை வாழ் மக்கள் பட்ட துயரங்கள், பிரிட்டிஷார்களான மோயாட், லேயாட் ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகள், அவர்களுக்குப் பதிலாக வந்த வேறு துரைகளால் ஏற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள், இராமநாதத் துரையால் இலங்கை வாழ் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளைp பற்றிக் கூறுகிறது.

மன்னராட்சிக்குப் பிறகு வந்த ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட விளைவுகளை, பிரச்சனைகளை மிக விரிவாக ஆவணப்படுத்தியுள்ள நூலாக யாழ்ப்பாண உத்தியோகர் லக்ஷணக் கும்மிநூல் அறியப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.