being created

ராணி மங்கம்மாள்

From Tamil Wiki
ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள் (கனகா) (பொ.யு. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) நாயக்கர் மரபில் ஆட்சி செய்த ராணி. மதுரை நாயக்கரான இவர் திருச்சியைத் தலை நகரமாகக் கொண்டு பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

வரலாறு

”ராணி மங்கம்மாளின் இயற்பெயர் கனகா. சந்திரகிரியைச் சேர்ந்த தப்பகுள லிங்கம நாயக்கரின் மகள். தேவதாசியான கனகா தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்தார். அதன்பிறகு மதுரைக்கு இடம்பெயர்ந்தார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரை(1659 -1682) மணந்தார். இவர்களுக்கு முத்துவீரப்ப நாயக்கர் என்ற மகன் பிறந்தார். மகன் மூன்று வயதானபோது சொக்கநாத நாயக்கர் காலமானார்.” என்ற வரலாறு அவரின் சமகாலத்தைச் சேர்ந்த சின்ன வேகன்னா என்பவரால் எழுதப்பட்டது.

”தேவதாசியான கனகா ராணியாக பட்டம் சூட்டப்படவில்லை. மன்னர் சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூரை ஆண்ட விஜயராகவ நாயக்கரின் மகளைத் திருமணம் செய்ய நினைத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1682-ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது மங்கம்மாளுக்கும் அவருக்கும் பிறந்த அரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் என்ற மூன்று மாத குழந்தை இருந்தது” என சில வரலாற்றாய்வாளர்கள் கருதினர்.

மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொடுத்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார். அன்னையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ஆட்சி செய்தார். தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெரியம்மை நோயால் 1688-ல் காலமானார். கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றெடுத்த சின்ன முத்தம்மாள் கணவரின் பிரிவு தாங்காமல் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி கண்டு உயிரிழந்தார். அம்மன்னரின் மகனான விஜயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் மங்கம்மாள் காப்பாட்சியராக பதவி ஏற்றுக்கொண்டு ராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார்.

நிக்கலாவ் மனுசி (1638-1717) இத்தாலிய பயணி மற்றும் எழுத்தாளர் முகலாயர்களின் காலத்தில் இந்தியாவில் வாழ்க்கையைக் கழித்தவர். ராணி மங்கம்மாளின் கொடைத்தன்மையைப் பற்றிய குறிப்புகளை எழுதினார்.

அரசியல் வாழ்க்கை

ராணி மங்கம்மாள் சொக்கநாத நாயக்கரின் இறப்பிற்குப் பின் உடன்கட்டை ஏறாமல் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்டார். இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது. மகன் 1688-ல் காலமான பின் அவரின் மகனான விஜயரங்க சொக்கநாதரின் சார்பாக ஆட்சி 1706 வரை செய்தார்.

ஆட்சி

ராணி மங்கம்மாள் சிலை

ராணி மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் முகலாய மன்னரான ஒளரங்கசீப், தஞ்சை மராத்தியர்கள், மைசூர், ராமநாதபுரம் திருவிதாங்கூர் போன்ற அரசுகள் மூலம் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அமைதியான வழியை விரும்பிய மங்கம்மாள் முகலாயர்களின் தலைமையின் கீழ் ஆட்சியைக் கொணர்ந்து கப்பம் கட்டினார். மேலும் அவர்களுக்கு பரிசுகள், கட்டணங்கள் வழங்கினார். இதனால் உள்ளூர் போர்களைத் தவிர்த்தார்.

  • மதுரையில் 'மங்கம்மாள் சத்திரம்' என்ற பெரிய அன்னச்சத்திரம் அமைத்தார்.
  • புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ’மங்கம்மாள் சாலை’ என அழைக்கப்பட்டது.
  • குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தார்.
  • பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் தோண்டச்செய்தார்.
  • தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார்.
  • கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது மக்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார்.
  • செளராஷ்டிரர்கள் பிராமணர்களாக ஆக அனுமதித்தார்.
மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை உடையவர். கிறித்துவ மத குருமார்களை சமயப் பேருரை செய்ய அனுமதி அளித்தார். சிறை வைக்கப்பட்டிருந்த 'மெல்லோ' பாதிரியாரை விடுதலை செய்தார். 'போசேத்' என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார். இஸ்லாமியர்களுக்கு மானியம் அளித்தார். 1701-ல் இஸ்லாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பல்லக்கு மற்றும் பொன்னணிகள் பலவற்றை வழங்கினார். ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது,இராணி மங்கம்மாள் தமது செங்கோலை அம்மனின் முன்வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சித்திரை முழுமதி நாளில் ராணி மங்கம்மாளும் இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கி, மீனாட்சி திருமணத்தைக் கண்டனர். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வழிபட்டனர்.

முகலாயர்களுடனான உறவு

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த மராத்திய மன்னர் ராஜாராமைக் கைது செய்ய தம் தளபதி சல்பீகார் அலிகானை அனுப்பினார். சல்பீகார் அலிகான் ஏழாண்டு காலம் செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டார். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அனுப்பினார். மைசூர் மன்னரும் தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர். ராணி மங்கம்மாளும் முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த மதுரையின் பகுதிகளையும் மீட்டார்.

போர்கள்

ராணி மங்கம்மாள் சிற்பம்
திருவிதாங்கூர்ப் போர்

மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக திருவிதாங்கூர் அரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் ரவி வர்மா மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தார். இதனால் தளவாய் நரசப்பையா தலைமையில் மங்கம்மாள் படை அனுப்பி திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தார். திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களைப் பெற்றார்.

தஞ்சைப் போர்

தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்குமிடையில் நல்லுறவு இல்லை. தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜி, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். ராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையரை படைகளுடன் அனுப்பி அப்பகுதிகளை மீட்டார். அப்படை தஞ்சையை அச்சுறுத்தியது. எனவே தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் ராணி மங்கம்மாளின் படைகளுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார்.

மைசூர்ப் போர்

முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினார். 1695-ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டார். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடி அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினார். 1700-ல் மங்கம்மாள் தஞ்சையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தஞ்சை-மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. எனவே போர் முயற்சி கைவிடப்பட்டது.

ராமநாதபுரம் போர்

ராணி மங்கம்மாளின் முதலும் கடைசியுமான மிகப்பெரிய தோல்வியாக ராமநாதபுரம் போர் இருந்தது. மதுரைக்கு எதிராகவும் தஞ்சைக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி இருந்ததால் 1702-ல் ரகுநாத சேதுபதிக்கு எதிராக ராணி மங்கம்மாள் தனது படைகளை அனுப்பினார். இந்தப் போரில் மதுரையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமான தளவாய் நரசப்பைய்யா வீர மரணம் அடைந்தார். போர் தோல்வியடைந்தது.

தமுக்கம் அரண்மனை

மறைவு

விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் ராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே அவரை சிறையிட்டார். 1706-ல் மங்கம்மாள் காலமானார்.

நினைவு

  • மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனை. இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில் தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன.
  • திருச்சியில் ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட அரண்மனை இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டது. இங்கு கண்டபெருண்டா எனப்படும் இருதலைக் கழுகு பராமரிக்கப்பட்டது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.