under review

வெள்ளாட்டி மசலா

From Tamil Wiki
Revision as of 23:35, 24 March 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Link Created: Proof Checked.)

வெள்ளாட்டி மசலா (1856), முதல் இஸ்லாமிய உரைநடை இலக்கியம். இஸ்லாம் சமய மார்க்கச் சட்டங்களை வினா-விடை அமைப்பில் கூறுகிறது. 'வெள்ளாட்டி' என்பதற்குப் ‘பணிப்பெண்’ அல்லது ‘அடிமைப்பெண்’ என்பது பொருள். இதனை இயற்றியவர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதர் லெப்பை ஆலிம் ஹாஜி.

பதிப்பு, வெளியீடு

வெள்ளாட்டி மசலாவின் முதல் பதிப்பு பொயு 1856-ல் வெளியானது. வெள்ளாட்டி மசலாவின் இரண்டாம் பதிப்பு, 1879-ல், ‘தவத்துது என்னும் வெள்ளாட்டி மசலா மறுமொழி வசனம்’ என்னும் பெயரில் வெளிவந்தது. இந்நூலை கீழக்கரை செய்கப்துல் காதிர் பதிப்பித்தார். மூன்றாவது பதிப்பு 1884-ல், ’வெள்ளாட்டி மசலா’ என்ற தலைப்பில், அப்துல் அஜீஸ் சாஹிப்பால் பதிப்பித்து வெளியிடப்பட்டது. 1917-ல் வெளியான நான்காம் பதிப்பு, ’வெள்ளாட்டி மசலா மறுமொழி விலாசம்’ என்ற பெயரில் வெளியானது. இதனை முகம்மது லெப்பை சாஹிப் பதிப்பித்து வெளியிட்டார். ஐந்தாவது பதிப்பு, 1928-ல், ‘துவத்திது வெள்ளாட்டி மசலா’ என்ற தலைப்பில் காயற்பட்டணம் கண்ணகுமது மகுதூமுகம்மதுப் புலவரால் இயற்றப்பட்டு, சென்னை இட்டா பார்த்தசாரதி நாயுடு & சன்ஸால் பதிப்பிக்கப்பட்டது. ஆறாவது பதிப்பு, 1953-ல், ‘தவத்துது என்ற வெள்ளாட்டி மஸ்அலா ஹதீது வசனம்’ என்ற தலைப்பில் வெளியானது.

ஆசிரியர் குறிப்பு

வெள்ளாட்டி மசலா நூலை இயற்றியவர், ஷெய்கப்துல் காதர் லெப்பை ஆலிம் ஹாஜி ஆவார். இவர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்.

நூல் அமைப்பு

‘மசலா’ என்பது அரபி மொழிச்சொல்லான ‘மஸ்லா’ என்பதன் தமிழ் வடிவம். இதற்கு கேள், விசாரி, தெளிவுபெறு என்று பல பொருள்கள் உள்ளன. மசலா என்ற சொல், வினா-விடை வடிவத்தைக் குறிப்பது. மார்க்க அறிஞர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி - பதில்களின் தொகுப்பே மசலா.

இஸ்லாமியத் திருமறையாகிய திருக்குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகத்தின் நல்லுரைகளான ஹதீஸ்களிலிருந்தும் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் 550-ஐத் தேர்ந்தெடுத்து, முதலில் அச்சிட்டு வெளியிட்டதாகவும் பின்னர் முகையித்தீன் - இப்ன - அறபி முதலான மார்க்க அறிஞர் ஐவரின் கருத்துகளில் 119-ஐ எடுத்துச் சேர்த்து, 669 மசலாக்களுடன் நூல் வெளி வருவதாகவும், நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் உள்ள மூன்று மசலாக்களில், வெள்ளாட்டி மசலாவே முதலிடம் பெறத்தக்கது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கதை

பகுதாது (பாக்தாத்) நாட்டிலுள்ள தாறுஸ்ஸலாம் எனும் நகரில் வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவருக்குக் குழந்தைப்பேறு இல்லை. இறையருளால் நீண்ட காலத்திற்குப்பின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. முதுமைப் பருவத்தில் குழந்தை வாய்க்கப்பெற்ற அவர், அக்குழந்தைக்குப் 'பதுறுஸ்ஸமான்' எனப் பெயரிட்டார். அறிவிலும் ஆற்றலிலும் ஒழுக்கத்திலும் மார்க்கசீலத்திலும சிறந்தவனாக அவனை வளர்க்க விரும்பினார். அதற்காக ஆற்றலில், அழகில் நிகரில்லாதவளாகவும், அறிவிற் சிறந்தவளாகவும் உள்ள பணிப்பெண் ஒருத்தியை தேடினார்.

இறுதியில் அவர் விரும்பிய தன்மைகள் அனைத்தும கொண்ட ஐந்து வயதுப் பணிப் பெண்ணை வணிகர் ஒருவர் மூலம் பெற்றார். அவளுக்குத் 'தவத்துது’ எனப் பெயரிட்டுத் தன் மகனை வளர்க்கும் வெளளாட்டிப் பெண்ணாக அமர்த்திக் கொண்டார். வெள்ளாட்டி என்பதற்குப் ‘பணிப்பெண்’ அல்லது ‘அடிமைப்பெண்’ என்று பொருள். உணவும் உறையுளும் கொடுத்து இளைய தலைவியைப்போல் இருத்திக்கொள்ளும் பணிப்பெண்ணே வெள்ளாட்டி.

அவ்விளம் சிறுமி மார்க்க ஞானம் முழுவதையும் பிற துறை அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் கற்க வழிவகுத்தார். அப்பெண்ணின் உதவியால், பதுறுஸ்ஸமானும் பல்துறை அறிவு பெற்றவனானான்.

தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்த செல்வர் தன் மகன் பதுறுஸ்ஸமானை அழைத்து எல்லாவகைக் குணச் சிறப்பும் அறிவுத் தெளிவும் மார்க்க ஞானமும் நிரம்பப் பெற்ற பணிப் பெண்ணாகிய தவத்துது வெள்ளாட்டியை ஏற்றுக் கொள்ளுமபடி பணித்தார். ஆனால், பதுறுஸ்ஸமான் அதற்கு மாறாகத் தன் தந்தையின் இறப்புக்குப் பின் தவறான போக்கால் செல்வம் அனைத்தையும் இழந்து வறியவனானான்.

தவத்துது வெள்ளாட்டியிடம் அவன் ஆறுதல் தேட, அவள் தன்னை சுல்தான் ஹாரூன் ரஷீதிடம் ஒப்படைத்து அதற்குப் பதிலீடாக பதினாயிரம் பொற்காசுகள் பெற்று நல்நிலை எய்துமாறு கூறினாள் பதுறுஸ்ஸமான் அவளை சுல்தான் ஹாரூன் ரஷீதிடம் அழைதுச் சென்றான்.

சுல்தான், அவளது அபார அறிவையும் திறமையையும் தான் வைக்கும் சோதனையில் நிரூபித்தால் கேட்ட பொன்னைக் கொடுப்பதாகக் கூறினார். நான்கு பேரறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கொண்டு அவளைச் சோதிக்க ஏற்பாடு செய்தார். அந்நான்கு உலமாக்கள் கேட்ட 669 கேள்விகளுக்கும் உரிய தக்க பதில்களை அவள் அளித்தாள்.

சுல்தான், வெள்ளாட்டி பணிப்பெண்ணின் பரந்துபட்ட இஸ்லாமிய மார்க்க ஞானச் செறிவையும் சொல் திறனையும் பாராட்டி பதுறுஸ்ஸமான் கேட்ட பதினாயிரம் பொன்னை அளித்ததுடன் தவத்துது வெள்ளாட்டியையும் பதுறுஸ்ஸமானுக்கே பரிசாக வழங்கினார். தவத்துது வெள்ளாட்டியும் பதுறுஸ்ஸமானும் மணவினை நிகழ்த்தி மகிழ்வோடு வாழ்ந்தனர்.

-என்பதே வெள்ளாட்டி மசலா நூலின் கதை.

உள்ளடக்கம்

இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிக் கொணரும் வகையில் ‘வெள்ளாட்டி மசலா’ நூல் அமைந்துள்ளது. இந்நூல் மார்க்கக் கருத்துகளை மட்டுமே கூறுகிறது. இந்நூலில் 669 வினாக்களுக்கு விடை கூறப்பட்டுளளது.

முதல் உலமா ஷெய்கு இப்றாஹீம் என்பவர் 134 மசலாக்களை (கேள்விகளை) வெள்ளாட்டிப் பணிப்பெண்ணிடம் கேட்க, அவள் அதற்குச் சரியான பதில்களைக் கூறியதால் அவள் அறிவார்ந்தவள் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து இரண்டாவது உலமா ஷெய்கு அஹமது, 174 மசலாக்களைக் கேட்டார். மூன்றாவது உலமாவான ஷெய்கு ரஹ்மத் 176 மசலாக்களையும், இறுதியாக ஷெய்கு அப்துல்லா கரீப் 185 மசலாக்களையும் தவத்துது வெள்ளாட்டியிடம் கேட்க, அவள், அனைத்திற்கும் திறம் பட விடையளித்துத் தன் அறிவாற்றலையும் மார்க்க ஞான அறிவையும் நிரூபித்தாள்.

நூல் முழுவதும் உலமாக்கள் கேட்கும் கேள்விகள் ‘சுவால்' என்றும், தவத்துது அளிக்கும் பதில்கள் ‘ஜவாபு’ என்றும் குறிக்கப்பட்டன. அரபி மொழியில் ‘சுவால் என்பதற்கு ‘கேள்வி’ என்பதும் ‘ஜவாபு’ என்பதற்கு ‘பதில்’ என்பதும் பொருள்.

இலக்கிய இடம்

வெள்ளாட்டி மசலா நூல் இஸ்லாமிய நெறி முறைகளை திருக்குர்ஆன், ஹதீது அடிப்படையிலும் நபிமார்களின் வாழ்க்கை வழியாகவும் எடுத்துக் கூறுகிறது. நான்கு உலமாக்கள் விடுக்கும் வினாக்களும் அதற்குத் தவத்துது வெள்ளாட்டி தரும் பதில்களும் ஆய்வாளர்களால் இஸ்லாமியத் தகவல் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன.

மசலா இலக்கியத்தில் உள்ள ஆயிரம் மசலா, நூறு மசலா, வெள்ளாட்டி மசலா என்ற மூன்று நூல்களில், கேள்வியும் பதிலுமாக உரைநடை வடிவில் தோன்றிய முதல் உரைநடை இலக்கியமாகவும், காலத்தால் தோன்றிய இரண்டாவது இலக்கிய வடிவமாகவும் (முதல் மசலா நூல் – ஆயிரம் மசலா) வெள்ளாட்டி மசலா நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.