நீலகண்டன் - ஓர் சாதி வேளாளன்

From Tamil Wiki
நீலகண்டன் ஒரு சாதிவேளாளன்

நீலகண்டன் -ஓர் சாதி வேளாளன் (1925) இலங்கையில் எழுதப்பட்ட தொடக்க கால நாவல்களில் ஒன்று. இந்நாவலை எழுதியவர் ஈழத்து மு.வரதராசனார் என அழைக்கப்பட்ட இடைக்காடர்.

எழுத்து, பிரசுரம்

இடைக்காடர் இந்நாவலை 1925ல் எழுதி வெளியிட்டார்.இரண்டு பாகங்களைக் கொண்ட ’சித்த குமாரன்’ என்னும் நாவலையும் 1925-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். இடைக்காடர் ஓர் உயர்நிலை பட்டதாரி. தன் காலகட்டத்து ஐரோப்பிய தத்துவத்தை கற்றவர். யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். இந்நாவல்களை மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்கவும் இந்து, சைவப் பண்பாட்டின் மேன்மையை விளக்கவுமே எழுதினார். இடைக்காடு இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாராச்சிப் பகுதியிலுள்ள ஒரு கிராமம்.இடைக்காடர் இவ்வூரைச் சேர்ந்தவர். இடைக்காடர் ஆறுமுக நாவலரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். சைவ மீட்புக்கொள்கைக்காக போராடியவர். இவர் எழுதிய சித்தகுமாரன் (1925) யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் வெளியிடப்பட்டது.சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று பாதங்களையும் ஒட்டி எழுதப்பட்டது.

கதைச்சுருக்கம்

ஓர் உயர்சாதி ஆணுக்கும், தாழ்ந்தசாதிப் பெண்ணுக்கும் பிறந்த நீலகண்டன் தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இடறுவதையும், பின்னர் அவ்விடையூறுகளை வென்று சொத்துக்களைப் பெறுவதையும் நீலகண்டன், ஒரு சாதிவேளாளன் சித்திரிக்கின்றது.

இலக்கிய இடம்

நீலகண்டன் ஓர் சாதிவேளாளன் என்னும் நாவல் யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் அன்று இருந்த இந்து மீட்பு வாதத்தை பதிவுசெய்வதனால் முக்கியமானது என்று கருதப்படுகிறது ‘தர்க்கம், நியாயம், அர்த்தம், சித்தம், கணிதம், சீவம், தர்மம், சமயம், வியாகரணம் போன்ற பல்வேறு சாஸ்திரங்களையும் அலசியும் ஆராய்ந்தும் சம்பாஷ’க்கிற பாத்திரங்கள் இவரது நாவல்களில் சுற்றிவரும். மேனாட்டுத் தத்துவ வாதங்களிலும் பண்பாடுகளிலும் பரிச்சயம் கொண்டிருந்தும், அவற்றோடு மல்லுக்கட்டி, அவற்றை விடத் தமது தேசிய சிந்தனைகளும் பண்புகளும் சிறந்தவை என்று தருக்கமிட்டு, அவற்றைக் கட்டிக்காக்க விரும்புகிற இவரது முனைப்பை, இவர் எழுதிய நாவல்களில் பரக்கக் காணலாம்’ என சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்.

இந்நாவல் ரவீந்திரநாத டாகூரின் கோரா ( 1880)ன் கருவை ஒட்டியது. இதே கரு கொண்ட நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’ (1979)என்னும் நாவல் அடுத்த தலைமுறையில் நிகழ்கிறது.

உசாத்துணை

ஈழத்தில் நாவல் வளர்ச்சி சில்லையூர் செல்வராசன்

https://noolaham.net/project/831/83023/83023.pdf