under review

சி.வி.வேலுப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:02, 23 March 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created/reviewed by Je)
சி.வி.வேலுப்பிள்ளை
சி.வி.வேலுப்பிள்ளை
சி.வி.வேலுப்பிள்ளை

சி.வி.வேலுப்பிள்ளை (1914-1984 ) இலங்கை மலையக இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என கருதப்படுகிறார். ஆசிரியர், இதழாளர், கவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல் செயற்பாட்டாளர், பாராளுமன்ற உறுப்பினர்,களப் போராளி. ‘மலையக மக்கள் கவிமணி’ என அழைக்கப்பட்டார்

பிறப்பு, கல்வி

இலங்கையில் வட்டக்கொடை பூண்டுலேயா பகுதியைச் சேர்ந்த மடக்கொம்புர தோட்டத்து பெரியக் கங்காணி கண்ணப்பன் வேலு சிங்கம் - தெய்வானையம்மாள் இணையருக்கு 14.செப்டெம்பர் 1914 அன்று சி.வி.வேலுப்பிள்ளை. இவரது முழுப்பெயர் கண்ணப்பன் வேலுசிங்கம் வேலுப்பிள்ளை. ஹட்டன் மெதடிஸ்ட் கல்லூரி, நுவரெலிய புனித கிருத்துவக் கல்லூரி, கொழும்பு நாளந்தா வித்தியாலயம் முதலியவற்றில் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

வேலுப்பிள்ளை கொழும்பு நாளந்தா வித்தியாலயம், பூண்டுலேயா தாகூர் பாடசாலை, தலவாக்கலை சுமண வித்தியாலயம், அட்டன் மெதடிஸ்ட் கல்லூரி முதலியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். சி.வி.வேலுப்பிள்ளை தொழிற்சங்கவாதியும் கவிஞருமான ஒரு சிங்களப் பெண்மணியை மணந்துகொண்டார் என்னும் வரி மட்டுமே அவரைப்பற்றிய நாற்பதுக்கும் மேற்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளில் உள்ளது.

அரசியல்

சி.வி. வேலுப்பிள்ளை தோட்டத்திlஏயே பிறந்து வளர்ந்து அங்குள்ள மக்களின் இன்னல்களை நேரில் அறிந்தவர். 1939 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘இலங்கை இந்தியன் காங்கிரசி’ல் இணைந்து அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராகச் செயற்பட்டார். இலங்கை சுதந்திரம் பெற்றபின் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் தலவாக்கொல்லைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலைநாட்டில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் பிரதிநிதிகளாக, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் இவரும் ஒருவர்

இலங்கைக்குச் சுந்தந்திரம் கிடைத்தபின் இலங்கைப் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கா கொண்டுவந்த பிரஜாவுரிமை சட்டத்திருத்தம் வழியாக( 1948- 18ஆம் இலக்கச் சட்டம்) 18. அக்டோபர்1948 அன்று பத்துலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்ற மக்களாக்கினார். அச்சட்டத்திற்கு எதிராக 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி முடிய இலங்கை பிரதம மந்திரியின் அலுவலகம் முன்பு 142 தினங்கள் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. 09.06.1952 அன்று நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட சி.வி.வேலுப்பிள்ளை உட்பட 11 நபர்களை காவல்துறையினர் குதிரைப்படையை ஏவித் தாக்குதல் தொடுத்தனர். சி.வி.வேலுப்பிள்ளை கைதுசெய்யப்பட்டார்.

1954ல் இங்கை இந்திய காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. சி.வி.வேலுப்பிள்ளை அதில் தொண்டைமான் தலைமை தாங்கிய இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பில் சேர்ந்தார்.தோட்ட உரிமையாளர்களான வெள்ளையர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை அங்கீகரிக்க மறுத்தனர். இதன் விளைவாக அக்கரைப்பத்தனை டயகம தோட்டத்தில் சி.வி. வேலுப்பிள்ளை தலைமையில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி முப்பத்தெட்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட காவல்துறை, போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது 18.05.1956 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் ஆபிரகாம் சிங்கோ என்ற இளம் தொழிலாளி களப்பலியானார். இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த தொழிற்சங்க சட்டத்தி திருத்தத்தின்படி, ஏழு பேர் சேர்ந்து தொழிற்சங்கம் அமைக்க அனுமதியும், பதிவு செய்யப்பட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அங்கீகரிக்கவும் அனுமதி கிடைத்தது. தொடர்ந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் சேர்த்து சங்கமாக்கியதுடன், சம்பளம், தொழில் பாதுகாப்பு, மாதச்சம்பளம், ஆண், பெண் சம சம்பளம் முதலியவைகளுக்காக தொடர்ந்து போராடி வெற்றி கண்டார்.

1960ல் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகி எழுத்துப்பணிகளில் ஈடுபட்டார். 1965ல் வி.கெ.வெள்ளையனுடன் இணைந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் பொறுப்பில் 1984ல் மறைவது வரை பணியாற்றினார். யட்டிந்தோட்டை உருளவள்ளி தோட்டத்தை இலங்கை அரசாங்கம் கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரித்து, அங்கு வாழ்ந்த தொழிலாளர்களை வெளியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து தொழிற்சங்கத் தலைவர் கே.ஜி.எஸ். நாயர் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தார்கள். அப்போராட்டத்திற்கு ஆதரவாக ஹட்டன் பகுதியைச் சேர்ந்த எண்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார் சி.வி.வேலுப்பிள்ளை.

இலங்கை அரசாங்கம் 1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, கண்டி மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கரை சுவீகரித்து, அத்தோட்டங்களில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை குடும்பத்தோடு வெளியேற்றியது. கொள்ளுப்பிட்டியிலுள்ள தேயிலை சபை மண்டபத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும கூட்டிய வேலுப்பிள்ளை அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடி தொழிலாளர்களை மீண்டும் தோட்டத்துக்குள் குடியேற்றச் செய்தார்.1977 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதழியல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆங்கில வெளியீடான ‘Congress News’ (காங்கிரஸ் நியூஸ்) இதழின் ஆசிரியராக செயற்பட்டார்.கதை என்னும் இலக்கிய இதழ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி என்ற மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து நடத்தினார்.

வீடற்றவன்

இலக்கியப்பணிகள்

ஹட்டன் மிஷனரி பள்ளியில் பயில்கையில் அங்கே சி.வி.வேலுப்பிள்ளைக்கு ஆசிரியராக இருந்த ஸ்டீஃபன் ஜோசப் ஓர் எழுத்தாளர், அவர் இலக்கிய அறிமுகத்தை உருவாக்கினார். கொழும்பு நாளந்தா வித்யாலயத்தில் கல்வி கற்கையில் அங்கே வருகைதந்த ரவீந்திரநாத் தாகூரிடம் தன்னுடைய கவிதை நாடகமான விஸ்வமாஜினியை அச்சிட்டு அளித்து வாழ்த்து பெற்றார்.

1960 முதல் தொழிற்சங்க செயல்பாடுகளில் இருந்து நான்காண்டுக்காலம் விலகியிருந்த காலத்தில் சி.வி.வேலுப்பிள்ளை நிறைய எழுதினார். தினகரன் வாரஇறுதிப் பதிப்பின் இலக்கியப்பக்கங்களின் ஆசிரியராக இருந்த க.கைலாசபதி அவரை இலங்கை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவருடைய தொடர்களை வெளியிட்டார். சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலம் தமிழ் இருமொழிகளிலும் எழுதினார்.

சி.வி.வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் தோட்டத்தொழிலாளர் வாழ்க்கையின் அவலங்கள் மற்றும் போராட்டங்களைப் பற்றிய பதிவுகள். தொழிற்சங்கத்துக்கான போராட்டங்களைச் சித்தரிக்கும் நாவல் வீடற்றவன். ’இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல அவர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த உண்மையைத்ததான் வீடற்றவன் நாவல் வெளிப்படுத்துகிறது என எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் தொ.மு.சி. ரகுநாதன் இந்நாவலில் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தேயிலைத் தேசம்’ (In Ceylon Tea Garden) உழைக்கும் மக்களைப் பற்றிய படைப்பு, புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலைகளை கவித்துவத்துடனும், யதார்த்தத்துடனும் காட்டுகின்றது. சி.வி.வேலுப்பிள்ளையின் உழைக்கப்பிறந்தவர்கள் தேயிலைத் தோட்ட மக்கள் பற்றிய ஒரு புனைவுத் தொகுப்பு. “‘உழைக்கப்பிறந்தவர்கள்’ தோட்ட உழைப்பாளர் சமூகத்தைப் பற்றியச் சித்திரங்கள். கர்ண பரம்பரை கதைகள், அவதானிப்புகள் என்பனவற்றை உள்ளடக்கிய சுவை மிகுந்த தொகுப்பாகும். ஆசிரியரின் அனுபவ அறிவு இவைகளுக்கூடாக இழையோடி நூலாகப் பின்னிப்பிணைந்து இனமரபு கட்டுரையாக உயர்வடைகிறது. இந்த நாட்டைத் தாய் நாடாகக் கருதும் எந்த மனிதருக்கும் உழைக்கப் பிறந்த தோட்டத்து மக்கள் உறவினர்களாக கருதப்படல் வேண்டும் என்ற எண்ணத்தை இத்தொகுப்பு ஏற்படுத்துகிறது” என சிங்கள எழுத்தாளர் மார்ட்டின் விக்ரமசிங்கா புகழ்ந்துரைத்துள்ளார். 1963 ஆம் ஆண்டு ஆசிய, ஆப்பிரிக்கா கவிதையின் முதலாவது தொகுப்பில் சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதையும் இடம் பெற்றுள்ளது.

சி.வி.வி.பெற்றோருடன்(காந்தி தொப்பி வைத்தவர் வேலுப்பிள்ளை)

நாட்டாரியல்

மலையக மக்கள் இந்தியக் கிராமங்களில் இருந்து சென்ற கல்வியறிவில்லாத உழைப்பாளிகள். அவர்கள் பண்பாடு நாட்டார் வாய்மொழிப் பாடல்களிலேயே இருந்தது. சி.வி. வேலுப்பிள்ளை மலைநாட்டுப் பாடல்களை தொகுத்து, அவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இதழ்களில் வெளியிட்டார்.’மலை நாட்டு மக்கள் பாடல்கள் ஒரு சமூகத்தின் உருவாக்கத்தையும், இலங்கையின் வரைபடத்தின் மத்திய பிரதேசத்தில் இருந்திருக்கக் கூடிய வெறும் வனாந்திரத்துக்குப் பதிலாக ஓர் யெவனமிக்க நந்தவனத்தை ரத்தப் பிரதேசத்தை உருவாக்கி இந்தப் பிரமாண்டமான மனித உழைப்பின் மகோன்னத வெற்றியைப் பெரும் அளவு பிரதிபலிக்கும் வரலாற்றுச் சாட்சிகளாகவும் இவை விளங்குகின்றன” என்று ‘மலைநாட்டு மக்கள் பாடல்கள்’ என்னும் தமது நூலின் பின்னுரையில் சி.வி. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

“சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலே கண்டிச் சீமைக்கு ஆள் கூட்டிய போது பிறந்த பாடல்கள் முதல், இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களையும் பிரதிபலிக்கும் பாடல்கள் - காதலிலிருந்து கடவுள் வழிபாடுவரை பல்துறைகளைச் சார்ந்த பாடல்கள் - இத் தொகுதியில் இடம் பெறுகின்றன" என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி க. கைலாசபதி, சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய ‘மாமன் மகனே’ என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.சமாதி

வாழ்க்கை வரலாற்றாளர்

‘மலைநாட்டுத் தமிழ் மக்கள் தலைவர்கள்’ என்ற தலைப்பில் 1958 ஆம் ஆண்டு ‘தினகரன்’ இதழில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார் சி.வி.வேலுப்பிள்ளை. அத்தொடர் கட்டுரையில் கோ. நடேசய்யர், அப்துல் அஸீஸ், ஜார்ஜ் மேத்தா, கே. இராஜலிங்கம், எஸ்.பி. வைத்தியலிங்கம், குஞ்சுபரிசண்முகம், டி. சாரநாதன், எக்ஸ் பெரைரா, எஸ். சிவனடியான், எஸ். தொண்டமான், சார்லஸ் ஆண்ட்ரூஸ் முதலிய தொழிற்சங்கத் தலைவர்கள் குறித்து எழுதியுள்ளார். மேலும், மலையகத்தில் ஏற்பட்ட தொழில் மாறுதல்கள் தொழிற்சங்க வளர்ச்சி, அரசியல் பாதிப்புகள், சமூக மாற்றங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியன குறித்து பதிவு செய்துள்ளார்.

‘மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப் போர்த் தளபதிகள்’ என்னும் தொடரை ‘தினகரன்’ இதழில் எழுதினார். அத்தொடரில் எஸ். சோமசுந்தரம், எஸ்.எம். சுப்பையா, ‘போஸ்’செல்லையா, கே. சுப்பையா, கே. குமாரவேலு, வி.கே. வெள்ளையன், டி.இராமானுஜம், சிவபாக்கியம் பழனிசாமி, எஸ். நடேசன், பி.தேவராஜ், கே.ஜி. எஸ். நாயர் என்ற பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் குறித்து எழுதியுள்ளார்

சி.வி.அஞ்சல்தலை

விருதுகள்

வீடற்றவன்’ நாவல் இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.மறைவு

மறைவு

சி.வி. வேலுப்பிள்ளை 19.11.1984 அன்று காலமானார்.

நினைவுகள்,நூல்கள்

இலங்கை அரசாங்கம் சி.வி. வேலுப்பிள்ளைக்கு நினைவு அஞ்சல்முத்திரை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ‘

சி வி.வேலுப்பிள்ளை நினைவு மலர்

நூல்கள்

  • விஸ்மாஜினி (இசை நாடகம்)
  • Way Farer (1949)
  • In Ceylon's Tea Garden (1952)
  • இலங்கை தேயிலைத் தோட்டத்திலே (தமிழாக்கம்: சக்தி பாலையா)
  • வீடற்றவன்
  • இனிப்படமாட்டேன்
  • வாழ்வற்ற வாழ்வு (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
  • எல்லைப்புறம் (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
  • காதல் சித்திரம் (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
  • நாடற்றவர் கதை (கட்டுரைகள்)
  • மலைநாட்டு மக்கள் பாடல்கள் (நாட்டார் பாடல்களின் தொகுப்பு)

உசாத்துணை

  1. சி.வி.வேலுப்பிள்ளை நினைவுமலர் இணையநூலகம்
  2. சி.வி.வேலுப்பிள்ளை- முருகபூபதி
  3. சி.வி.வேலுப்பிள்ளை பி.தயாளன்
  4. சி வி குடும்பப் புகைப்படம் கட்டுரை
  5. சி.வி.வேலுப்பிள்ளை, லெனின் மதிவாணம்
  6. https://www.namathumalayagam.com/2013/11/blog-post_21.html


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.