சுஜாதா
சுஜாதா ( (மே 1935 – 27 பெப்ருவரி 2008) ) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் புகழ்பெற்ற பத்திகளையும் எழுதியவர். தமிழ் உரைநடையில் புதுமைகளை புகுத்தி மாற்றத்தை உருவாக்கியவர். தமிழில் அறிவியல்கதைகளை எழுதிய முன்னோடி. அறிவியலை அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர். பழந்தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மின்னணுவியல் பொறியாளர். இந்திய வாக்குஇயந்திரத்தை கண்டுபிடித்த குழுவில் பணியாற்றியவர்.
சுஜாதா தமிழில் பொதுவாசிப்புக்குரிய தளத்தில் செயல்பட்டவர்களில் கல்கிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஆளுமை. கல்கியைப் போலவே எல்லா பக்கங்களையும் படிக்கச்செய்யும் நடை கொண்டிருந்தார். எல்லா தளங்களிலும் தொடர்ச்சியாக எழுதினார். மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும், அவரைப்போலவே எழுதும் வழித்தோன்றல்களின் வரிசையையும் கொண்டிருந்தார்.
பிறப்பு, கல்வி
சுஜாதாவின் இயற்பெயர் எஸ்.ரங்கராஜன். 3 மே 1935 ல் சென்னையில் ஆர்,ஸ்ரீநிவாஸையங்காருக்கும் கண்ணம்மாவுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். கட்டுமானப் பொறியியலாளராக இருந்த சுஜாதாவின் தந்தையின் உள்காடுகளில் பணிபுரியச் சென்றமையால் ஸ்ரீரங்கத்தில் தன் பாட்டியின் வீட்டில் தங்கிப் படித்தார். ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின் 1952- 1954 வரை திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்து பி.எஸ்.சி.(இயற்பியல்) பட்டம்பெற்றார். சென்னை எம்.ஐ.டி.யில் பி.டெக்.(மின்னணுவியல்) படிப்பை முடித்தார்.
தனிவாழ்க்கை
மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.